அமெரிக்கா மற்றும் ஈரானின் 'நிதானம் மற்றும் புரிந்துணர்வை' பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர்.
போர்நிறுத்த அறிவிப்பால் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 13.6% சரிந்து 94.50 டாலராகப் பதிவு.
இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானில் நடைபெறும் என ஈரான் அறிவிப்பு.
ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தனது 'Truth Social' சமூக வலைதள கணக்கில் இட்ட பதிவொன்றில் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) ஊடாக போக்குவரத்தை அனுமதிக்க ஈரான் உடன்பட்டால், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் போர்நிறுத்தம் ஏற்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த போர்நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு டிரம்ப் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். அதில் பிரதான நிபந்தனையாக, ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும், உடனடியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் திறக்க ஈரான் உடன்பட வேண்டும். இது இரு தரப்பையும் பாதிக்கும் ஒரு "இருதரப்பு போர்நிறுத்தம்" (Double sided ceasefire) என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது அமெரிக்கா ஈரான் மீது நடத்தும் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளை இரண்டு வார காலத்திற்கு நிறுத்திவைக்க முன்மொழியப்பட்டுள்ளது. "ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க நான் ஒப்புக்கொள்கிறேன்," என அவர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் ஊடான பயணம் இரண்டு வாரங்களுக்கு பாதுகாப்பானது
ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் தாங்களும் போர்நிறுத்தத்திற்கு உடன்படுவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
அதன்படி, இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பாக பயணிக்க முடியும் என அவர் மேலும் கூறினார்.
தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் ஈரானிய ஆயுதப் படைகளும் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுத்தும் என அப்பாஸ் அரக்சி குறிப்பிட்டுள்ளார்.
போர்நிறுத்த அறிவிப்புக்கு மத்தியிலும் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டு வார போர்நிறுத்தத்தை அறிவித்த போதிலும், இன்று (8) அதிகாலை இஸ்ரேலிய இராணுவம் ஈரான் மீது தொடர் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் 'Channel 12' செய்திச் சேவையை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. இதில் ஈரானின் ஏவுகணை ஏவுதளங்களே முக்கிய இலக்குகளாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இன்று அதிகாலை மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் அபாயச் சங்கு (Siren) ஒலிகள் கேட்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தமது வான் எல்லைக்குள் நுழைந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை முறியடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த நாட்டு இராணுவ ஊடகங்கள் வாயிலாக அறிவித்துள்ளன.
பஹ்ரைன் தனது குடிமக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், சவுதி அரேபியா தனது அல்-கர்ஜ் (Al-Kharj) பகுதிக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் 10 முதல்
ஈரானின் உச்ச பாதுகாப்பு சபையினால் (Supreme National Security Council) பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிற்கு 10 அம்சங்களைக் கொண்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ளன.
போர் நிறுத்தத்திற்காக ஈரான் முன்வைத்துள்ள 10 அம்சத் திட்டம்:
-
ஈராக், லெபனான் மற்றும் ஏமனுக்கு எதிரான போரை முழுமையாக நிறுத்துதல்.
-
காலவரையறையின்றி ஈரானுக்கு எதிரான போரை முழுமையாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துதல்.
-
பிராந்தியத்தில் உள்ள அனைத்து மோதல்களையும் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருதல்.
-
ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறத்தல்.
-
ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உத்தியோகபூர்வ நடைமுறை மற்றும் நிபந்தனைகளை நிறுவுதல்.
-
ஈரானின் புனரமைப்புச் செலவுகளை ஈடுகட்ட இழப்பீடு வழங்குதல்.
-
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை முழுமையாக நீக்குவதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுதல்.
-
அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிகள் மற்றும் சொத்துக்களை விடுவித்தல்.
-
எந்தவொரு அணு ஆயுதத்தையும் வைத்திருக்க மாட்டோம் என ஈரான் முழுமையான உறுதிமொழி அளித்தல்.
-
இந்த நிபந்தனைகள் அங்கீகரிக்கப்பட்டவுடன் போர்நிறுத்தம் உடனடியாக நடைமுறைக்கு வரும்.
"ஈரானுக்கு கிடைத்த வெற்றி"
பாகிஸ்தானின் தலையீட்டுடன் எட்டப்பட்ட இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரானின் உச்ச பாதுகாப்பு சபை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக 'மெஹ்ர்' (Mehr) செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரானின் புதிய உயரிய தலைவர் ஆயதுல்லா மொஜ்தபா கமேனி (Ayatollah Mojtaba Khamenei) ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை "ஈரான் பெற்ற வெற்றி" என பாதுகாப்புச் சபை வர்ணித்துள்ளது.
போர் நிறுத்த முடிவுக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை சரிவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவித்ததையடுத்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்று காலை 5.45 மணி நிலவரப்படி, சந்தைத் தரவுகளின்படி:
-
WTI கச்சா எண்ணெய்: ஒரு பீப்பாய் விலை 95.47 டாலராகக் குறைந்துள்ளது. இது 17.48 டாலர் வீழ்ச்சியாகும் (15.48%).
-
பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய்: ஒரு பீப்பாய் விலை 92.84 டாலராகக் குறைந்துள்ளது.
-
மர்பன் (Murban) கச்சா எண்ணெய்: ஒரு பீப்பாய் விலை 106.51 டாலராகக் குறைந்துள்ளது. இது முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் 18.85% குறைவு என சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.


