இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்த ஏழு விசேட வைத்திய நிபுணர்களுக்கு வழங்கப்பட்ட மன அழுத்தத்தைப் பார்க்கும் போது, அவர் மீண்டும் இந்நாட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் (CID) அரசாங்கமும் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பது குறித்து பலத்த சந்தேகம் காணப்பட்டமையாலேயே, வெளிநாட்டில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளத் தீர்மானிக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
"ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதன் மூலம், அந்த வைத்தியர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொண்டு செல்ல முடியாது. அத்தகைய பிரச்சினை அங்கு எழாது.
இவ்வாறான சந்தேகத்திற்குரிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட வேண்டிய சிறந்த முடிவு, இலங்கைக்கு வெளியே சென்று உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதாகும்.
யார் ஆட்சியில் இருந்தாலும் இவ்வாறான செயல்களைச் செய்யக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்," என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன, இன்று (10) கொழும்பு மல் வீதியில் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வஜிர அபேவர்தன மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
பல்வேறு சந்தர்ப்பங்களில் பொய்களைக் கூறியதால் இலங்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது
"ஒரு அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்யும் போது, மக்களுக்கு உண்மைகளைக் கூறும் போது, ஆட்சியைப் பிடிப்பதற்காக பொய் சொல்லாமல் இருப்பது மிகவும் முக்கியமானது. இன்று இலங்கைக்கு நேர்ந்துள்ள கதி என்னவென்றால் - அரசியல் கட்சிகள் தாம் நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக, தமது கட்சிக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, தாம் பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ ஆவதற்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொய்களைக் கூறியமையால் இலங்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதனால்தான் நாம் நினைவில் கொள்ள வேண்டும், தற்போதைய ஆட்சி இயந்திரமும் இலங்கை வரலாற்றில் அதிகப்படியான பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்ட ஒரு அரசாங்கமாக மாறியுள்ளது. இந்த அரசாங்கம் பொய் சொன்னதன் விளைவாகவே இன்று முழு நாடும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது; முழு நாடும் அழிந்து கொண்டிருக்கிறது.
78 ஆண்டுகளாக இந்நாட்டை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் நாட்டை கட்டியெழுப்ப உழைத்திருந்தாலும், ஒவ்வொருவரும் அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி என்ற கனவினால் நாட்டு மக்களை ஏமாற்றியும் மக்கள் ஏமாந்தும் பல்வேறு அரசாங்கங்களை அமைத்து நாட்டின் பொருளாதாரத்தை முற்றாகச் சீர்குலைத்துள்ளனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்."
பொய் சொல்வதை நிறுத்துவதே நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி
"அரசியல் கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கருத்துகளை முன்வைக்கும் போது, இனிமேலாவது பொய் சொல்வதை நிறுத்துவதே நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவியாகும். இதுவே பொதுமக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய கைமாறுமாகும். 2000ஆம் ஆண்டு ஆட்சி இயந்திரம் ஒரே வருடத்தில் சரிந்து விழுந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதற்குக் காரணங்கள்: ஒன்று பொய் சொன்னமை, இரண்டாவது அந்தப் பொய்களைத் தொடர்ந்து கொண்டு செல்ல முடியாமல் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமையால் 2001 டிசம்பரில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை நடத்த வேண்டியேற்பட்டது.
2001இல் நாட்டைப் பொறுப்பேற்ற போது ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒரு இலக்கு இருந்தது. அவர் உடனடியாகப் பொதுமக்களுக்குச் சலுகைகளை வழங்கி பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகளைக் குறைத்து, உண்மைகளைக் கூறி நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றார்.
