வெவ்வேறு விதமாகப் பயன்படுத்துவதாக வடக்கின் சிரேஷ்ட தமிழ் மக்கள் பிரதிநிதியொருவர் குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவருவதைப் போல அனைத்து இனங்களையும் சமமாக நடத்துவதும், தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதும் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"நீங்கள் இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தப் போகிறீர்களா? அல்லது இதற்கு முன்னர் இருந்தவர்கள் செய்த தவறுகளைத் திருத்தி நீதியை நிலைநாட்டப் போகிறீர்களா? அல்லது நீங்களும் தொடர்ந்தும் அதையே செய்யப் போகிறீர்களா? நீங்கள் இடதுசாரிகள் என்றும், இந்த நாட்டை கட்டியெழுப்பப் போவதாகவும், அனைவரையும் சமமாக நடத்தப் போவதாகவும் தொடர்ந்து கூறி வருகிறீர்கள். அந்த நீதியான கூற்றுக்களை நீங்கள் எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள்?"
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனருள் சிவஞானம் ஸ்ரீதரன், 2026 ஜனவரி 6 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார். யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வட பகுதி மக்களின் வழிபாட்டிற்குரிய பௌத்தம் அல்லாத இரண்டு வழிபாட்டுத் தலங்கள் எவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர் நாடாளுமன்றத்திற்குத் தெரியப்படுத்தினார்.
"குறிப்பாக, கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, 2010 ஆம் ஆண்டு வரை வலிகாமம் வடக்கின் மைலிட்டி, தோலக்கட்டி, தையிட்டி, பலாலி மற்றும் வசுவிலான் போன்ற பகுதிகளில் இருந்த இந்து ஆச்சிரமங்கள் - வரசித்தி விநாயகர் ஆலயம் - இந்தப் புகைப் படத்தை நான் காட்டுகின்றேன். இது அந்தப் பகுதி மக்கள் 2010 இல் எடுத்த புகைப்படம். ஆனால், இந்த ஆலயம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஆலயம் இருந்ததற்கான அடையாளம் கூட அங்கில்லை."
மைலிட்டியில் அமைக்கப்பட்டிருந்த தொல்பொருள் பெறுமதிமிக்க கத்தோலிக்க தேவாலயம் ஒன்றும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினரால் அழித்தொழிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இதன்போது குற்றம் சாட்டினார்.
"மைலிட்டியில் இருந்த தூய திருச்சபை மாதா தேவாலயம் 2010 ஆம் ஆண்டு வரை முழுமையாக இருந்தது. நன்றாக இருந்த அந்தத் தேவாலயம் 2010 இற்குப் பின்னர் - இது 150 வருடங்கள் பழமையான, தொல்பொருள் பெறுமதிமிக்க தேவாலயம். இந்தத் தேவாலயமும் மஹிந்தவின் அரசாங்க காலத்தில் இராணுவத்தால் அடித்து அழிக்கப்பட்டுள்ளது."
தொல்பொருள் அடையாளத்தைக் கொண்ட இந்து ஆலயங்கள் மற்றும் சைவ வழிபாட்டுத் தலங்களை இவ்வாறு அழிக்க முடியுமென்றால், தமிழ் மக்களின் காணிகளைப் பலவந்தமாகப் பிடித்து புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றுவது எவ்வாறு தவறாகும் என தமிழ் மக்கள் பிரதிநிதி நாடாளுமன்றத்தில் கடுமையாகக் கேள்வி எழுப்பினார்.
"இவ்வாறான தொல்பொருள் அடையாளமும் வரலாறும் கொண்ட ஆலயங்களை, இந்து வழிபாட்டுத் தலங்களை, சைவ வழிபாட்டுத் தலங்களை அடித்து அழிக்க முடியுமென்றால், ஏன் பலவந்தமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றுவது தவறாகும்? உங்களால் இந்து ஆலயங்களை உடைக்க முடியும், பிடுங்க முடியும். கத்தோலிக்க தேவாலயங்களை அழிக்க முடியும். ஆனால், பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டும்... நீங்கள் எப்போது இனங்கள் மீது அன்பு செலுத்துவீர்கள்? எப்போது அந்தத் தேசிய ஒருமைப்பாடு வரும்? எனவே, முதலில் உங்கள் மனங்களை மாற்றிக் கொள்ளுங்கள்."
திஸ்ஸ ரஜமஹா விகாரை அமைக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 2023 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் தமிழ் மக்கள், அந்த விகாரையை அவ்விடத்திலிருந்து அகற்றி தமது காணிகளை முழுமையாக விடுவிக்குமாறு தொடர்ச்சியாகக் கோரி வருகின்றனர்.
தமிழ் மக்களுக்கு உறுதிப்பத்திரம் உள்ள காணிகளை யுத்த காலத்தில் கையகப்படுத்தி தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை உண்மையான 'திஸ்ஸ விகாரை' அல்ல என நைனாதீவு ரஜமஹா விகாரை விகாராதிபதியும் வட இலங்கையின் பிரதான சங்கநாயக்கருமான நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரரும் குறிப்பிட்டுள்ளார்.
2026 ஜனவரி 6 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன், தற்போதைய ஆட்சியிலும் வட பகுதி மக்கள் இராணுவத்தின் கடும் அழுத்தத்தின் கீழேயே வாழ்கின்றனர் என்பதே வடக்கு கிழக்கிற்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடையிலான பாரிய வித்தியாசம் என அரசாங்கத்திற்கு வலியுறுத்தினார்.
"சிங்கள மக்களுக்கு உள்ளதைக் கூறுங்கள். மக்கள் உங்கள் அரசாங்கத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் நேர்மையாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டுமானால், முதலில் - யாழ்ப்பாணம் வித்தியாசமானது, அங்கு எல்லாம் வித்தியாசமாகவே இருக்கிறது என்று உங்கள் அமைச்சர்களும் பிரதிநிதிகளும் கூறுகிறார்கள். அந்த வித்தியாசம் என்ன? உங்கள் ஒடுக்குமுறையின் வித்தியாசம் இன்றும் அங்கு இருக்கிறது. வடக்கு கிழக்கை இராணுவம் பிரித்து வைத்துள்ளது. முழுமையாக இராணுவத்தின் அழுத்தத்தின் கீழேயே மக்கள் வாழ்கின்றனர். அது ஒரு வித்தியாசம்தான். அதனை முதலில் அகற்ற வேண்டும்."


