போதையற்ற நாட்டை உருவாக்குவோம் என பல வாக்குறுதிகளை
வழங்கி பல்வேறு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சிக்கு வந்த உடனேயே மதுபான அனுமதிப் பத்திரங்களை கொடுத்துள்ளனர். இதன் காரணமாக, பாடசாலை மட்டத்தில் மது ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு எதிராக தாய், தந்தையர் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு மதுபான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்த மதுபான அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும்.
இதுகுறித்து தினமும் பாராளுமன்றத்தில் பேசப்பட்டு வருகிறது. பாடசாலை மட்டத்தில் மது, போதைப்பொருள் மற்றும் புகைத்தல் பாடசாலைகளை ஆக்கிரமித்துள்ளது. இதனை முறியடிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். மது, போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றை ஊக்குவிப்பதற்கு இடமளிக்கக் கூடாது. இதற்கான வாயில்களை மூட வேண்டும். வாக்குரிமை இல்லாத 41 இலட்சம் பாடசாலை மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவே இந்த விடயத்தை இங்கு அடையாளப்படுத்திக் காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 188 ஆவது கட்டமாக 1,177,000 ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அனுராதபுரம், கலாவெவ, தம்புத்தேகம சோலம மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 15 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
நமது நாட்டின் மொத்த கடன் சுமை 100 பில்லியன் டொலர்கள் ஆகும். 2-3 ஆண்டு காலகட்டத்துக்கு கடனை செலுத்த வேண்டிய தேவை இல்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 2-3 ஆண்டுகளில், இருதரப்பு, பலதரப்பு, வெளிநாட்டு பிணைமுறி பத்திரதாரர்கள் மற்றும் உள்நாட்டு கடன் வழங்குநர்களுக்கு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். இந்நிலையில் இருந்து மீள்வதற்கு பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதற்கு ஒவ்வொரு துறையும் வலுவாக முன்னேற வேண்டும். அன்னிய நேரடி முதலீட்டை வலுப்படுத்த வேண்டும். இதற்கு திருட்டு ஒழிய வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைத்து அரச கொடுக்கல் வாங்கல்களும் வெளிப்படைத்தன்மையுடன் கையாளப்படும். 220 இலட்சம் மக்களை ஏமாற்றி, கொள்முதல் முறைக்கு புறம்பாக திருடும் நிலையே தற்போது நாட்டில் காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அரச நிதிக்கு மேலதிகமாக நன்கொடையாளர்களின் உதவிகளையும் பெற்று நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.