ஆகியவற்றுக்கு இடையிலான அரசியல் 'திருமணம்' விரைவில் நடைபெறுமா என்று இரு தரப்பு ஆதரவாளர்களும் இப்போது ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கு மிக அண்மைய காரணமாக அமைந்தது, உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மாளிகாவத்தை பி.டி. சிறிசேன மைதானத்தில் SJB ஏற்பாடு செய்திருந்த மே தினப் பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தி அனுப்பியமையாகும்.
வாழ்த்தும் ஆலோசனையும்:
SJB தனது மே தினத்திற்காகப் பயன்படுத்திய 'பச்ச மடிவட ஹொரு' (பச்சைப்பொய் போதாதென்று திருடர்களும்) எனும் முழக்கத்தைப் பாராட்டிய முன்னாள் ஜனாதிபதி, அதனை கிராமங்களுக்குக் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் குறித்து ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
இதுவே ஆதரவாளர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக் காட்டும் வகையில் திருட்டுகள், மோசடிகள், ஊழல்கள் மற்றும் மிரட்டல்கள் நிரூபிக்கப்பட்ட காலப்பகுதியாக கடந்த காலத்தைக் கருதலாம் என்றும், நிலக்கரி மோசடி மற்றும் திறைசேரியின் 25 இலட்சம் அமெரிக்க டொலர் கொள்ளை போன்றவை அண்மைய காலத்தில் நடந்த பாரிய திருட்டுகள் என்றும் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், 'பச்ச மடிவட ஹொரு' எனும் முழக்கம் தற்காலத்திற்கு மிகவும் பொருத்தமானது என்றும், இதனை பிரதேச சபைகள் மற்றும் மாநகர சபைகள் ஊடாக நடைமுறைப்படுத்துவது சிறந்தது என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரு கட்சிகளும் இணைந்து பயணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் பணிகளைத் தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், இது தொடர்பான கடிதத்தை SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
வரலாற்று ரீதியான பின்னணி:
மே தினப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பங்களிப்பையும் ரணில் விக்ரமசிங்க நினைவு கூர்ந்துள்ளார்.
1977ஆம் ஆண்டு முதல் ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தற்போது முடங்கியுள்ளன என்றும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாமல் சுற்றுலா மற்றும் கைத்தொழில் துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பதில்:
இந்த அரசியல் கூட்டணி குறித்த நம்பிக்கை ஆதரவாளர்களிடையே பலமடைய முக்கிய காரணம், பேரணியில் சஜித் பிரேமதாச வெளியிட்ட கருத்துக்களாகும்.
சமகி ஜன பலவேகய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் ஏற்கனவே இணைந்துவிட்டன" என அவர் அங்கு பகிரங்கமாக அறிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்த சஜித், இரு கட்சிகளும் இணைந்து பயணிக்க குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என ரணில் குறிப்பிட்டிருந்தாலும், தற்போது இரு கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதால் அத்தகைய குழுக்கள் அவசியமில்லை எனத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டணியைச் சீர்குலைக்கச் சதி செய்யும் சில நபர்களுக்கு இனி இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் உறுதியளித்தார்.
"இன்று இந்த கொடூரமான ஜனதா விமுக்தி பெரமுன அரசாங்கம் அனைத்து நிறுவனங்களையும் அழித்து, கல்வியையும் சீரழித்துள்ளது. கொள்கலன்களைக் கடத்தி துறைமுகப் பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவித்துள்ளது. தரம் குறைந்த நிலக்கரியைக் கொண்டு வந்துள்ளனர்; இன்றுவரை அதற்கான பொறுப்பை யாரும் ஏற்கவில்லை.
"எமது நாட்டின் வளங்களில் 25 இலட்சம் டொலர்கள் திருடப்பட்டுள்ளன. இதற்கும் யாரும் பொறுப்பேற்கவில்லை. இது ஒரு திறமையற்ற அரசாங்கம் என்பதை மீண்டும் நிரூபிக்கத் தேவையில்லை. திருடர்களைப் பிடிப்போம் என்று கூறிய இந்த அரசாங்கம், இன்று புதிய திருடர்களை உருவாக்கி வருகின்றது.
"நினைவில் கொள்ளுங்கள், சமகி ஜன பலவேகய கூட்டணி இல்லாவிட்டால், இன்றும் பாடசாலை மாணவர்கள் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இன்றும் துறைமுகத்திலிருந்து கொள்கலன்கள் கடத்தப்படுகின்றன. இன்றும் மின்சாரத்துறை அமைச்சர் அதே ஆசனத்தில் அமர்ந்து தரம் குறைந்த நிலக்கரித் திட்டத்தை முன்னெடுக்கின்றார். இன்றும் கருவூலத்திலிருந்து பில்லியன் கணக்கான பணம் திருடப்படுகின்றது.
"நாட்டை அழிப்பதற்கு ஒரு திருட்டு வளையம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார். நாட்டை அழிக்கும் ஒரு 'கார்டெல்' (Cartel) உருவாகியுள்ளதாம். ஆனால் எல்லாவற்றையும் விடப் பயங்கரமானது பெலவத்தையின் 'பொய் வட்டம்' (பச்ச வளல்ல). பெலவத்தையின் பொய் வட்டமே புதிய திருடர்களை உருவாக்குகின்றது.
"மக்களுக்குத் தேவை தீர்வுகள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான பதில்கள். எமது நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள், தோட்டத் தொழிலாளர்கள் என ஏழை மக்கள் இன்று மிகுந்த ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இன்று அநாதரவாக்கப்பட்டுள்ளனர். நடுத்தர வர்க்கத்தினருக்கும், தொழில் வல்லுநர்களுக்கும் இன்று தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை.