ஆனால் 2004 ஏப்ரல் 10 அன்று ஜனதா விமுக்தி பெரமுன (JVP) முன்னின்று சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து அந்தப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பொய் சொன்னதால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததன் விளைவு
மீண்டும் 2015 ஜனவரியில் - அதாவது 2014ஆம் ஆண்டின் இறுதியில் - பொய் சொன்னதால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததன் விளைவாக, 2015 ஜனவரி 8 அன்று ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் நாட்டைப் பொறுப்பேற்றனர். அவர்களிடம் தெளிவான வேலைத்திட்டம் இருந்ததால் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலைகளைக் குறைத்தனர்.
-
150 ரூபாயாக இருந்த 92 வகை பெட்ரோல், 117 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.
-
158 ரூபாயாக இருந்த 95 வகை பெட்ரோல், 128 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.
-
111 ரூபாயாக இருந்த சாதாரண டீசல், 95 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.
-
138 ரூபாயாக இருந்த சுப்பர் டீசல், 110 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.
-
91 ரூபாயாக இருந்த மண்ணெண்ணெய், 65 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.
-
2400 ரூபாயாக இருந்த 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர், 1600 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.
ஜனவரி 8ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க தனது கடமையைச் செய்த விதம் இதுவாகும். ஒரு நாட்டைப் பொறுப்பேற்கும் போது தலைவருக்கு அதற்கான வேலைத்திட்டம் இருக்க வேண்டும். அதன்படி 2015 ஜனவரி 8க்குப் பின்னர் பொருளாதாரத் திட்டத்துடன் முன்னேறிச் சென்றார்.
எவ்வாறாயினும், இனவாதம் மற்றும் மதவாதம் தலைதூக்கியதன் விளைவாக 2019 ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய அரசாங்கம் தோல்வியடைந்து புதிய அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றது. அந்த ஆட்சியும் பொய் சொன்னதன் காரணமாக வீழ்ச்சியடைய, 2022 மே 12 அன்று ரணில் விக்கிரமசிங்க நாட்டை மீண்டும் பொறுப்பேற்க வேண்டியேற்பட்டது.
2022 மே மாதத்திலும் ரணிலிடம் இலக்கு இருந்தது
அவர் நாட்டைப் பொறுப்பேற்ற அந்தச் சந்தர்ப்பத்திலும் நிலவிய விலைகளைக் குறைத்து மக்களுக்குச் சலுகைகளை வழங்கினார். ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்கும் போது:
-
550 ரூபாய்க்குச் சென்றிருந்த 92 வகை பெட்ரோல், 370 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.
-
600 ரூபாயை நெருங்கியிருந்த 95 வகை பெட்ரோல், 420 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.
-
500 ரூபாயாக இருந்த சுப்பர் டீசல், 350 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.
-
460 ரூபாயாக இருந்த ஓட்டோ டீசல், 300 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.
-
5000 - 6000 ரூபாய்க்கு இடைப்பட்டிருந்த 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர், 3000 - 4800 ரூபாய்க்கு இடைப்பட்ட நிலைக்குக் கொண்டுவரப்பட்டது.
-
340 ரூபாயாக இருந்த மண்ணெண்ணெய், 250 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.
எனவே 2022 மே மாதத்தில் நாட்டைப் பொறுப்பேற்கும் போதும் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒரு தெளிவான இலக்கு இருந்தது."
இலக்கு இன்றி நாட்டைப் பொறுப்பேற்றமையே இந்த அழிவு
"2024 செப்டம்பர் மாதம் ரணில் விக்கிரமசிங்க அவர்கள், ஜனாதிபதி அநுர குமாரவிடம் நாட்டை ஒப்படைக்கும் போது இருந்த விலைகள் இன்று இவ்வாறு மாறியுள்ளன: 344 ரூபாயாக இருந்த ஒரு லீட்டர் பெட்ரோல் இன்று 398 ரூபாயாகியுள்ளது. 379 ரூபாயாக இருந்த 95 ரக சூப்பர் பெட்ரோல் இன்று 455 ரூபாயாக உயர்ந்துள்ளது. 2892 ரூபாய்க்கு ஒப்படைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 4765 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3600 ரூபாயாக இருந்த லாப்ஸ் எரிவாயு சிலிண்டர் இன்று 5700 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இலக்கு இன்றி நாட்டைப் பொறுப்பேற்றமையாலேயே இந்த நாட்டுக்கு இத்தகைய அழிவு ஏற்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நாடு வங்குரோத்து நிலையை அடைந்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒருபுறம் 92 புதிய சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அவற்றில் 70-க்கும் மேற்பட்டவற்றை நிறைவேற்றி, பொருளாதாரத்தை புதிய பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.
