மடிக்கணினியை பலவந்தமாக பறிமுதல் செய்துள்ளனர்.
நள்ளிரவில் குண்டர்களுடன் வீட்டிற்குச் சென்று, தேசிய ரூபவாஹினியில் பணியாற்றும் அவரது மனைவியின் கைபேசியையும் பலவந்தமாக எடுத்துச் சென்றுள்ளனர்.
இலங்கையின் முன்னணி அரச தொலைத்தொடர்பு சேவை வழங்கியான மொபிடெல் நிறுவனத்தின் உயர் முகாமைத்துவத்தினர், தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஊழியர் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரது மனைவியின் கைபேசியையும் ஊழியரின் தனிப்பட்ட உபகரணங்களையும் பலவந்தமாகப் பறித்துச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வித நீதிமன்ற பிடியாணையும் (Warrant) அல்லது சட்டப்பூர்வ அனுமதியும் இன்றி முன்னெடுக்கப்பட்ட இந்தச் செயல், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஊடகவியலாளர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு பலவந்தமாகப் பறிக்கப்பட்ட கைபேசியின் உரிமையாளர் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பணியாற்றுபவர் என்பது இந்தச் சம்பவத்தின் தீவிரத்தன்மையை மேலும் அதிகரித்துள்ளது.
மொபிடெல் நிறுவனத்தின் இரகசியத் தகவல்கள் அதில் இருப்பதாகக் கூறி, குறித்த கைபேசியைப் பறிமுதல் செய்ததோடு, பின்னர் தரவுப் பரிசோதனைக்காக (Data Audit) மூன்றாம் தரப்பு தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைத்துள்ளனர்.
எனினும், அந்த ஊழியரின் கணினியிலோ அல்லது கைபேசியிலோ நிறுவன ரீதியான எந்தவொரு தகவலும் இல்லை என்பது அங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொபிடெல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) மற்றும் மனிதவளப் பிரிவு பிரதானியின் வழிகாட்டலின் கீழ், குறித்த ஊழியர் பத்து மணித்தியாலங்களுக்கும் மேலாக அறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்குச் சொந்தமான தனிப்பட்ட மடிக்கணினியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத் தலைவருக்கு (Chairman) மனு ஒன்றைச் சமர்ப்பித்தமை தொடர்பிலான விசாரணையெனக் கூறி, இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் முடிவில் குறித்த ஊழியர் நிரபராதி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தினால் ஏற்பட்ட கடும் மன உளைச்சல் மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள் காரணமாக, அந்த ஊழியர் தற்போது அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக அவரது மனைவியினால் அதுருகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனச் சாட்டப்படுகிறது.
இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊழியரின் நலன் விசாரிக்கச் சென்ற மொபிடெல் நிறுவனத் தலைவர், இச்சம்பவம் குறித்து உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரச சார்பு நிறுவனமொன்றின் அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தையும் பிரஜைகளின் உரிமைகளையும் இவ்வாறு மீறுவது தொடர்பில் பல சிவில் அமைப்புகள் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளன.


