உண்ணாவிரதம் இருந்தாலும் விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது!" – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கடுமையான நிலைப்பாடு.
FBI அறிக்கைகளை மூடிமறைத்து, அரசாங்கத்தின் தோல்வியைப் மறைப்பதற்காக நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்குள் நாடகமாடுகிறார்கள்! – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு.
கோட்டை நீதிமன்ற உத்தரவு வெளியான அதே நாளில் நாடாளுமன்றமும் அரசியல் அரங்கமும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு விவகாரத்தால் மீண்டும் சூடுபிடித்தது.
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் சதித்திட்டத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டிருந்ததுடன், அதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகளை வழிநடத்தியுள்ளார் என்பதற்கான தெளிவான மற்றும் உறுதியான விபரங்கள் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுரேஷ் சலேக்கு உண்மையில் சித்திரவதைகள் இழைக்கப்பட்டனவா என்பது குறித்துக் கண்டறிய கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் களுபோவில வைத்தியசாலையின் விசேட மருத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்ட இன்றைய தினமே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்திற்குள் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டமை விசேட அம்சமாகும்.
தாக்குதலுக்கு 3 வாரங்களுக்கு முன்னர் வரைபட ஆய்வு!
அமைச்சு அறிவிப்புகளின் கீழ் விசேட கூற்றொன்றை முன்வைத்த அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில்; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படுவதற்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர், சுரேஷ் சலே விசேட முஸ்லிம் குழுவொன்றை நீர்கொழும்பு பகுதியிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களுக்கு நேரடியாக அனுப்பி வைத்திருந்தார் எனக் குறிப்பிட்டார்.
அந்தத் தேவாலய வழிபாடுகளில் கலந்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கை (Crowd capacity), உள்நுழையும் மற்றும் வெளியேறும் வழிகள் உள்ளிட்ட மிக உணர்வுபூர்வமான விபரங்கள் மற்றும் வரைபடத் தரவுகள் (Grid data) இந்த வழிகாட்டலின் ஊடாகவே சேகரிக்கப்பட்டுள்ளன என்பது விசாரணைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஒரு குறிப்பிட்ட புலனாய்வுத் தகவல் வழங்குநரால் இந்தத் கொடூரத் தாக்குதல் குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அக்காலப்பகுதியில் இருந்த அதிகாரிகள் அதனைத் தடுப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்திருக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பிரித்தானியாவின் 'செனல் 4' (Channel 4) ஊடகத்திற்கு அசாத் மௌலானா வழங்கிய நேர்காணலில் வெளிப்படுத்திய விபரங்களும் இந்த விசாரணை ஆவணங்களுடன் ஒத்துப்போவதாகக் கூறினார்.
"வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்தியாக்கிரகங்களையோ அல்லது உண்ணாவிரதங்களையோ முன்னெடுத்தாலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் இந்த விசாரணை நடவடிக்கைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது" என்றும் அமைச்சர் உறுதியாக வலியுறுத்தினார்.


