அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று (11) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் ஆரம்பமாகவுள்ளன.
இந்த பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்காவின் சார்பில் அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) உள்ளிட்ட குழுவினரும், ஈரானின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) உள்ளிட்ட குழுவினரும் ஏற்கனவே பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ளனர்.
இருப்பினும், பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் பில்லியன் கணக்கான ரியால் சொத்துக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி கூட்டுத் தாக்குதலொன்றை ஆரம்பித்திருந்தன. அதிலிருந்து 40 நாட்கள் நீடித்த மோதல்களுக்குத் தற்காலிக ஓய்வு அளிக்கும் வகையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் இரண்டு வார கால போர்நிறுத்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


