செய்வதற்காக வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவுக்காக, கொழும்பு மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற 17,399 விண்ணப்பங்களில் 11,964 விண்ணப்பங்களுக்கு இன்னும் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டியுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டச் செயலகத்தினால் கடந்த 02 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட முன்னேற்ற அறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் ஆடைகளை கொள்வனவு செய்ய அரசாங்கத்தினால் 15,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.
இக்கொடுப்பனவுக்காக விண்ணப்பித்த கொழும்பு மாவட்ட விண்ணப்பதாரிகளில் 5,166 பேருக்கு மாத்திரமே இதுவரையில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 48 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், சிக்கல்கள் காணப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 48 ஆகும். அதிகளவான விண்ணப்பங்கள் கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவிலிருந்தே கிடைக்கப்பெற்றுள்ளன.
எனினும், அந்தப் பிரிவில் இதுவரையில் ஒரு விண்ணப்பதாரிக்கேனும் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 8,650 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கொழும்பு மாவட்டச் செயலாளர் ஜினிஹே பிரசன்ன ஜனக குமாரவிடம் வினவியபோது, கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளதாகவும், அக்கொடுப்பனவுகளை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
"நாங்கள் 25,000 ரூபா கொடுப்பனவை வழங்கி வருகிறோம், அதேபோல் 50,000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்பட்டு வருகின்றது. 25,000 ரூபா கொடுப்பனவுக்காக கொழும்பு மாவட்டத்தில் 52,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றிற்கான கொடுப்பனவுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 50,000 ரூபா கொடுப்பனவுக்காக 37,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன, அவற்றில் 90 சதவீதமானவை வழங்கப்பட்டுவிட்டன.
"தற்போது 15,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், கொலன்னாவ போன்ற பகுதிகளில் இன்னும் வழங்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பரிசோதித்த பின்னரே கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
"கொலன்னாவ போன்ற பகுதிகளில் வீட்டுச் சேதங்கள் தொடர்பாக மாத்திரம் 30,000 வீடுகளைப் பரிசோதிக்க வேண்டியுள்ளது. அதற்குச் சற்றுக் காலம் எடுக்கும். அடுத்த வாரமாகும் போது வீட்டு உதவித் திட்டம் மற்றும் 15,000 ரூபா கொடுப்பனவு ஆகிய இரண்டையும் வழங்க நடவடிக்கை எடுப்போம்" என்றார்.