அவர் 2024 இல் பொருளாதார மாற்றச் சட்டத்தை நிறைவேற்றினார். 2023 இல் தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம், நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவுதல், ஊழல் எதிர்ப்புச் சட்டம் மற்றும் மத்திய வங்கிச் சட்டம் போன்ற பல முக்கியமான சட்டங்களை நிறைவேற்றி நாட்டை வழமைக்குக் கொண்டு வந்தார்.
ஆனால் செப்டம்பர் 21 ஆம் திகதி அவர் ஒப்படைத்த நாடு இன்று முழுமையாக அழிந்துவிட்டது. அவர் நாட்டை ஒப்படைக்கும் போது டொலர் ஒன்றின் மதிப்பு 290 - 291 ரூபாயாக இருந்தது. இன்று அது 320 ரூபாயாக உயர்ந்துள்ளது.
டொலரின் மதிப்பு ஒரு ரூபாயால் அதிகரித்தால், அது திறைசேரியின் கடன் சுமையில் 37 பில்லியன் ரூபாயை சேர்க்கும். அதன்படி இதுவரை திறைசேரியின் கடனில் 1.2 ட்ரில்லியன் ரூபாய் சேர்ந்துள்ளது.
ஜூன், ஜூலை மாதமாகும்போது இது 2 ட்ரில்லியன் வரை செல்லக்கூடும். பொருளாதாரச் சட்டத்தின் படி டொலரின் மதிப்பு 250 முதல் 275 ரூபாய்க்குள் இருந்திருக்க வேண்டும். எனவே, அரசாங்கமே நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் செய்யும் இந்த அழிவிலிருந்து நாட்டை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தீர்மானிக்க வேண்டும் என நினைவூட்ட விரும்புகிறேன்.
இதற்குப் பிரதான காரணம் பொய் சொல்வதாகும். இலங்கைக்கு ஒரு எதிர்காலம் தேவையென்றால் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். இனியும் பொய் சொன்னால் மக்கள் அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்குவார்கள். தற்போது அரசாங்கம் "யுத்தத்தினால் தான் இந்தப் பிரச்சினை" என்று கூறித் தப்பித்துக் கொள்கிறது. போர் நடந்தாலும் உலக நாடுகள் மக்களுக்குப் பல சலுகைகளை வழங்கியுள்ளன. சிங்கப்பூரில் போர் நடக்கிறதா என்று கூடத் தெரியாது, ஆனால் பொருளாதாரம் வலுவாக உள்ளது.
ஒரு வீட்டை நிர்வகிக்கும் போது அவசரத் தேவைக்காகத் தங்கம் அல்லது பணத்தை ஒதுக்கி வைத்திருப்போம். அதுபோல ஒரு அரசாங்கத்திடம் அவசர காலங்களில் நாட்டை எவ்வாறு இயக்குவது என்ற திட்டம் இருக்க வேண்டும். அத்தகைய திட்டம் இல்லாத ஆட்சியாளர்களால் நாட்டின் பொருளாதாரம் முற்றாக அழிக்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர். இந்தச் சிங்களப் புத்தாண்டு மற்றும் எதிர்கால விழாக்கள் அனைத்தும் அழிவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. பௌத்த தத்துவத்தின் படி பொய் சொல்வது பெரும் பாவமாகும். இவர்கள் எவ்வளவு பொய்களை மக்களிடம் பரப்பினார்கள் என்பது இவர்களது பேச்சுகளிலிருந்தே புரிகிறது. இவர்களிடம் பொறாமை, குரோதம், பழிவாங்கல் போன்ற பௌத்த தத்துவத்திற்கு முரணான வேலைத்திட்டங்களே இருந்தன.
