பூர்த்தியான எந்தவொரு பெண்ணும் இரவு நேரப் பணிகளில் ஈடுபடக்கூடிய வகையில் தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்ட 2473/25 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி:
"பெண் சுகாதாரப் பணியாளராக அல்லது உணவு மற்றும் பானங்கள் பரிமாறும் பணியாளராக 18 வயது பூர்த்தியான எந்தவொரு பெண்ணும் மாலை 6 மணிக்குப் பின்னரோ அல்லது மறுநாள் காலை 6 மணிக்கும் முன்னரோ சேவையில் ஈடுபட முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1954 ஆம் ஆண்டின் கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர் (சேவை மற்றும் ஊதியத்தை ஒழுங்குபடுத்தும்) கட்டளையின் 3 ஆம் கட்டளையில், முன்னதாக இருந்த "பெண் மலசலகூடப் பணியாளராக 18 வயது பூர்த்தியான பெண் காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்குப் பின்னர் பணியில் ஈடுபடுத்தப்படலாம்" என்ற வாசகங்களுக்குப் பதிலாக மேற்கூறிய புதிய வாசகங்கள் சேர்க்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, இந்தப் புதிய வர்த்தமானியில் பின்வரும் முக்கிய நிபந்தனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன:
போக்குவரத்து வசதி: ஒரு பெண்ணின் வேலை நேரம் மாலை 6 மணிக்கும் மறுநாள் காலை 6 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் முடிவடையும் சந்தர்ப்பத்தில், வேலை முடிந்த நேரத்திலிருந்து காலை 6 மணி வரை அவருக்குப் பொருத்தமான தங்குமிட வசதியை வழங்குதல் வேண்டும்.
அல்லது, குறித்த பெண் தனது வழக்கமான வசிப்பிடத்திற்குச் செல்வதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குதல் வேண்டும்.
பாதுகாப்பு மற்றும் நலன்புரி: அந்தப் பெண்ணின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பில் முதலாளி (Employer) பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதும் இந்த அதிவிசேட வர்த்தமானியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


