பிரிவுகளில், தனிநபர் அவதூறு தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதைத் தவிர்க்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்கள், தங்களைப் பற்றி இணையத்தளம் உள்ளிட்ட ஊடகங்களில் அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி, காவல்துறை விசேட பிரிவுகளில் முறைப்பாடு செய்யும் போக்கு அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு ஆணைக்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
“அவதூறு சுமத்துதல் என்பது ஒரு குற்றவியல் தவறு அல்ல” என்பதைச் சுட்டிக்காட்டி ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இதற்கமைய, அவதூறு அல்லது பொய்யான கருத்துக்களை வெளியிடுவது இலங்கையில் ஒரு 'குற்றவியல் தவறு' (Criminal Offence) அல்ல என்பதை நினைவூட்டி, இது தொடர்பில் காவல்துறையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறு காவல்துறை மா அதிபருக்கு ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக, அவதூறு தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்வதையோ அல்லது அது குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதையோ தவிர்க்குமாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவதூறு தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதன் ஊடாக, மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற விடயங்களுக்குத் தடை ஏற்படும் அபாயம் காணப்படுவதாகத் தான் அவதானித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அடிப்படை உரிமை: கருத்துக்களை வெளிப்படுத்துவதும், அதன் ஊடாக ஜனநாயகச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் அனைத்துக் குடிமக்களினதும் அடிப்படை உரிமையாகும் என உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
சமூகப் பாதிப்பு: கருத்துச் சுதந்திரத்திற்கு தேவையற்ற மற்றும் நியாயமற்ற தடைகளை விதிப்பது சமூகத்திற்கு பாரிய ஆபத்தாக அமையும் என்பதுடன், இது மக்களிடையே அதிருப்தியையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தும்.
சர்வதேச தரம்: சர்வதேச மனித உரிமைத் தரநிலைகளின்படி, அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் போன்ற பொதுப் பிரதிநிதிகள், சாதாரண தனிநபர்களை விடவும் விமர்சனங்களை சகித்துக்கொள்ளும் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.
மேலும், 'இணையவழி பாதுகாப்புச் சட்டத்திற்கு' (Online Safety Act) பதிலாகப் பொருத்தமான புதிய சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவரும் வரை, தற்போதைய சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தி வைப்பதாக நீதி அமைச்சு அறிவிக்க வேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
அண்மைக் காலமாக அமைச்சர் வசந்த சமரசிங்க, அவரது மக்கள் தொடர்பு அதிகாரி நிமோதி விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சி, ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் தமக்கு அவதூறு இழைக்கப்பட்டதாகக் கூறி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடுகளைச் செய்திருந்த பின்னணியிலேயே ஆணைக்குழுவின் இந்த அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.