இருப்பினும், இவர்களிடம் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. பௌத்த தத்துவத்தையும் பிற மதங்களையும் அவமதித்த இவர்கள், இன்று வஞ்சகமாகவேனும் மகா சங்கத்தினரை வணங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வஞ்சகமாகவேனும் புனித தாதுக்களைத் தலையில் சுமந்து செல்லவும், தேரர்களுக்கு மண்டியிட்டு வணங்கவும் நேர்ந்துள்ளது. அத்தகைய அதர்மமான சமூகத்திலிருந்தவர்களை இவ்வாறான நிலைக்குக் கொண்டு வந்ததே இந்த மக்கள் ஆணையின் ஒரு புண்ணிய சக்தி என்று நாம் கருத வேண்டும்."
இலங்கை மீண்டும் ஒரு காலனித்துவ நாடாக மாறுவதைத் தவிர்க்க முடியாது
"எனவே, இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் இலங்கை மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் இவ்வாறு பொய் கூறி நமது நாட்டின் அரசியல் அடித்தளத்தை அழித்தால், இலங்கை மீண்டும் ஒரு காலனித்துவ நாடாக (Colony) மாறுவதைத் தவிர்க்க முடியாது என்பதை நாட்டு மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 'உண்மை' என்ற தத்துவத்தின் பாதையில் பயணித்து இலங்கையைக் குணப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள நிலைமைக்கு யுத்தம் காரணமல்ல, தற்போதைய அரசாங்கம் பொய் கூறி முன்னெடுத்து வரும் வேலைத்திட்டமே காரணம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்னும் சில நாட்களில் இந்த ஆட்சி இயந்திரத்தின் நிர்வாகத்தை அரசாங்கமே முடிவுக்குக் கொண்டு வரும். இந்த அரசாங்கம் கூறி வரும் பொய்களின் விளைவாக, அரசாங்கமும் பொருளாதார ரீதியாக நாடும் வீழ்ச்சியடைந்து அழிவதைத் தவிர்க்க முடியாது."
ஊடகவியலாளர்களின் கேள்விகளும் வஜிர அபேவர்தனவின் பதில்களும்:
-
76 ஆண்டுகளாக இந்நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் நாட்டின் சுகாதாரத் துறையை மிகவும் சிறந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
-
ரணில் விக்கிரமசிங்கவிற்கு சிகிச்சை அளித்த விசேட வைத்திய நிபுணர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
-
உண்மையான ஆட்சியை உருவாக்க நாம் தவறிவிட்டோம். அது நாட்டுக்கு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேள்வி: இவ்வளவு காலம் நாட்டை ஆண்ட, ஆறு முறை பிரதமராக இருந்த, 2022 இல் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க, ஏன் இலங்கையில் சிகிச்சை பெறாமல் சிங்கப்பூருக்குச் சென்றார்? இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பு மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
பதில்: "நீங்கள் மிகவும் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்டீர்கள். அதற்கு நான் இவ்வாறு பதிலளிக்கிறேன். 2025 ஆகஸ்ட் 22 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் அளிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் வாக்குமூலம் அளித்த பின்னர், அவர் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆகஸ்ட் 22 காலை 9:30 மணியளவில் CID அலுவலகத்திற்குச் சென்ற ரணில் விக்கிரமசிங்க, சுமார் ஐந்து முதல் ஆறு மணி நேரம் - அதாவது மதியம் 1:30 மணி வரை அங்கு தடுத்து வைக்கப்பட்டார். அதன் பின்னர் மாலை 3:00 மணியளவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் சுமார் எட்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக இது குறித்த விசாரணைகள் நடந்தன. இரவு 8:00 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமலிருந்தது. இவ்வாறானதொரு சூழலில், இரவு 10:00 மணியளவில் அவரை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அந்தத் தீர்மானத்திற்குப் பிறகு, இரவு 10:30 மணியளவில் அவர் மெகசின் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறைக்குச் சென்ற போது இரவு 11:00 மணியிருக்கும். அந்த நேரத்தில் அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரித்ததால், சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டியேற்பட்டது. அடுத்த நாள், அதாவது ஆகஸ்ட் 23 மாலை, அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு விசேட வைத்திய நிபுணர்கள் தீர்மானித்தனர்.
