கண்டறியும் இணையத்தளமொன்றின் பெயர் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் உருவான சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில், இப்போது மற்றுமொரு பிரச்சினை எழுந்துள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் பாடப்புத்தகத்தின் ஒரு பாடத்தில், இனரீதியான ஒத்தப்பண்புருவாக்கம் (Ethnic Stereotyping) இடம்பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சிங்கள தேசியவாத நீரோட்டத்தில் பிரபலமான கருத்தியலாளர்களில் ஒருவரான தமலு மலித்த பியதிகம என்பவரால் இந்தப் பிரச்சினை முன்வைக்கப்பட்டுள்ளது.

'Global Studies' (உலகளாவிய கற்கைகள்) என்ற தலைப்பிலான இந்தப் பாடத்தில் நைஜீரியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று சிறுவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
உலகெங்கிலும் வாழும் மக்களின் பல்வேறு வாழ்க்கை முறைகளை அடையாளம் கண்டு, அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, அந்த அடையாளங்களை மதித்தல் இப்பாடத்தின் நோக்கமாகக் காட்டப்பட்டுள்ளது.
'The beauty of the world lies in the diversity of its people' (உலகின் அழகு அதன் மக்களின் பன்முகத்தன்மையில் உள்ளது) என்ற வாசகத்துடன் இப்பாடம் தொடங்குகிறது. இதில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள முக்கிய விடயம் 'பராசா' (Barasa) என்ற சிறுவனின் கதையாகும்.
சர்ச்சைக்குரிய பராசா யார்?
ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பராசாவின் கதை சுருக்கமாக வருமாறு:
"எனது பெயர் பராசா. நான் நைஜீரியாவில் வசிக்கிறேன். நான் எனது தந்தை, தாய், இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசிக்கிறேன். நாங்கள் மின்சாரம் இல்லாத, ஒரேயொரு அறையை மாத்திரம் கொண்ட வீட்டில் வசிக்கிறோம். எனது பாட்டி மற்றும் தாத்தா அருகிலேயே வசிக்கிறார்கள். எனது தாய் 'மந்தாசி' (Mandazi) சமைப்பதற்காக, நான் அதிகாலையிலேயே எழுந்து விறகு தேடிக்கொடுக்கிறேன். மந்தாசி மிகவும் சுவையானது. எனக்கு அது மிகவும் பிடிக்கும்."
இந்தக் கதையின் ஊடாக ஆப்பிரிக்கச் சிறுவர்கள் குறித்து ஒரு ஒத்தப் பண்புருவாக்கம் (Stereotyping) செய்யப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாக இனவாதத்தை ஊக்குவிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சமில டி சில்வா என்பவரது முகநூல் (Facebook) பதிவிலுள்ள விமர்சனம் இதற்கு ஒரு உதாரணமாகும்.
"இனவாதம், மதவாதம் என்பவற்றை நிராகரிக்கும் தற்போதைய 'மறுமலர்ச்சி அரசாங்கம்' புதிய பாடத்திட்டத்தின் ஊடாக எவ்வாறு 'இனவாதத்தை' ஊக்குவிக்கிறது மற்றும் அதற்கான விஞ்ஞானபூர்வமான விமர்சனம்!" என்ற தலைப்பிலான அவரது பதிவின் சில பகுதிகள் வருமாறு:
"இன்று விஞ்ஞான உலகம் ஏற்றுக்கொள்ளும் உண்மை என்னவென்றால், மனிதன் பல்வேறு இனங்களின் தொகுப்பு அல்ல, மாறாக ஒரே மனித இனம் என்பதாகும். இங்கு முன்வைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வகைப்பாடுகள் தற்போது விஞ்ஞான அடிப்படை அற்ற, வரலாற்றுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட காலாவதியான கருத்துக்களாகும்.
பாடசாலைப் பாடப்புத்தகங்களில் இன்னும் இவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்படுமானால், அதன் மூலம் புதிய தலைமுறைக்கு விஞ்ஞானபூர்வமாகத் தவறான மற்றும் சமூக ரீதியாகத் தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செய்தியே வழங்கப்படுகிறது. எனவே, இப்போதனைகளின் வரலாற்றுப் பின்னணியையும் அவை நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களையும் சரியாகப் புரிந்துகொள்வது அவசியமாகும்."

1750 களில் கார்ல் லின்னேயஸ் போன்ற விஞ்ஞானிகள் முதல் 19 ஆம் நூற்றாண்டின் மானுடவியலாளர்கள் வரை, மனிதனின் வெளிப்புறத் தோற்றப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான பிரிவினைகளை முன்வைத்தனர். எவ்வாறாயினும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அதாவது 1950 களில் இருந்து யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் தலையீட்டுடன் இந்த 'இனம்' (Race) என்ற கருத்துரு விஞ்ஞான உலகிலிருந்து படிப்படியாக நீக்கப்படத் தொடங்கியது."
முன்னாள் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கரு பரணவிதான மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் ஆய்வுத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் அனுருத்த பிரதீப் ஆகியோர் இதற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்ததை அடுத்து இந்த விமர்சனம் மேலும் தீவிரமடைந்துள்ளது. கரு பரணவிதான இதனை "தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் தலையில் வந்து விழும் மற்றுமொரு பேரதிர்ச்சி" என விவரித்துள்ளார்.

