சம்பவத்தில், சந்தேகநபர் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக கனேடிய அரச குதிரைப்படைப் பொலிஸார் (RCMP) தெரிவித்துள்ளனர். அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வீடொன்றிலிருந்து மேலும் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
டம்ப்ளர் ரிட்ஜ் இரண்டாம் நிலைப்பாடசாலையில் (Tumbler Ridge Secondary School) மேற்கொள்ளப்பட்ட இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இருவர் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்றுப் பிற்பகல் 1:20 மணியளவில் பாடசாலைக்குள் துப்பாக்கிதாரி ஒருவர் நுழைந்துள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், பாடசாலை வளாகத்தினுள் ஆறு சடலங்களையும் துப்பாக்கிதாரியின் சடலத்தையும் கண்டெடுத்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவர் ஹெலிகாப்டர் மூலம் அவசர சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட அதேவேளை, மற்றுமொருவர் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு இடத்தையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், அங்கிருந்த வீடொன்றிற்குள் மேலும் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கனேடியப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


