பிரச்சினை இல்லாத குழுவொன்று இல்லை. ஆனால், அந்தப் பிரச்சினைகள் பற்றி நாட்டு மக்கள் அறிந்துகொண்ட பின்னர்தான், அவை

சூடு பிடிக்கின்றன. இந்த வாரம் முழுவதும், பல்வேறு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற பிரச்சனைகள் தொடர்பில் அறியக்கிடைத்தன.

அதனால், இவ்வாரம் அரசியல் களம், மிகவும் சூடு பிடித்திருந்தது. சண்டைகள், வழக்குகள், ரகசிய சந்திப்புகள் என்பன பற்றிய செய்திகள், அரசியல் அரங்கில் இடம்பெற்றிருந்தன. கட்சி என்ற ரீதியில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகள் ஏற்பட்டாலும், தானொரு சுதந்திரக் கட்சியாளன் என்று சொல்லக்கூட முடியாத நிலைமைக்கு, சிறிசேனவின் வேலைகள் அமைந்திருந்தன.

இவ்வாரத்தின் முக்கிய அரசியல் செய்திகள் அனைத்தும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அடிப்படையாகக் கொண்டே உருவாகின. சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற அரசியல் பிரச்சனைகள், நாளுக்கு நாள் உக்கிரமடைய தொடங்கின.

தற்போதைய தலைவர் மைத்திரிபாலவுக்கு எதிராக, முன்னாள் தலைவர் சந்திரிகா நீதிமன்றத்தை நாடினார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திடீரென கட்சியின் நிறைவேற்று சபைக் கூட்டத்தை சனிக்கிழமையன்று நடத்தினார். நீதி அமைச்சர் விஜயதாசவை கட்சித் தலைமையகத்துக்கு வரவழைத்து, அமரவீர, துமிந்த, லசந்த ஆகிய மூவரின் பதவிகளையும் பறித்த மைத்திரிபால சிறிசேனவின் பெயர், அரசியல் அரங்கில் அடிக்கடி பேசப்படும்படி செய்தார்.

“தலைவர் இம்முறை, எந்த ஆட்டத்துக்குத் தயாராகிறாரோ” என்ற கேள்வி, அனைவர் மனங்களிலும் எழுந்தன. இந்த நாடகத்தை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமாயின், கடந்த காலங்களில் சுதந்திர கட்சி மற்றும் அது சார்ந்து எழுந்த பிரச்சனைகள் தொடர்பில் சுருக்கமாகப் பார்த்தால்தான் புரியும்.

சுதந்திர கட்சியை அடிப்படையாகக் கொண்டு கூட்டணி ஒன்றை அமைத்துக்கொள்ள, கடந்த மாதங்களில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தப் பணிகளில், சுதந்திர கட்சியின், விசேடமாக அமைச்சர் பதவிகளை வகித்தவர்களான லன்சா, அனுர யாப்பா தரப்புகள் போன்றே, சம்பிக்கவின் கட்சியும் முன்னிலை வகித்திருந்தது.

கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்தப் பணிகளுக்கு, சந்திரிகாவே தலைமைத்துவம் வகித்திருக்கிறார். வெற்றிலை சின்னம் அல்லது கதிரைச் சின்னத்தின் கீழ், புதிய கூட்டணி ஒன்றை மீண்டும் வெளிப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், வெற்றிலை சின்னம் விடயத்தில் திலங்கவுக்கும் அமரவீரவுக்கும் இடையில் பிரச்சினைகள் காணப்படுவதால், லசந்த அழகியவண்ண செயலாளர் பதவி வகிக்கும் கதிரைச் சின்னம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

இதோ! அந்த நேரத்தில்தான் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற பிரச்சனை எழுந்தது. அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றே, லன்சா தரப்பும் ரணிலுக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்று கூறியபோது, மைத்திரி அதை எதிர்த்துள்ளார். அப்போது, சந்திரகாவின் மனதில், சம்பிக்கதான் சரியானவர் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

தகவல்களின்படி, தான் ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்று மைத்திரிக்கும் ஓர் எண்ணம் இருந்ததாம். இவ்வாறாக, கூட்டணி தரப்புக்குள் மைத்திரி தொடர்பான பிரச்சனைகள் எழத் தொடங்கின. அதனால், கூட்டணிப் பணிகளில் இருந்து தான் விலகிக்கொள்வதாக, சந்திரிகா அறிவித்திருந்தார்.

மேலும், அனுர மற்றும் லன்சா தரப்பும் அந்த வேலையைக் கைவிட்டுவிட்டு, வெளிப் பயணங்களை மேற்கொள்ளச் சென்றுவிட்டன. பெசில் ராஜபக்ஷ இலங்கைக்கு வந்தவுடன், முதலில் பொதுத் தேர்தல் ஒன்றையே நடத்த வேண்டுமென்று வலியுறுத்தியதால், இந்தப் பிரச்சனை சற்று அடங்கிப்போனது.

இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பான கதை ஒன்றை கூறிய மைத்திரிபால சிறிசேன, சர்ச்சையை எழுப்பினார்.

