அவசியத்தை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், இது குறித்து தயக்கம் காட்டும் காலம் முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்புக்கும் சென்னைக்கும் இடையிலான கடல்வழி தூரம் சுமார் 300 கிலோமீற்றர் ஆகும், ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மிக நெருக்கமான புள்ளிகளான இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாரிற்கும் இடையிலான தூரம் சுமார் 30 கிலோமீட்டர் மாத்திரமே என அவர் சுட்டிக்காட்டினார்.
“இருப்பினும், நேரடி வீதி இல்லை. புகையிரத பாதை இல்லை. பாரிய அளவிலான படகுச் சேவை இல்லை. எரிசக்தி கட்டமைப்பு இணைப்பு இல்லை. குழாய் வழித்தடம் இல்லை. உண்மையைச் சொன்னால் இது ஒரு முரண்பாடாகும். இரு அண்டைய அறைகளுக்கு இடையே ஒரு கதவை உருவாக்க வாய்ப்பு இருந்தும், வெளியே உள்ள ஒரு நடைபாதை வழியாக மாத்திரம் அந்த அறைகள் இணைக்கப்பட்டிருப்பதைப் போன்றது இது” என்று அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
“பாக்கு நீரிணையூடாக பாலம் அல்லது சுரங்கப்பாதை மூலம் தரைவழித் தொடர்பை ஏற்படுத்துவது குறித்து பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. உலகில் இத்தகைய தாழ்வாரங்களுக்கு (Corridors) போதுமான உதாரணங்கள் உள்ளன. இதற்கான பொறியியல் நுணுக்கங்கள் நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. இதன் பொருளாதார நன்மைகள் ஈர்க்கக்கூடியவை. இத்தகைய பாலங்கள் கட்டப்பட்ட இடங்களிலெல்லாம் அதன் பலன்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஆனால் நாம் தொடர்ந்து தயக்கம் காட்டுகிறோம். நான் தெளிவாகக் கூறுகிறேன்: தயக்கம் காட்டும் காலம் முடிந்துவிட்டது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒரு நிலையான இணைப்பு முழு பிராந்தியத்தின் பொருளாதார புவியியலையும் மாற்றியமைக்கும். இது இலங்கை எதிர்பார்க்கும் ஒரு மையப்புள்ளியாக (Hub) மாறுவதற்கு வழிவகுக்கும்,” என்றார்.
கொழும்பில் நடைபெற்ற 'உலகளாவிய புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவ உச்சிமாநாட்டில்' (Global Innovation and Leadership Summit) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்று இலங்கைக்கான மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா விளங்குகின்றது. இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளதுடன், கடந்த ஆண்டு இலங்கைக்குக் கிடைத்த நேரடி வெளிநாட்டு முதலீடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்திய முதலீடுகள் எனவும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.


