புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு எட்டு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் மனித உரிமை சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, மே 05 செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுக்குத் தெரிவிக்கையில்;
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 249 பேருக்குச் சொந்தமான எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய அகழ்வின் போது சிறு பிள்ளை ஒன்றின் உடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
"ஐந்து எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. இரண்டு எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 249 ஆகும். இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டவற்றில் ஒன்று சிறு பிள்ளையுடையதாகும்."

சவப்பெட்டி ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படும் எலும்புக்கூடு ஒன்றும் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், எரிந்த நிலையில் காணப்பட்ட சில எலும்புத் துண்டுகளும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை சில நாணயங்களும், தங்க ஆபரணங்கள் என நம்பப்படக்கூடிய சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்தார்.
அரசாங்கத்திடமிருந்து 210 இலட்சம் ரூபாய் நிதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஏழு மாத இடைவெளிக்குப் பின்னர் 2026 ஏப்ரல் 27 திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் செல்வனாயகம் லெனின்குமார் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டலில் செம்மணி சித்துப்பாத்தி புதைகுழி அகழ்வுப் பணிகள் முதன்முதலில் 2025 மே 15 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
செப்டம்பர் 06, 2025 அன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த போது, சிறுவர்கள் உட்பட 240 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டிருந்தன. இவை அனைத்தும் ஒன்றரை அடி முதல் இரண்டு அடி வரையிலான ஆழத்திலேயே மீட்கப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஏப்ரல் 30, 2026 அன்று ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்; இரண்டாம் கட்ட அகழ்வின் போது எடுக்கப்படாமல் எஞ்சியிருந்த ஒரு மனித எலும்புக்கூடு இன்னும் அகழ்விடத்திலேயே பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
செம்மணி புதைகுழியில் மனித எச்சங்களுடன் பால் போத்தல்கள், பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர்களின் காலணிகள் மற்றும் பாடசாலைப் பைகள் போன்ற பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக 28 சிறுவர்கள் உட்பட 376 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட மன்னாார் சதொச மனிதப் புதைகுழி கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


