வகையில் கொள்கை ரீதியாக அதீத அபிலாஷைகளைக் கொண்டதாக அமைந்திருந்தது.
இலங்கை அரசியலை ‘அடையாள அரசியலில்’ (Identity Politics) இருந்து ‘அபிவிருத்தி அரசியலை’ (Development Politics) நோக்கி நகர்த்துவதன் அவசியத்தை ஜனாதிபதி தனது உரையில் வலியுறுத்தியிருந்தார். இது பாராட்டுக்குரிய ஒரு விடயமாகும்.
எனினும், அந்த அபிலாஷைகளின் யதார்த்தமானது அவர் தற்போது முன்னெடுத்து வரும் ஆட்சியிலேயே தங்கியுள்ளது. கடந்த ஒரு வருட கால ஜனாதிபதியின் ஆட்சியிலோ அல்லது இனிவரும் அவரது ஆட்சியிலோ இத்தகைய அபிலாஷைகளை பிரதிபலிக்கும் வகையிலான ஒரு பண்பேனும் காணப்படவில்லை. இது, "பேச்சு பல்லக்கிலே, ஆனால் பயணம் கால்நடையிலே" என்ற பழமொழியை மீண்டும் மீண்டும் எமக்கு மெய்ப்பிக்கின்றது.
அடையாள அரசியலில் இருந்து யதார்த்த அரசியலுக்கு...
அடையாள அரசியலில் இருந்து நடைமுறைச் சாத்தியமான அரசியலுக்கு மாறுவது குறித்த ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கலாம். ஆனால், நடைமுறையில் ஜனாதிபதியின் ஆட்சி இன்னும் அடையாள அரசியலுக்குள்ளேயே (Symbolism) சிக்கியுள்ளது.
எனவே, "முன்னோர்களின் இரத்தம் மற்றும் வியர்வையை" நினைவு கூருவதில் இருந்து 2026 ஆம் ஆண்டளவில் பொருளாதார சுபீட்சத்தை எட்டுவது வரையிலான அவரது நிலைமாற்றக் கருத்துக்களில் பெரும் இடைவெளி காணப்படுகின்றது. தற்போது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அனுபவிக்கும் பொதுவான துயரங்களையும் வலிகளையும் ஜனாதிபதி தனது உரையில் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
ஜனாதிபதி தனது உரையின் இறுதியில், "உங்களுக்கு வேகமாகச் செல்ல வேண்டுமானால் தனியாகச் செல்லுங்கள், ஆனால் வெகுதூரம் செல்ல வேண்டுமானால் இணைந்து செல்லுங்கள்" என்ற ஆபிரிக்கப் பழமொழியைக் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் மக்களின் துன்பங்களைப் போக்குவது என்பது தனது ஆட்சியினால் மாத்திரம் தனித்து செய்யப்படக்கூடிய ஒன்றல்ல என்பதையே அவர் உணர்த்துகின்றார்.
மக்கள் தங்களது கஷ்டங்களுக்கு விரைவான தீர்வை வழங்கும் ஒரு ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள். தமது துயரங்களில் இருந்து மீள்வதற்கு ஆட்சியாளர்களின் பலமான தலைமைத்துவம் இன்றி தம்மால் மட்டும் முடியாது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால் ஜனாதிபதியோ, துன்பங்களில் இருந்து விடுபட மெதுவான ஒரு நீண்ட பயணத்திற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றார்.
இவ்வாறான பின்னணியில், விரைவான அபிவிருத்திக்குத் தேவையான தலைமைத்துவப் பொறுப்பை ஜனாதிபதி கைவிட்டுள்ளதாகவே தோன்றுகின்றது. இதன் காரணமாக, ஒரு தேசிய விழாவில் மக்கள் எதிர்பார்க்கும் அந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பு (Emotional resonance) ஜனாதிபதியின் உரையில் இடம்பெறவில்லை.
ஜனாதிபதி தனது உரையில் பௌதீக வளங்களை விட 'மனித வளத்திற்கு' முன்னுரிமை அளிப்பது பற்றிப் பேசினார். ஆனால், அதனை "எவ்வாறு" சாதிப்பது என்பது குறித்த தெளிவற்ற தன்மையே அவரது உரையில் காணப்பட்டது. கல்வியில் ஒரு "மாற்றத்தை" ஏற்படுத்துவது பற்றி குறிப்பிட்டிருந்தாலும், அதற்கான கொள்கை ரீதியான அடித்தளங்கள் முன்வைக்கப்படவில்லை.
