ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆறாவது நாளாகவும் நேற்று (03) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மேலும் 245 மனித உடல்களுக்குரிய எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 243 மனித உடல்களுக்குரிய எலும்பு எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சிரேஷ்ட சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழியின் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி யாழ்ப்பாண நீதவான் எஸ். லெனின் குமார் மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்து மயானத்திற்கு அருகிலுள்ள மனிதப் புதைகுழியின் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் 2025 செப்டம்பர் 06ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டதாக அகழ்வாராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஐந்தாம் கட்டப் பணிகள் நிறைவடையும் போது, புதைகுழியில் இருந்து 240 மனித உடல்களுக்குரிய எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன, அவற்றில் 239 உடல்களுக்குரிய எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டிருந்தன.
புதைகுழி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் (Scan) பரிசோதனை அறிக்கைகளைக் கருத்திற்கொண்டு ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.
யாழ்ப்பாண நீதவான் எஸ். லெனின் குமார் மேற்பார்வையில், களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வு தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ நிபுணர் செல்லையா பிரணவன் உள்ளிட்ட நிபுணர் குழுவினரால் இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அங்கிருந்து மீட்கப்பட்ட எலும்பு எச்சங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ பீடத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


