போர்க்கப்பல் மூழ்கியமை தொடர்பில் இழப்பீடு கோருவதற்கான சாத்தியக்கூறுகளை இலங்கை நிராகரித்துள்ளது. போர்க்கப்பல்களுக்கு எதிராக இழப்பீடு கோருவதற்கு சர்வதேச சட்டம் அனுமதிக்காது என்றும், அந்த கப்பலுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் (MEPA) தலைவர் சமந்த குணசேகர இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இராணுவக் கப்பல்கள் தொடர்பான சட்டக் கட்டமைப்பு இழப்பீடு கோருவதில் பெரும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
"சர்வதேச சட்டத்தின்படி எந்தவொரு போர்க்கப்பலிடமிருந்தும் இழப்பீடு கோர முடியாது" என அவர் தெரிவித்தார்.
இந்தக் கப்பலானது கடந்த மார்ச் 4 ஆம் திகதி, இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2026 சர்வதேச கப்பற்படை அணிவகுப்பில் கலந்துகொண்டு திரும்பிக்கொண்டிருந்தபோது, காலிக்கு தெற்கே சுமார் 40-50 கடற்படை மைல் தொலைவில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலொன்றினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நிகழ்ந்தாலும், நாட்டின் 12 கடற்படை மைல் எல்லைக்குட்பட்ட பிராந்திய கடற்பரப்பிற்கு வெளியே இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகளின் கடல்சார் சட்ட உடன்படிக்கையின் (UNCLOS) படி, இலங்கையின் பிராந்திய கடற்பரப்பு என்பது அதன் எல்லைக் கோட்டிலிருந்து 12 கடற்படை மைல் வரை மட்டுமே இறையாண்மையைக் கொண்டுள்ளது.
அதற்கு அப்பால் உள்ள பிரத்தியேக பொருளாதார வலயத்தில் (EEZ) கடல்சார் வளங்கள் மீது மட்டுமே நாட்டுக்கு உரிமை உண்டு. IRIS Dena மூழ்கிய சம்பவம் பிராந்திய கடற்பரப்பிற்கு வெளியே நடந்ததால், இது கடல்சார் போர் சட்டத்தின் (LoNW) கீழ் வருகின்றது.
சர்வதேச சட்ட நிபுணர் பேராசிரியர் ரோப் மெக்லாலின் கூற்றுப்படி, சர்வதேச ஆயுத மோதல்களின் போது (உத்தியோகபூர்வமாக போர் அறிவிக்கப்படாவிட்டாலும்), எதிரி நாட்டுப் போர்க்கப்பல்கள் சட்டப்பூர்வமான இராணுவ இலக்குகளாகக் கருதப்படுகின்றன.
நடுநிலை வகிக்கும் ஒரு நாட்டின் பிராந்திய கடற்பரப்பிற்கு வெளியே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவது சட்டப்பூர்வமானது என்பதால், இக்கப்பல் சட்டப்பூர்வமான இராணுவ இலக்காகவே பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இந்தக் கப்பல் மூழ்கியதால் இலங்கையின் தெற்கு கடற்கரையோரம் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் கவலைகளையும் குணசேகர நிராகரித்தார்.
"இந்தக் கப்பல் தொடர்பாக எந்தவொரு சுற்றுச்சூழல் மாசடைவும் பதிவாகவில்லை" என அவர் உறுதிப்படுத்தினார்.
கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து வந்த நாட்களில் ஹிக்கடுவ, தொடங்கடுவ மற்றும் ஹபராதுவ போன்ற பகுதிகளில் எண்ணெய் படலங்கள் மற்றும் சிதைவுகள் காணப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
இருப்பினும், அந்தச் சம்பவங்கள் IRIS Dena கப்பலுடன் தொடர்புடையவை அல்ல என்றும், மூழ்கிய ஈரானிய போர்க்கப்பலுக்கும் அந்த மாசடைவுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.


