பிடியாணை இன்றி கைது செய்யக்கூடிய பிணையில் வெளிவர முடியாத குற்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், இவ்வாறான குற்றங்களைச் செய்பவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா முதல் ஒரு மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்படலாம் என மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், அக்குற்றத்தை தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு நாளொன்றுக்கு 5,000 ரூபா அபராதம் விதிக்கப்படும்.
சுற்றுச்சூழல் மாசடைவைக் கட்டுப்படுத்த அவசியமான, இதற்கு முன்னர் சுற்றுச்சூழல் சட்டத்தில் உள்வாங்கப்படாத சில துறைகள் திருத்தப்பட்ட சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.
இதன் கீழ் இரசாயன மாசடைவைக் கட்டுப்படுத்துதல், அபாயகரமான கழிவுகளை அகற்றுவதைக் கட்டுப்படுத்துதல் போன்ற விடயங்கள் புதிய திருத்தங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
1980ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தை 25 ஆண்டுகளின் பின்னர் திருத்தம் செய்வது குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நேற்று (05ஆம் திகதி) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
திருத்தப்பட்ட தேசிய சுற்றுச்சூழல் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அத்துடன், நிலத்தடி நீர் மாசடைவதைத் தடுத்தல், ஒலி மாசடைவதைத் தடுத்தல் போன்ற விடயங்களுக்காகவும் புதிய ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பொலித்தீன் பாவனையைத் தடை செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் 2017ஆம் ஆண்டில் அதிகார சபையினால் ஒழுங்குமுறைகள் விதிக்கப்பட்ட போதிலும், ஒரே நபர் மீண்டும் மீண்டும் அதே குற்றத்தைச் செய்வது அவதானிக்கப்பட்டதாகவும், இதற்குக் குறைந்த அபராதம் மற்றும் தண்டனைகளே காரணமாக இருந்ததாகவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் பணிப்பாளர் (சட்டம் - பதில்) ஹர்ஷி பல்லியகுருகே தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) செய்யப்பட வேண்டிய ஒரு திட்டத்தை, அவ்வாறான மதிப்பீடு இன்றி ஆரம்பிப்பது போன்ற விடயங்களுக்கு தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் குறைந்த அபராதமே விதிக்கப்பட்டிருந்தமையால் இவ்வாறான செயல்கள் அதிகளவில் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் அமைச்சின் மேலதிக செயலாளர் (சுற்றுச்சூழல் கொள்கை மற்றும் திட்டமிடல்) பத்மா அபேகோன் கருத்து தெரிவிக்கையில், பிளாஸ்டிக் முகாமைத்துவத்திற்காக உலகளாவிய ரீதியில் சர்வதேச சட்டமொன்றை நிறுவும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.


