நடைமுறைப்படுத்துவதற்கும், அவற்றை யாவத்காலப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மகா சங்கத்தினரிடையே ஒழுக்கத்தைப் பேணுவதும், சில துறவிகளின் முறையற்ற நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகேதர திஸாநாயக்க இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், வெளிநாடு செல்ல விரும்பும் துறவிகளுக்கான சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை அமைச்சு உறுதிப்படுத்தும் என்றார்.
முன்னதாக, சர்வதேச அளவில் பயணம் செய்யும் எந்தவொரு துறவியும் தனது விகாராதிபதி, பிரதேச நாயக்க தேரர் மற்றும் அந்தந்த நிக்காயாக்களின் மகா நாயக்க தேரர்களிடம் பரிந்துரைகளைப் பெற வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.
எவ்வாறாயினும், பல்வேறு காரணங்களால் இந்த நடைமுறை காலப்போக்கில் சீர்குலைந்துள்ளதை அமைச்சர் ஒப்புக்கொண்டார். எனவே, வருங்காலங்களில் அனைத்து துறவிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் இந்த அனுமதியை கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அண்மையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறி 21 துறவிகள் கைது செய்யப்பட்டமை ஒரு துரதிஷ்டவசமான நிலைமை என்று குறிப்பிட்ட பிரதி அமைச்சர், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இதன் ஒரு கட்டமாக, விகார தேவாலகம் சட்டத்தில் (Vihara Devalagam Ordinance) திருத்தங்களை மேற்கொள்வது குறித்து சட்ட மா அதிபர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.


