இன்று (09) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.
இன்று காலை 8.00 மணியளவில் மூன்று வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்புத் தொகுதியிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ பரவிய போது ஒரு வீட்டில் மூவரும், மற்றைய வீட்டில் ஐவரும் இருந்துள்ளனர். தீ பரவுவதைக் கண்ட அவர்கள் உடனடியாக வீடுகளை விட்டு பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.
இதன் காரணமாக எவருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என திம்புல பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தீ விபத்தில் ஒரு வீடும் அங்கிருந்த அனைத்து உடைமைகளும் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், அதற்கு அருகிலிருந்த வீட்டிற்குப் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களும் பிரதேசவாசிகளும் இணைந்து கடும் முயற்சியின் மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத போதிலும், மின்க்கசிவு காரணமாக இந்தத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
திம்புல பத்தன பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


