மற்றும் ‘டிட்வா’ சூறாவளியால் 2026 பொருளாதார வளர்ச்சி 3% ஆகக் குறையும்.
அரசாங்க நிதி மேலாண்மைச் சட்டத்தின் விசேட விதியைப் (Escape Clause) பயன்படுத்தி நிவாரணம் வழங்க கொழும்புக்கு அனுமதி; அஸ்வசும, எரிபொருள் மற்றும் உரம் மானியங்கள் தொடரும்.
ஆஸ்திரேலியாவின் சைபர் கொள்ளைக்கும் (Cyber Heist) IMF மன்னிப்பு; ஆனால் 2027 முதல் மீண்டும் 2.3% முதன்மை உபரியின் கடுமையான நிபந்தனை அமுல்.
மத்திய கிழக்கு பிராந்திய பதற்ற நிலை மற்றும் உள்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்திய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி போன்ற வெளிப்புறக் காரணிகளால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3% ஆகக் குறையும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எதிர்வு கூறியுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையின் நீடித்த நிதியுதவி வசதியின் (EFF) ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, 695 மில்லியன் டொலர் (200 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான) புதிய நிதித் தவணையை விடுவிக்க IMF இன் நிறைவேற்றுப் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனுடன் இலங்கைக்குக் கிடைத்துள்ள மொத்த IMF நிதியுதவி 2.4 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
இதில் உள்ள மிக விசேடமான அம்சம் என்னவெனில், வழக்கமான கடுமையான நிதிச் கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக, நிலவும் நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு இலங்கை அரசாங்கம் தற்காலிகமாக தனது நிதி இலக்குகளைத் தளர்த்திக் கொள்ள (Fiscal Flexibility) நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளமையாகும்.
91 பில்லியன் நிவாரணப் பொதியும் அஸ்வசுமவும்
2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4% என்ற பாரிய முதன்மை உபரியைப் (Primary Surplus) பெற்று இலங்கை காட்டிய சிறந்த நிதி ஒழுக்கத்தின் காரணமாக, அரசாங்க நிதி மேலாண்மைச் சட்டத்தில் உள்ள விசேட "தப்பிக்கும் விதியை" (Escape Clause) பயன்படுத்த அரசாங்கத்திற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இதன்படி, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக 91.8 பில்லியன் ரூபா பெறுமதியான விசேட நிவாரணப் பொதியைச் செயற்படுத்த IMF உடன்பாடு தெரிவித்துள்து.
இந்த நிவாரணப் பொதியின் கீழ் அஸ்வசும சமூக நலன்புரி கொடுப்பனவுகள், மீனவ மற்றும் விவசாய மக்களுக்கான எரிபொருள் மற்றும் உரம் மானியங்கள், அத்துடன் மின்சாரக் கட்டணத்திற்கான நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள முடியும்.
2.5 மில்லியன் டொலர் சைபர் கொள்ளைக்கும் விதிவிலக்கு
இந்த மீளாய்வின் போது, அண்மையில் மகா திறைசேரியில் இடம்பெற்ற சைபர் கொள்ளை (Cyber Heist) காரணமாக ஆஸ்திரேலியாவிற்குச் செலுத்தவிருந்த 2.5 மில்லியன் டொலர் கடன் தவணையைத் செலுத்தத் தவறியமைக்கான தொழில்நுட்பக் கோளாறுக்கும் IMF விசேட விதிவிலக்கு (Waiver of non-observance) ஒன்றை வழங்கியுள்ளது.
டொலர் இருப்புகளைக் கொள்வனவு செய்யும் வேகம் சற்றுக் குறைவடைந்தமை வெளிப்புறப் பாதிப்புகளால் ஏற்பட்டது என்பதை நாணய நிதியம் ஏற்றுக்கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், IMF விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தெளிவானது. இந்த 91.8 பில்லியன் ரூபா மக்கள் நிவாரணப் பொதியானது 100 பில்லியன் ரூபா எல்லையைத் தாண்டக் கூடாது என்பதுடன், அது 2026 செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
அதன் பின்னர், 2027ஆம் ஆண்டு முதல் மீண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% என்ற நடுத்தர கால முதன்மை உபரி இலக்கு கட்டாயமாகப் பேணப்பட வேண்டும்.
குறுகிய கால அதிர்ச்சிகளுக்கு முகம்கொடுப்பதில் நெகிழ்வுத்தன்மையைக் காட்டினாலும், நீண்ட காலக் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் கடன் நிலைத்தன்மை குறித்த நிபந்தனைகளைத் தளர்த்தப்போவதில்லை என்பதை IMF கொழும்பு அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக நினைவூட்டியுள்ளது.


