இலங்கையின் மீன்பிடித் தொழிலுடன் ஒன்றிணைந்த கரைவலை இழுப்பதற்குப் போதிய தொழிலாளர்கள் இன்மையால், அதற்கு மாற்றீடாக டிராக்டர்களில் பொருத்தப்பட்ட 'விஞ்ச்' (Winch) இயந்திரங்களைப் பயன்படுத்துவதை கடந்த டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறுத்த வேண்டும் என அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக கற்பிட்டி, முல்லைத்தீவு, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கரைவலை உரிமையாளர்களும் மீனவர்களும் கடந்த 5ஆம் திகதி முதல் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் சுமார் 900 கரைவலைத் தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். இந்தப் பிரச்சினை குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதுவரை தமக்கு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை வழங்கவில்லை என மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கரைவலைத் தொழில் முடங்கியுள்ளமையால் நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், சந்தைக்கு வரும் மீன்களின் அளவு குறைவடைந்துள்ளதால் எதிர்காலத்தில் மீன் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்; முன்னாள் அமைச்சர்களான மஹிந்த அமரவீர மற்றும் திலிப் வெதஆரச்சி ஆகியோர் முறையான ஆய்வுகளின்றி கரைவலைத் தொழிலில் இயந்திரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இது கடற்படுகையைச் சுரண்டும் 'டிராவலர்' (Bottom Trawling) மீன்பிடி முறைக்கு ஒப்பானது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், எந்தவொரு விஞ்ஞானபூர்வ அறிக்கையின் அடிப்படையில் அவர் இந்த ஒப்பீட்டைச் செய்கிறார் என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.
இந்த விவகாரம் தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசாந்த கஹவத்த கருத்துத் தெரிவிக்கையில், இது புதிய சட்டங்களை விதிப்பதல்ல, மாறாக 1984ஆம் ஆண்டு விதிமுறைகளின்படி கரைவலைத் தொழில் என்பது மனித உழைப்பை மட்டுமே கொண்ட ஒரு பாரம்பரியத் தொழில் என்பதை மீண்டும் நடைமுறைப்படுத்துவதாகும் எனக் குறிப்பிட்டார்.
இயந்திரங்களின் பயன்பாட்டால் பவளப்பாறைகள் மற்றும் மீன் இனப்பெருக்க இடங்கள் அழிவதாகவும், இது கடற்கரை அரிப்புக்கு வழிவகுப்பதாகவும் திணைக்களம் வாதிடுகிறது.
மறுபுறம், அகில இலங்கை கரைவலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜோசப் லோவ் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த வாதத்தை முற்றாக நிராகரிக்கின்றனர்.
"உலகம் முன்னேறும்போது நாமும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். போதிய தொழிலாளர்கள் இல்லாத நிலையில், விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தாவிட்டால் இத்தொழில் முற்றாக அழிந்துவிடும். இந்தியா, போர்த்துக்கல் போன்ற நாடுகளிலும் இம்முறை உள்ளது" என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விஞ்ஞானபூர்வ அணுகுமுறை அவசியம்: கடற்படுகையைச் சுரண்டும் 'பாட்டம் டிராவலிங்' முறை சூழலுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், கரையில் நிலையாக இருந்து இயந்திரம் மூலம் வலையை இழுக்கும் 'விஞ்ச்' முறை அவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து இதுவரை எந்தவொரு முறையான விஞ்ஞானபூர்வ ஆய்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதே எமது அவதானிப்பாகும்.
வரலாற்றுப் பாடம்: இலங்கையின் அண்மைய கால அரசியல் வரலாறு நமக்கு ஒரு கசப்பான பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது. விவசாயத்தில் இரசாயன உரங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்ற பொதுவான கருத்தை ஏற்றுக்கொண்டு, முறையான விஞ்ஞான ஆய்வோ அல்லது மாற்றுத் திட்டமோ இன்றி, ஓரே இரவில் உரத்தடையை அமுல்படுத்தினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. அதன் விளைவாக எழுந்த மக்கள் எழுச்சியால் அவர் ஜனாதிபதி மாளிகையின் பின்வாசல் வழியாகத் தப்பியோட வேண்டியிருந்தது.
எந்தவொரு நல்ல விடயத்தையும் முறையற்ற விதத்தில் அமுல்படுத்தினால் அது பாரிய அழிவைத் தரும். எனவே, 'விஞ்ச்' இயந்திரப் பயன்பாடு குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஞ்ஞானபூர்வ அறிக்கையைத் தயாரிப்பதே சிறந்ததாகும்.
அதனை விடுத்து, கோட்டாபய விவசாயிகளுக்குச் செய்த அநீதியை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மீனவர்களுக்குச் செய்வாரானால், தற்போதைய 'மாலிமா' (திசைகாட்டி) அரசாங்கத்திற்கும் அத்தகையதொரு கதி ஏற்படாது என்று யாரால் கூற முடியும்?


