இரண்டு வயதுடைய சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி கண்டி தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கேகாலை, அத்தனகொட - கரடுப்பன வத்தையைச் சேர்ந்த 2 வயது 11 மாதங்கள் மதிக்கத்தக்க சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கேகாலை கலகமுவ தொழிநுட்பக் கல்லூரியின் உபදේශகராகப் பணியாற்றும் சிறுமியின் தந்தை, கடந்த 2ஆம் திகதி காலை தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
கரடுப்பன வத்தையிலுள்ள தனது வீட்டிலிருந்து கேகாலை நோக்கிச் செல்லும் போதே மொலகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
அதிக சரிவுடைய வீதியில் இறங்கிச் சென்றபோது, வீதியில் வீழ்ந்து கிடந்த பலாப்பழம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் வழுக்கியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிளின் முன்பக்கத்தில் தலைக்கவசம் (Helmet) இன்றி வைக்கப்பட்டிருந்த சிறுமி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
உடனடியாக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (09) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி சேனசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களே உயிரிழப்பிற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பிலான மரண விசாரணையை கண்டி மரண விசாரணை அதிகாரி நோர்மன் கொஸ்தா முன்னெடுத்தார்.
உயிரிழந்த சிறுமி குடும்பத்தின் ஒரே பிள்ளையாவார். தனது மகளின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட தந்தை, கடும் அதிர்ச்சியடைந்த நிலையில் விசம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் கேகாலை வைத்தியசாலையின் 06ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
35 வயதுடைய பாலகிருஷ்ணன் தினேஷ் குமார் எனும் தந்தையின் அஜாக்கிரதையான மற்றும் கவனக்குறைவான வாகனச் செலுத்தலே இந்த விபத்திற்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கேகாலை பதில் தலைமையக பொலிஸ் பரிசோதகர் எஸ்.டி.கே.கே சேனநாயக்க மற்றும் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி நுவான் வெண்டர்லன் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


