பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காக, அக்கட்சியின் முன்னாள் எம்.பி.க்கள் குழுவொன்று கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் தயாராகி வருகின்றனர்.
இவர்களது இந்த சட்ட நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழுவொன்று ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாங்கள் மாகாண சபை உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பணியாற்றிய காலத்தில் எமது முழுச் சம்பளத்தையும் கட்சி நிதிக்கு வழங்கியதாகவும், அவ்வாறு பெறுவது சட்டவிரோதமானது என்றும் குறித்த முன்னாள் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் செயலாளரும், ஜே.வி.பி-யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரேம்சிறி மானகே, கட்சி நிதிக்கு வழங்கப்பட்ட தமது பணத்தை மீளப் பெறுவதற்காகத் தொடர்ந்தும் போராடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான ரூபாய் சம்பளப் பணம் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கட்சி நிதியினால் பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், அவ்வாறு பணத்தைப் பெற்றுக்கொண்டு தற்போது ஓய்வூதியத்தையும் இரத்துச் செய்வது பாரிய அநீதியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் 17ஆம் திகதி விவாதத்திற்கு
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் 17ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு அன்றைய தினமே நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாகச் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.
இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 512 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் இல்லாது போகும். இதில் முன்னாள் உறுப்பினர்களின் வாழ்க்கைத் துணைகள் (மனைவி அல்லது கணவர்) 150 பேரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது, கடந்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையாகும்.


