-
சிவில் மக்களை ஒடுக்கும் கருவியாகப் பயன்படுத்தாமல் PTA சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தல்.
-
ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) போன்ற சர்வதேச வரிச்சலுகைகள் பறிபோகும் அபாயம் குறித்து எச்சரிக்கை.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) மேலும் சிவில் மக்களை ஒடுக்கும் ஒரு கருவியாகத் தவறாகப் பயன்படுத்தாமல், அதனை உடனடியாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
அவ்வியக்கத்தின் பொதுச்செயலாளர் சுனில் ஜயசேகரவின் கையொப்பத்துடன் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியான சூழல் நிலவும் ஒரு நாட்டில் இவ்வாறான அடக்குமுறைச் சட்டங்களை தொடர்ந்தும் பேணிச் செல்வது, நாகரீகமடைந்த உலகத்தை நிராகரிப்பதற்குச் சமனாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய ஆட்சியாளர்களும் இச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் காரணமாக எதிர்காலத்தில் GSP+ போன்ற சர்வதேச வரிச்சலுகைகள் கூட இலங்கைக்கு அற்றுப்போகும் பாரிய ஆபத்து எழுந்துள்ளதாகவும், இதனால் ஒட்டுமொத்த குடிமக்களும் பாதிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய, இச்சட்டத்தை தாமதமின்றி ரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் அவ்வியக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அவ்வமைப்பு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது:
ஊடக அறிக்கை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் தாமதமின்றி ரத்துச் செய்ய வேண்டும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இலங்கையில் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாம் நாகரீகமடைந்த உலகத்துடன் இணைந்து செயலாற்றத் தயாராக இல்லை என்ற செய்தியையே உலகிற்கு வழங்கி வருகிறோம்.
இதன் தீமைகளைத் தொடர்ச்சியாக எடுத்துரைத்து வரும் நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம், இந்த அடக்குமுறைச் சட்டத்தை இனியும் தாமதிக்காமல் ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது.
ஒரு நாடாக இலங்கை பாரிய பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த சந்தர்ப்பத்தில் தற்காலிகமாக விதிக்கப்பட்ட ஒரு சட்டத்தை, அமைதியான சூழல் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் தொடர்ந்தும் நீடித்துக் கொண்டிருப்பது சிவில் மக்களின் உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் விடுக்கப்படும் பலத்த அச்சுறுத்தலாகவே கருத முடியும்.
கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும், தற்போதைய நிர்வாகமும் கூட இதனைத் தவறாகப் பயன்படுத்தி வருவது மகா வருத்தத்திற்குரிய விடயமாகும்.
இந்த மோசமான நிலைமையானது, சர்வதேச உலகம் இலங்கைக்கு எதிராகச் செயற்படுவதற்கு ஒரு காரணமாக அமையலாம் என்பதுடன், எதிர்காலத்தில் GSP+ போன்ற வரிச்சலுகைகள் கூட ஆபத்துக்குள்ளாகலாம்.
எனவே, நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் சூழலை உருவாக்கி, மக்களை ஒடுக்கும் கருவியாகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மேலும் நடைமுறையில் வைத்திருப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் கருத்தாகும்.
எனவே, எமது கௌரவ ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் நாம் மிக அவாவோடு கேட்டுக்கொள்வது யாதெனில், அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்தவாறே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இனியும் தாமதிக்காமல் ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறே ஆகும்.
அத்தோடு, அதனைச் செய்வதற்காக எடுக்கப்படும் மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் கூட இச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
சுனில் ஜயசேகர பொதுச்செயலாளர்,
நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம்.
2026.06.11


