சிக்கல் நிலைமை காரணமாக, அனைத்து அனுமதிப்பத்திரங்களையும் தற்காலிகமாக அவுத்திநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் கடத்தலைக் கட்டுப்படுத்துதல், மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் மற்றும் மணல் விலையைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக, அதிகாரிகள் மற்றும் மணல் வர்த்தகர்களுக்கு இடையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (10) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குவது புதிய சட்டக்கோவையின் ஊடாக மேற்கொள்ளப்படும் என இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உப்பாலி சமரசிங்க தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
"மணல் உரிமையாளர்கள் தரப்பிலிருந்து அவர்களின் பிரச்சினைகள், கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. மணல் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக, வறிய குடும்பங்களின் வீடமைப்புத் திட்டங்களுக்காக 3 கியூப் மணலை 50,000 ரூபாவிற்கும், அரசாங்கக் கட்டுமானங்களுக்காக 3 கியூப் மணலை 65,000 ரூபாவிற்கும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான போக்குவரத்துக் கட்டணமாக ஒரு கிலோமீற்றருக்கு 350 ரூபா அதிகரிப்பைப் பெற்றுத்தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது அதற்கான சட்ட ரீதியான விடயங்கள் சில புதிதாக வரைவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது மாவட்டச் செயலாளரின் இறுதி முடிவு மற்றும் மேற்பார்வையின் கீழ் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான புதிய விதிமுறைகள் தயாரிக்கப்படுவதாக அமைச்சரும் புவியியல் திணைக்கள பணிப்பாளரும் தெரிவித்தனர். இதன் மூலம் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் முறையான நடைமுறையொன்று உருவாகும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்."


