பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தைகளை இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேயிலை வர்த்தகர் சங்கத்தின் (Tea Traders Association) தலைவர் லுசாந்த டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த இயற்கை அனர்த்தத்தினால் சுமார் ஒரு மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி தடைப்பட்டுள்ளது. இது உலகளாவிய ரீதியில் நிலவும் தேயிலைக்கான கேள்வியை (Demand) இலங்கை ஈடுகட்ட முடியுமா என்ற கேள்வியினை எழுப்பியுள்ளது.
போதிய விநியோகம் இல்லையெனில், சர்வதேச கொள்வனவாளர்கள் மாற்று நாடுகளை நோக்கித் திரும்பும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த 15 முதல் 20 ஆண்டுகால வரலாற்றை நோக்கும்போது, பாகிஸ்தான், எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யும் பிரதான நாடாக இலங்கை விளங்கியது.
ஆனால் இன்று அந்த சந்தைகளை இலங்கை இழந்துவிட்டது. இருப்பினும், தற்போது ஆண்டொன்றுக்கு சுமார் 265 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக லுசாந்த டி சில்வா சுட்டிக்காட்டினார்.
இலங்கை தற்போது சுமார் 140 நாடுகளுக்குத் தேயிலையை ஏற்றுமதி செய்கிறது. இதில் ரஷ்யா, ஈராக் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) ஆகிய நாடுகள் பிரதான கொள்வனவாளர்களாக உள்ளன.
2024ஆம் ஆண்டில் 245.7 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. 2025ஆம் ஆண்டில் அது 257.44 மில்லியன் கிலோகிராமாக (11.65 மில்லியன் கிலோகிராம் அதிகரிப்பு) உயர்வடைந்துள்ளது.
புதிய சந்தைகளை நோக்கி நகர்வது ஒரு சவாலான விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட அவர், சீனா ஒரு பாரிய சந்தையாக உருவெடுத்து வருவதாகத் தெரிவித்தார். 1.4 பில்லியன் சனத்தொகையைக் கொண்ட சீன சந்தையில், இலங்கை வெறும் 5 சதவீதப் பங்கினைப் பெற்றுக்கொண்டால் கூட, அது தேயிலைத் துறைக்கு பாரியதொரு திருப்புமுனையாக அமையும் என அவர் விவரித்தார்.