சிரேஷ்ட விரிவுரையாளர் அனுருத்த பிரதீப், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்திற்கு கருத்தியல் ரீதியாக விமர்சன ரீதியான ஆதரவை வழங்குபவர் ஆவார். அவர் இது குறித்து இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்:
அறநெறிகளுக்கு முற்றிலும் முரணானது: அனுருத்த பிரதீப்
"இந்தப் புத்தகத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இருபத்தியோராம் நூற்றாண்டுக்காகக் குழந்தைகளைப் பயிற்றுவிக்க முயற்சிப்பவர்களுக்கு, குறைந்தபட்சம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வளர்ந்த அடிப்படை அறநெறிகள் (Ethics) பற்றியாவது எந்தவொரு அறிவும் இல்லை."
"கடவுளே, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பற்றி இப்போது யாரும் இவ்வாறு ஒத்தப்பண்புருவாக்கம் (Stereotype) செய்து பேசுவதில்லை. வெளிப்புற சமூகத்தில் சில இடங்களில் அவ்வாறு பேசப்பட்டாலும், ஒருபோதும் பாடசாலைக் கல்வியில் நாடுகளை அல்லது இனங்களை இப்படி அறிமுகப்படுத்துவதில்லை. இது யதார்த்தத்திற்கும் அறநெறிகளுக்கும் எதிரானது."
"நைஜீரியச் சிறுவன் மேலும் நான்கு சகோதர சகோதரிகள் மற்றும் தாய், தந்தையுடன் ஒரே அறையில் வசிக்கிறான், அவன் காலையில் எழுந்து விறகு சேகரிக்கச் செல்ல வேண்டும்; அதேசமயம் ஆஸ்திரேலியச் சிறுவன் ஒரு தேவதைக் கதையுலகில் தேவதையைப் போல வாழ்கிறான் என்பது போன்ற கதைகளை எழுதியவர்களுக்கு முதலில் அடிப்படை அறிவு புகட்டப்பட வேண்டும்."

"இவ்வாறான முட்டாள்தனமான, கற்காலக் கருத்துக்களை நமது எதிர்கால சந்ததியினரின் தலைக்குள் திணிப்பதுதான் இந்தக் கல்விச் சீர்திருத்தத்தின் நோக்கமா?"
"அந்தப் புத்தகத்தைப் போலவே இந்தப் புத்தகத்தையும் உடனடியாகப் பயன்பாட்டிலிருந்து அகற்ற வேண்டும். இருபத்தியோராம் நூற்றாண்டு பற்றிப் பேசினாலும், இவற்றைத் தயாரிப்பவர்களின் அறிவு எழுபதுகளில் (70s) தான் இருக்கிறது. இது ஒரு விசித்திரமான கல்விச் சீர்திருத்தம்."
விமர்சகர்களும் ஒத்தப்பண்புருவாக்கத்திற்கு (Stereotype) உட்பட்டவர்களே : தியாகராஜா வரதாஸ்
எவ்வாறாயினும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் ஆய்வுத்துறையின் முன்னாள் விரிவுரையாளர் தியாகராஜா வரதாஸ் இது தொடர்பாக மாற்றொரு வாதத்தை முன்வைக்கின்றார். குறித்த பாடத்தை விமர்சிப்பவர்களும் மற்றுமொரு ஒத்தப்பண்புருவாக்க (Stereotype) சட்டகத்திற்குள்ளேயே சிக்கியுள்ளனர் என அவர் கூறுகின்றார்.
கரு பரணவிதான பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, ஓரினச்சேர்க்கையை ஒரு நோயாகக் கருதுவது குறித்து பரணவிதானவின் கருத்து என்னவென்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்டை நாடான இந்தியாவில் நான்காம் வகுப்புப் பாடமொன்றில் குடும்பம் பற்றி கற்பிக்கும்போது, பாரம்பரியக் குடும்ப முறைக்கு அப்பாற்பட்டு, இரண்டு தந்தையர்களைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் இரண்டு தாய்களைக் கொண்ட குடும்பங்கள் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளதாக வரதாஸ் கூறுகின்றார். அவரது கருத்து வருமாறு:

