ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்த தலைமையகத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, இலங்கையின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் 'டிஜிட்டல் வார்டு ஒருங்கிணைப்பாளர்கள்' (Digital Ward Coordinators) உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக ஆயிரம் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய 'UNP மொபைல் செயலி' (UNP App) விரைவில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தச் செயலியின் ஊடாக கட்சி உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே தகவல்களைப் பரிமாறவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொடர்புகளை மேம்படுத்தவும் புதிய டிஜிட்டல் தளம் ஒன்றை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இந்த டிஜிட்டல் மயமாக்கல் செயற்திட்டத்தின் மற்றொரு முக்கிய அங்கமாக, சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் 'ஸ்டார் லிங்க்' (Star Link) அதிவேக இணைய வசதியும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, 'ஜெனரேஷன்-இஸட்' (Gen-Z) தலைமுறையுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.
புத்திசாலித்தனமான அரசியலை (Smart Politics) ஏற்கும் புதிய தலைமுறையின் தலைமைத்துவத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கட்சியையும் ஒட்டுமொத்த தேசத்தையும் எதிர்காலத்தில் புதிய தலைமுறை இளைஞர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
“எனக்கு வயது 70-க்கு மேல். இங்கே 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள், சிலர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மற்றும் சிலர் 50 வயது மதிக்கத்தக்கவர்கள். இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் பிறந்த தலைமுறையைப் பற்றி சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்தத் தலைமுறையினரிடம் கட்சியையும் அரசியலையும் ஒப்படைக்கும் போது, ஐக்கிய தேசியக் கட்சியும் அதற்குத் தலைமை தாங்க நேரிடும்” என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
Gen-Z தலைமுறையுடன் UNP-யின் புதிய பயணம்
ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்:
"எமது தலைவர் டி.எஸ். சேனநாயக்க அவர்கள் சுதந்திர இலங்கையை உருவாக்கி அதன் 78-வது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறோம். அவர் முதல் இன்று வரை 78 ஆண்டுகளாக இந்நாட்டைக் கட்டியெழுப்ப பாடுபட்ட அனைத்துத் தலைவர்களையும் நாம் கௌரவிக்கிறோம்.
அவர் ஆரம்பித்து வைத்த மத்திய மகா வித்தியாலயங்கள் இன்று 1,400க்கும் அதிகமாக உள்ளன. அன்று ஒரு பல்கலைக்கழகமே இருந்தது, இன்று 19 அரச பல்கலைக்கழகங்களும் 27 அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களும் உள்ளன.
அன்று இருந்த வைத்தியசாலைகளின் எண்ணிக்கை இன்று 600-ஐ நெருங்குகிறது. அரிசி உற்பத்தியில் நாம் தன்னிறைவு கண்டுள்ளோம். மின்சாரம், வாகன வசதிகள் என அனைத்தும் இன்று எங்கும் நிறைந்துள்ளன.
நாம் இப்போது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இதற்காக சுதந்திரமான மற்றும் பல்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும். அதனால்தான் நாடு முன்னேறியது. 2022ல் சரிந்த பொருளாதாரத்தை நான் பொறுப்பேற்று ஸ்திரப்படுத்தினேன். 2048 ஆம் ஆண்டைப் பற்றி நாம் நீண்டகால நோக்கில் சிந்திக்க வேண்டும். புதிய வாக்காளர்கள் போர் முடிவுக்கு வந்த பின்னர் பிறந்தவர்கள். அவர்கள் ஒரு டிஜிட்டல் உலகில் வாழ்கிறார்கள்.
நாங்கள் வழங்கிய மின்சாரம், கையடக்கத் தொலைபேசி, கணினி மற்றும் இணையம் ஆகியவற்றின் ஊடாக இன்று நாடு டிஜிட்டல் யுகத்திற்குச் சென்றுள்ளது. Gen-Z என்பது தொழில்நுட்ப யுகத்தில் பிறந்த தலைமுறை. இந்தத் தலைமுறையுடன்தான் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். 1948-லும் 1977-லும் நாட்டை வழிநடத்தியது போலவே இப்போதும் ஐக்கிய தேசியக் கட்சி தயாராக வேண்டும்.
இன்று நாம் ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் இல்லை, டொனால்ட் ட்ரம்ப்பின் உலகில் இருக்கிறோம். சீனா மற்றும் அண்டை நாடான இந்தியாவுடனான யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறையோடு மட்டும் நில்லாமல், அடுத்தகட்டத் தொழில்நுட்ப யுகத்திற்கு நாம் செல்ல வேண்டும்."
இதேவேளை, இந்நிகழ்வின் போது ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒலிபரப்பப்பட்ட பாடல் மற்றும் யுவதிகளின் நடனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