இது ஒரு நடைமுறை வேலைத்திட்டத்தை விட வெறும் எதிர்பார்ப்பாகவே தெரிகின்றது. ஜனாதிபதியின் அரசியல் உரைகளில் எப்போதும் காணப்படும் இந்தத் தனித்துவமான அம்சம் இம்முறையும் வெளிப்பட்டுள்ளது.
ஒரு துணிச்சலான பிரகடனம்...
"இனவாதம் மற்றும் அடிப்படைவாதம்" ஆகிய சொற்கள் அகராதியில் உள்ள "அசிங்கமான சொற்கள்" என அவர் நேரடியாகக் கண்டித்தமை ஒரு துணிச்சலான பிரகடனமாகக் கருதப்படலாம்.
ஆனால், ஆழமான இனமுரண்பாடுகளைக் கொண்ட ஒரு நாட்டில், இந்தப் பிரச்சினையை வெறும் "அசிங்கமான சொற்கள்" எனக் கூறிச் சுருக்குவது பிரச்சினையை எளிமைப்படுத்தும் செயலாகும். நிலைமாறுகால நீதி (Transitional Justice) போன்ற கடினமான பணிகளைத் தவிர்த்துவிட்டு, "நாம் முன்னோக்கிச் செல்வோம்" என்ற உணர்வை மாத்திரம் பேசுவது நகைப்புக்குரியது.
பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான "உட்புறத் தொடர்பை" ஜனாதிபதி வலியுறுத்தியமை முக்கியமானது. இது சுற்றுச்சூழல் மற்றும் தார்மீகப் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் பார்வையை வெளிப்படுத்துகிறது. எனினும், "உயர் பொருளாதார வளர்ச்சி" மற்றும் "சுற்றுச்சூழல் பாதுகாப்பு" ஆகிய இரு இலக்குகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை அரசு எவ்வாறு கையாளப் போகின்றது என்பது பற்றி அவர் எதனையும் குறிப்பிடவில்லை. இது அவரது தொலைநோக்கு பார்வைக்கும் (Vision) செயல்பாட்டிற்கும் (Mission) இடையே உள்ள பிளவையே காட்டுகின்றது.
ஒரு ஜனாதிபதியை விடவும் ஒரு ‘CEO’ போலவே...
2025 ஆம் ஆண்டின் பொருளாதார வெற்றிகள் (குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மற்றும் அதிக வரி வருமானம்) குறித்துப் பேசிய ஜனாதிபதி, "சாதனை அளவிலான வரி வருமானம்" மற்றும் "பொதுமக்கள் மீதான பாரிய சுமை" ஆகியவற்றுக்கு இடையிலான மோதலைப் பற்றி பேச முற்றாக மறந்துவிட்டார்.
"புள்ளிவிபரங்கள் மாத்திரம் போதுமானவை அல்ல" என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டு, மேக்ரோ பொருளாதாரத் தரவுகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்கியமை, அவர் ஒரு தேசத்திற்கு உரையாற்றும் ஜனாதிபதியாக அன்றி, தனது பங்குதாரர்களுக்கு (Shareholders) அறிக்கை சமர்ப்பிக்கும் ஒரு 'பிரதம நிறைவேற்று அதிகாரி' (CEO) போலவே காட்சியளித்தார்.
அரசியல் சமூகவியலின் படி, ஒரு வெற்றிகரமான உரையில் தர்க்கம் (Logos), நம்பகத்தன்மை (Ethos) மற்றும் உணர்ச்சி (Pathos) ஆகிய மூன்று கூறுகளும் இருக்க வேண்டும்.
அனுர குமார திஸாநாயக்க எனும் அரசியல்வாதியிடம் எப்போதும் காணப்படும் பேச்சின் தர்க்கம் (Logos) இம்முறையும் உயர்வாகவே இருந்தது. ஆனால், நாட்டின் ஆட்சியாளராக அவர் மக்களிடம் வெளிப்படுத்த வேண்டிய நம்பகத்தன்மை (Ethos) மற்றும் மக்களின் உணர்வுகளுடன் ஒன்றிணைவதற்கான வேகம் (Pathos) என்பன அவரது உரையில் நழுவிப் போயுள்ளன.
இது வேறொன்றுமில்லை, 'அனுரவாதத்தின்' (Anuravadaya) சப்த அழகிற்கும் அதன் நடைமுறைக்கும் இடையே நிலவும் பாரிய இடைவெளியை அவரது ஆட்சி தொடர்ந்து உறுதிப்படுத்தி வருவதன் விளைவேயாகும்.
(சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க| அரசியல் மற்றும் சமூக ஆய்வாளர்)