"அனுருத்த மற்றும் பரணவிதான போன்றவர்கள் முன்வைக்கும் இந்த ஒத்தப்பண்புருவாக்கங்களுக்கு எதிராகவும், அதேவேளை 21 ஆம் நூற்றாண்டின் அடிப்படை நாகரீக விடயங்கள் குறித்தும் நானும் சிறிது பேச விரும்புகின்றேன்."
"இவர்கள் கூறுவதைப் போல, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை அறிமுகப்படுத்தும்போது பிள்ளைகளுக்கு அந்த பழைய பாணியிலான ஒத்தப்பண்புருவாக்கங்களைக் கற்பிக்கக் கூடாது என்பதில் நானும் உடன்படுகின்றேன். அதேவேளை, அவ்வாறான ஒத்தப்பண்புருவாக்கங்கள் இன்றி இதனை எவ்வாறு கற்பிப்பது என்பதையும் இவர்கள் கூறினால் நன்றாக இருக்கும்."
"இந்த இருவரிடமும் நான் ஒரு கேள்வியைக் கேட்கின்றேன். ஒத்தப்பண்புருவாக்கங்களுக்கு எதிராக நின்று, பிள்ளைகள் விரிவாகச் சிந்திக்கும் வகையில் உலகின் பன்முகத்தன்மை குறித்து பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கூறும்போது, குடும்பம் குறித்தும் நாம் கற்பிப்பது ஒருவகை ஒத்தப்பண்புருவாக்கம் (Stereotype) இல்லையா? உலகில் குடும்பம் என்பது தாயும் தந்தையும் மாத்திரம் இருப்பதா? இல்லைதானே... இதோ அண்டை நாடான இந்தியாவில் 4 ஆம் வகுப்புக்கு குடும்பம் தொடர்பாக உள்ள பாடத்திட்டத்தைப் பாருங்கள். அப்படியானால், இதையல்லவா இலங்கை பிள்ளைகளுக்கும் நாம் கற்பிக்க வேண்டும்?"
"நிச்சயமாகச் சொல்கிறேன், ஒத்தப்பண்புருவாக்கம் (Stereotypes) குறித்துக் கூச்சலிடும் இவர்கள் யாருக்கும், குடும்பம் என்று வரும்போது அந்தச் சட்டகத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று சொல்லத் துணிச்சல் இல்லை. ஏனெனில் உங்களுடைய அந்த விமர்சனமே ஒரு ஒத்தப்பண்புருவாக்கத்திற்கு உள்ளேதான் இருக்கிறது... அதுதான் 'இனவாதச் சட்டகம்' என்பது. கரு (பரணவிதான) எவ்வளவுதான் கத்தினாலும் பயனில்லை, அவரது கட்சியில் இருக்கும் டாக்டர் காவிந்த ஜயவர்தன இப்போதும் ஓரினச்சேர்க்கையை ஒரு நோய் என்றுதானே சந்தைப்படுத்துகிறார். எனவே, அது குறித்தும் கொஞ்சம் கவனித்தால் என்ன?"
இதன்படி, பொதுவாக இந்த விவாதத்தின் மூலம் வெளிப்படும் விடயம் என்னவென்றால், 'இனம்' (Race) என்ற கருத்துரு புதிய பாடத்திட்டத்திற்குள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதாகும். குறிப்பாக, மனித பன்முகத்தன்மையானது உலகளாவிய கல்விப் போக்குகளுக்குப் பொருந்தாத வகையில் சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது.
அத்தகைய கருத்துருக்கள் முழுமையான வரலாற்று மற்றும் விமர்சனப் பின்னணி இன்றி முன்வைக்கப்படுமானால், அது விஞ்ஞான ரீதியாகக் காலாவதியான ஒரு பார்வையை மீண்டும் நிலைநிறுத்துவதாக அமையும் என்பதே இதன் மறைமுகக் கருத்தாகும்.
இந்தக் குற்றச்சாட்டும் தேசிய கல்வி நிறுவனத்தின் மீதா?
புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள தரம் 6 க்கான ஆங்கில மொழி முதலாம் தவணைக் கற்றல் கையேட்டில் (Module), ஓரினச்சேர்க்கை கூட்டாளிகளைக் கண்டறியும் இணையத்தளமொன்றின் பெயர் இடம்பெற்றமை குறித்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடொன்றைச் செய்திருந்தார்.
கல்விச் சீர்திருத்தச் செயல்முறை குறித்து பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதியாக, ஏதேனும் சதித் திட்டத்தின் அடிப்படையில் இந்த இணையத்தளம் கையேட்டில் சேர்க்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு அவர் கோரியிருந்தார்.
இருப்பினும், இறுதியில் அந்த இணையத்தளத்தின் பெயரைச் சேர்த்தபோது அதனைச் சரியாகப் பரிசோதிக்கத் தவறியமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகக் கூறி, அந்தக் கையேட்டைத் தயாரித்த தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இந்த இனரீதியான ஒத்தப்பண்புருவாக்க (Ethnic Stereotyping) விவகாரம் அதற்குப் பின்னரே எழுந்தது. இதனை மற்றொரு பிரச்சினையாக அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பது குறித்து இதுவரை எவ்விதப் பதிலும் வழங்கப்படவில்லை.