இறுதியில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 26 அன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது அவர் வைத்தியசாலையில் இருந்ததால், 'சூம்' (Zoom) தொழில்நுட்பம் மூலமாகவே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். எவ்வாறாயினும், தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் தீர்மானித்தது. அவர் தனது ஆரோக்கியத்தை முறையாக நிர்வகித்து வாழ்ந்த ஒருவர் என்ற ரீதியில், இச்சம்பவங்களே அவரது உடல்நிலை மோசமடைய பிரதான காரணமாக இருந்திருக்கலாம்.
அவர் ஆகஸ்ட் 29 வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார். அன்றைய தினம் மாலை 3:00 மணியளவில் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார். ஆனால், ரணில் நீதிமன்றத்தை ஏமாற்றிவிட்டார் என்று செய்தித்தாள்கள் எழுதின. அதுமட்டுமன்றி, வைத்தியர்கள் பொய் அறிக்கை கொடுத்ததாகக் கூறி அவர்களையும் அவமதித்தனர்."
"அதுமட்டுமல்ல, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆறு நாட்கள் சிகிச்சை பெற்று அவர் வெளியேறிய பின்னரும், அங்கு அவருக்குச் சிகிச்சை அளித்த ஏழு விசேட வைத்திய நிபுணர்கள் அவ்வப்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டனர். அந்த வைத்தியர்களின் கௌரவத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்தும் அவர்கள் வழங்கிய அறிக்கைகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டன. இது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும். சிகிச்சை வழங்கிய காரணத்திற்காக அந்த ஏழு விசேட வைத்தியர்களும் CID-யிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்போது நீங்கள் கேட்டீர்கள், ரணில் விக்கிரமசிங்க ஏன் சிங்கப்பூருக்குச் சென்றார் என்று. அவருக்கு இவ்வளவு பாரதூரமான உடல்நலக் குறைவு இருப்பதாக அறிக்கை அளித்த அந்த ஏழு விசேட வைத்திய நிபுணர்களுக்கும் வழங்கப்பட்ட மன அழுத்தத்தைப் பார்க்கும் போது, அவர் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சைக்காக இந்நாட்டில் அனுமதிக்கப்பட்டால், இந்த அரசாங்கமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் எவ்வாறு நடந்துகொள்ளும் என்பது குறித்துப் பலத்த சந்தேகம் நிலவுகிறது.
இறுதியாக ஒரு விடயத்தை நினைவில் கொள்ள வேண்டும். 76 ஆண்டுகளாக மிகவும் சிறந்த இலவச சுகாதாரக் கட்டமைப்பையும், திறமையான வைத்தியர்களையும் உருவாக்க நம்மால் முடிந்துள்ளது. ஆனால், கடந்த 76 ஆண்டுகளாக ஒரு நல்ல அரசையும், நல்லாட்சியையும் உருவாக்க நாம் தவறிவிட்டோம்.
எனவே, ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதன் மூலம், அந்த வைத்தியர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இழுத்துச் செல்ல முடியாது; அத்தகைய பிரச்சினைகள் அங்கு எழாது. இவ்வாறான சந்தேகத்திற்குரிய சூழலில் எடுக்கப்பட வேண்டிய மிகச்சிறந்த முடிவு, இலங்கைக்கு வெளியே சென்று உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதாகும். யாருடைய ஆட்சியாக இருந்தாலும், இவ்வாறான செயல்களைச் செய்யக்கூடாது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்."