அந்த விடயம் பற்றி எரியும்போது, கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்ற சதி நடக்கிறது என்ற தகவல், மைத்திரிக்கு தெரியவந்துள்ளது. இதனால், உடனடியாக சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபையைக் கூட்டிய மைத்திரிபால, அரசாங்கத்துடன் இணைந்துள்ள மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த திசாநாயக்க ஆகியோரை, கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கினார்.

ரணிலை ஜனாதிபதியாக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே, அவர்களை அப்பதவிகளில் இருந்து நீக்கிய மைத்திரிபால, ரகசியமாகச் சென்று ஜனாதிபதி விக்கிரமசிங்கவை சந்தித்தார். அதுவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கதைக்கு முன் பிணை பெற்றுக்கொள்வதற்காக.

எவ்வாறாயினும், அமரவீர தரப்பைப் பதவிகளில் இருந்து நீக்கும் தீர்மானத்துக்கு, நீதிமன்றத்தின் ஊடாக இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டது. அதற்கு இரண்டு தினங்களுக்கு பின்னர், மைத்திரிபாலவின் சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியை இடைநிறுத்துவதற்காக நீதிமன்றம் சென்ற சந்திரிகா, அதற்கான கட்டாணையையும் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறாகத்தான், சுதந்திர கட்சியின் குழப்பங்கள் படிப்படியாக இடம்பெற்றன. இதனால், டாலி வீதி தற்போது கலவர பூமியாகக் காணப்படுகிறது. மைத்திரிபாலவின் தலைமைத்துவ பதவி இடைநிறுத்தப்பட்டதை அடுத்து, டாலி வீதியில் உள்ள கட்சி தலைமையகத்துக்கு சென்ற லசந்த அழகியவண்ண, துமிந்த திசாநாயக்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர், ஊடக சந்திப்பொன்றை நடத்தினர்.

புதிய கூட்டணி ஒன்றை அமைக்க இருந்த இடையூறு தற்போது நீக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர்கள், கூட்டணி அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றனர்.

அமரவீர தரப்புக்கு, சந்திரிகாவின் ஆதரவு கிடைக்கின்றது என்ற விடயத்தில், எந்தவொரு சந்தேகமும் இல்லை. இதற்கிடையில், சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியை தனக்கு வழங்குமாறு, அதன் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இலங்கை அரசியலில், பெரும்பான்மையானோரின் தாயகமாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே விளங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதனால், அரசியல் ரீதியில் சிதறுண்டுள்ள பலருக்கும், சுதந்திர கட்சிதான் ஒரு குடியிருப்பாக காணப்படுகிறது.

அதேபோன்று, இலங்கையின் வெற்றிகரமான கூட்டணிகள் பலவும், சுதந்திர கட்சியை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இம்முறையும், அந்தக் கூட்டணியின் ஒத்துழைப்புடன், ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் முயற்சியில் நிமல் சிறிப்பால மற்றும் அமரவீர தரப்பு கடும் பிரயாத்தனம் காட்டுகின்றன.

இருந்தாலும், மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள ரணில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாமல் விலகிச் செல்வாராயின், சுதந்திர கட்சியை மையப்படுத்திய கூட்டணி ஊடாகவே பொது வேட்பாளராக ஒருவர் உருவாகுவார் என்பதே பலரதும் கருத்தாக இருக்கிறது.

இலங்கை அரசியலின் மேலும் ஒரு தீர்மானமிக்க இந்தத் தருணத்தில், சுதந்திரக் கட்சியின் பாத்திரம் குறிப்பிடத்தக்க இடத்தை பெறுவதற்கு இன்னும் இடம் உண்டு. ஒருவேலை, தற்போது திறக்கப்படும் கதவுகள் அதற்கானதாகத்தான் இருக்கும் என்று, குடியரசுக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், கூட்டணி அமைக்கும் பணிகளுக்கு முதலில் களமிறங்கிய லன்சா, அனுர யாப்பா ஆகியோர், புதிய கட்சி ஒன்றை பிடித்துக்கொண்டு, புதிய கேம் ஒன்றுக்கு இறங்கியுள்ளனர்.

“கூட்டணி அமைக்கச் சென்ற இரண்டு கட்சிகளும் அதாவது, கதிரை மற்றும் வெற்றிலைக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. அந்தப் பிரச்சனைகளை நிவர்த்திக்க இன்னும் பல மாதங்கள் ஆகும். ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன.

அதனால், அவற்றின் பின்னால் செல்வதில் எந்தப் பயனும் இல்லை. எனவேதான் நாங்கள் புதிய கட்சி ஒன்றிற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறோம்” என்று, நிமல் லன்சா கடந்த சில தினங்களுக்கு முன், ஊடகச் சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார். கிடைத்துள்ள தகவல்களின்படி, முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவருக்குச் சொந்தமான கட்சி ஒன்றை பெற்றுக்கொண்டு, அவர்களது பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், சுதந்திர கட்சி மீண்டும் எழுவதற்கு, சந்திரிகாவே வந்து பூஸ்ட் கொடுக்க வேண்டிய நிலைமை மீண்டும் ஏற்பட்டிருந்தது. 1994-ம் ஆண்டுக்கு முன்னரும், அதாவது 17 வருடங்களுக்குப் பின்னரும், சந்திரிகாவால்தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியது என்பதை நினைவுபடுத்திக்கொள்கிறோம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி