முச்சக்கரவண்டி (ஆட்டோ) ஒன்றின் மீது, பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (04) காலை வேளையில் இந்தச் சோகமான விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவனும், அவனது தாயாரும் மற்றும் பிறிதொரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த பயங்கர விபத்திலிருந்து த்ரீவீலரின் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
இன்று காலை 6:45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தையடுத்து, நாவலப்பிட்டி பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிரதேசவாசிகளும் இணைந்து, மரத்தின் கீழ் நசுங்கி உயிரிழந்திருந்த மூவரின் சடலங்களையும் மீட்டெடுத்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.
அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என மக்கள் குற்றச்சாட்டு!
நீண்ட காலமாக பழுதடைந்திருந்த குறித்த யூக்கலிப்டஸ் (Eucalyptus) வகை மரத்தை வெட்டி அகற்றுமாறு தம்மால் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பலமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு இதுவரை எவ்வித தீர்வும் வழங்கப்படாத நிலையிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


