தாக்கத்தின் காரணமாக, இலங்கையில் நடப்பு ஆண்டின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வழமைக்கு மாறான கடுமையான வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என வானிலை அவதானிப்பு திணைக்களம் எச்சரித்துள்ளது.
இது குறித்து வானிலை அவதானிப்பு திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை தற்போது தென்மேற்கு பருவக்காற்று காலநிலையை எதிர்கொண்டுள்ள போதிலும், எல் நினோவின் தாக்கங்கள் எதிர்வரும் வாரங்களில் மேலும் தீவிரமடையக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
"நாம் தற்போது தென்மேற்கு பருவக்காற்று காலகட்டத்தில் இருக்கிறோம். இந்த எல் நினோ நிலைமையானது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் எங்களைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக இந்த இரண்டு மாதங்களிலும் மழைவீழ்ச்சி குறைவடையும், ஆனால் தற்போதைய எல் நினோ தாக்கத்தின் வளர்ச்சியால் மழைவீழ்ச்சி மிக மிகக் குறைவாகவே பதிவாகக்கூடும். இதன் விளைவாக, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெப்பநிலை சராசரி அளவை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது"
என அஜித் விஜேமான்ன விவரித்துள்ளார்.
பாதிப்புகளை எதிர்கொள்ள அரச நிறுவனங்கள் தயார் நிலை!
எதிர்பாராத வறண்ட காலநிலை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக நீர் வளங்கள், விவசாயம், மின் உற்பத்தி மற்றும் பொது சுகாதாரம் ஆகிய துறைகளுக்குப் பாரிய அழுத்தம் ஏற்படக்கூடும் என்பதால், அதிகாரிகள் ஏற்கனவே அதற்கான பூர்வாங்க தயாரிப்புகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் விபரித்த பதில் பணிப்பாளர் நாயகம்:
"இந்த சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, நீர் மேலாண்மைக்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்கி, எவ்வாறு சிறந்த முறையில் தயாராவது என்பதைத் தீர்மானிப்பதற்காகப் பேரிடர் மேலாண்மை மையம், மகாவலி அதிகாரசபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை, சுகாதார அமைச்சு மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துப் பங்குதாரர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்"
எனத் தெரிவித்துள்ளார்


