சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இன்று (10) காலை புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.
பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பது திட்டமிடப்பட்ட தரப்பினரின் செயல் எனவும், இதற்காக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதோடு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் அங்கு தெரிவித்தார்.
கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர், பெண் கழிவறைகளில் பொருத்தப்பட்டிருந்த நீர்க்குழாய்கள் (Taps) முதல் நாள் கழற்றப்பட்டிருந்த நிலையில், அவை மீண்டும் பொருத்தப்பட்ட பின்னர் நேற்று (09) இரவும் இரண்டாவது தடவையாக கழற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதன்படி, இது ஒரு திட்டமிடப்பட்ட குழுவின் செயல் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இன்று இது குறித்த பாதுகாப்பு நிலைமை குறித்து கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும் அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன:
"இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, இங்குள்ள விடயங்கள் பற்றித் தெரியாமல் அறியாமையினால் செய்யப்படும் செயலாக இருக்கலாம். ஆனால் பெண் கழிவறைகளில் மட்டும் நீர்க்குழாய்களைத் திருகித் திருகி கழற்றுகிறார்கள் என்றால், அது ஒரு திட்டமிடப்பட்ட வேலை. எனவே தனிப்பட்ட ரீதியில் நானும் இங்குள்ள ஊழியர்களும் நம்புவது என்னவென்றால் - அரசியலில் நமக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் இது பொதுமக்களுக்குச் சொந்தமானது, பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டது. அவற்றுக்குச் சேதம் விளைவிக்க அனுமதிக்க முடியாது, இதற்கு எதிராக நாம் சட்டத்தை அமுல்படுத்துவோம். ஏனெனில் இரண்டாவது முறையாகப் பொருத்தப்பட்ட பின்னரும் மீண்டும் கழற்றப்படுகிறது என்றால்... நேற்று இரவு திருத்திய பின்னர் இன்று காலையும் மீண்டும் கழற்றப்பட்டுள்ளது. அதாவது இது திட்டமிட்டுச் செய்யப்படுகிறது.
சமூக ஊடகங்களிலும் சரி, வெளியிலும் சரி இதற்கு எவ்வளவு சேறு பூசப்பட்டது என்பது நமக்குத் தெரியும். சேறு பூசுவதில் கவலையில்லை, ஆனால் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டவற்றுக்குச் சேதம் விளைவிக்க வேண்டாம் என்பதே எமது கோரிக்கை. இலங்கை விமானப்படை 3 மாதங்களுக்கும் மேலாக இங்கு தங்கியிருக்க எம்முடன் உடன்பட்டுள்ளது. அதேபோல் இங்கு பாதுகாப்பு நிலைமையையும் நாம் பலப்படுத்துவோம். CCTV கமெராக்களின் எண்ணிக்கையில் குறைபாடு உள்ளது, அதனை அதிகரிக்கவும் நாம் எதிர்பார்க்கிறோம்.