"சமகி ஜன பலவேகய மற்றும் சமகி ஜன சந்தானம் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, போலிச் சான்றிதழ்களைக் கொண்டிருந்த சபாநாயகரைச் சில வாரங்களில் வீட்டிற்கு அனுப்பினோம். அதுமட்டுமல்லாமல், தரம் குறைந்த நிலக்கரியை எமது லக்விஜய மின்நிலையத்திற்கு வழங்கிய அமைச்சரையும் செயலாளரையும் வீட்டிற்கு அனுப்பினோம். அரசாங்கத்தின் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் பல குழுக்கள் உள்ளன. 'காய்த்த மரத்திற்கே கல்லடி படும்'. நாட்டை கட்டியெழுப்பும் ஒரே சக்தி சமகி ஜன பலவேகய மாத்திரமே என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். ஜே.வி.பி ஆட்சியில் சீரழிந்த இந்த நாட்டை நாம் நிச்சயமாகக் கட்டியெழுப்புவோம்.
"ரணில் விக்ரமசிங்க அவர்கள் எமது மே தினப் பேரணிக்கு வாழ்த்துச் செய்தியை வழங்கியமைக்காக அவருக்கு நன்றி கூறுகின்றோம். இணைந்து பணியாற்றுவதற்கு ஒரு குழு அவசியம் என அவர் முன்மொழிந்துள்ளார். இந்த நேரத்தில் நான் கூற விரும்புவது, இப்போது குழுக்கள் தேவையில்லை. இப்போது இரு தரப்பும் இணைந்துவிட்டோம். நாம் இணைந்து பணியாற்றுகின்றோம்; ஏனென்றால் அந்தக் குழுக்களுக்குள் புகுந்து எமது ஒற்றுமையைக் குலைக்கச் சதி செய்யும் ஒரு சிறிய தரப்பினர் உள்ளனர். அந்தச் சதிகாரர்களுக்கு நாம் இடமளிக்க மாட்டோம். நாம் நிச்சயமாக ஒன்றிணைந்தே முன்னோக்கிச் செல்வோம்.
"இறுதியாக, அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு ஒரு சவாலை விடுக்கின்றேன்: முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை இப்போதே நடத்துங்கள். இது வெறும் அறிக்கை அல்ல, ஒரு சவால். ஜனாதிபதி அவர்களே, அடுத்த ஆண்டு மே தினப் பேரணியை நாம் எமது முதலமைச்சர்களுடன் இணைந்து நடத்துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
"நான் பாராளுமன்றத்தில் புண்யகுமாரவிடம் (குமார ஜயகொடி) கூறினேன், தவறை ஏற்றுக்கொண்டு பதவியை இராஜினாமா செய்யுமாறு. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. 153 பொம்மைகள் (ஆளுங்கட்சி உறுப்பினர்கள்) நிலக்கரி மோசடி சரியென வாக்களித்தனர். இதனால் இன்றும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு ஆபத்தில் உள்ளதுடன் மக்கள் வரி செலுத்தி வருகின்றனர். புண்யகுமாரவை இராஜினாமா செய்ய வேண்டாம் என்று கூறியது அனுர குமாரதான்.
ஏனெனில் சந்திரிகா அரசாங்கக் காலத்தில் அனுர குமார விவசாய அமைச்சராக இருந்தபோது, உரக் கொள்வனவு டெண்டரின் மேலாளராக இந்தப் புண்யகுமாரவே இருந்தார். அந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாதாரண ஜனநாயகத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒருவர் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை வகிக்க மாட்டார், விலகிச் செல்வார். ஆனால் புண்யகுமாரவிற்கோ அல்லது அவரது குழுவினருக்கோ எந்த வெட்கமும் இருக்கவில்லை. இறுதியில் அந்த குரல் பதிவு காரணமாகவே அவர் விலகினார்.
ஆகவே, இந்த அரசாங்கமும் பொதுமக்களின் பணத்தைச் சுரண்டும் திட்டத்தை ஆரம்பித்துவிட்டது. இந்த ஊழல்வாத அரசாங்கத்தைத் தோற்கடிக்க நாம் ஒன்றிணைவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். நாட்டில் ஊழலற்ற அரசாங்கத்தைக் கட்டியெழுப்ப கொள்கை ரீதியான முன்மாதிரியை வழங்கிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச மாத்திரமே."
"எரான் விக்கிரமரத்ன அவர்கள் கட்சியிலிருந்து விலகவில்லை. கிரிக்கெட் நிர்வாகத்தைச் சுத்தப்படுத்துவதற்கு எரான் அவர்கள் அவசியமானவர்; அதேபோல நிதிக் குழுவில் ஹர்ஷ அவர்கள் இருப்பது மிகவும் முக்கியமானது. ஹர்ஷ டி சில்வா நிதிக் குழுவில் இருப்பதால்தானே பல திருட்டுகள் வெளியே வருகின்றன?
கிரிக்கெட் குறித்தும் ஈரான் குறித்தும் அணுர குமார கூறியவை அனைத்தும் பொய் என்பதை மே தினப் பேரணி நிரூபித்துள்ளது. அரசாங்கமே ஈரான் போன்றவர்களின் திறமையை ஏற்றுக்கொண்டுள்ளமையானது, உண்மையில் சமகி ஜன பலவேகயவிற்கு கிடைத்த ஒரு கௌரவமாகும் (Credit)."


