(Postgraduate) பதிவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Apply Board Inc நிறுவனம் நடத்திய ஆய்வொன்றில், 2024/25 கல்வியாண்டில் சர்வதேச மாணவர்களின் முதுகலை படிப்புக்கான சேர்க்கை ஒட்டுமொத்தமாக 10 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது பிரித்தானியாவிலுள்ள ஒட்டுமொத்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் 6 சதவீத வீழ்ச்சி ஏற்படப் பிரதான காரணமாக அமைந்துள்ளது.
இந்த நிலைமையினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியிருப்பது விசேட அம்சமாகும்.
பிரித்தானியாவில் முதுகலை பட்டப்படிப்புகளைத் தொடர இணைந்த இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை வருடாந்த அடிப்படையில் 36 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது நைஜீரிய மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள 39 சதவீத வீழ்ச்சிக்கு அடுத்தபடியாகப் பதிவான இரண்டாவது பெரிய வீழ்ச்சியாகும்.

பிரித்தானியாவின் குடிவரவு மற்றும் மாணவர் விசா கொள்கைகளில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களே இந்தத் திடீர் பின்னடைவுக்குக் காரணமாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக, 2023 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த சர்வதேச மாணவர்களின் 'சார்ந்திருப்போர்' (Dependents) தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டமை இதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
வரலாற்று ரீதியாக, பிரித்தானியாவிற்குச் செல்லும் இலங்கை மாணவர்களில் பெரும்பாலானோர் தமது குடும்ப உறுப்பினர்களையும் (Dependents) அழைத்துச் செல்லும் நோக்கம் கொண்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர்.
எனினும், தற்போதைய கடும் சட்டங்களின் கீழ் மாணவர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பல மாணவர்கள் தமது முதுகலை கல்வித் திட்டங்களைக் கைவிட்டுள்ளதாகக் கல்வி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் விளைவாக, சில மாணவர்கள் தமது கல்வித் திட்டங்களை மாற்றிக்கொண்டு, 'சார்ந்திருப்போர்' தொடர்பான சட்டக் கட்டுப்பாடுகள் இல்லாத ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளைத் (Research-oriented courses) தெரிவு செய்கின்றனர் அல்லது வேறு நாடுகளை நோக்கித் தமது கவனத்தைத் திருப்பியுள்ளனர்.
பிரித்தானியாவிற்கு வரும் சர்வதேச மாணவர்களில் பெரும்பான்மையானோர் முதுகலை படிப்புகளுக்காகவே வருகின்றனர். இது 2024/25 கல்வியாண்டில் மொத்த சர்வதேச மாணவர் சேர்க்கையில் 57 சதவீதமாகும். ஆனால், இந்தத் துறையிலேயே தற்போது பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் சுமார் 389,000 சர்வதேச மாணவர்கள் முதுகலை படிப்புகளுக்காக இணைந்துள்ள நிலையில், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 சதவீத வீழ்ச்சியாகும். அத்துடன் 2022/23 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீத வீழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.



