ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பொது நிதி, பாராளுமன்றத்தின் அனுமதியின்றி வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்க நிதிகள் பற்றிய குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவிற்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்திலேயே அவர் இந்த அவசரக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், COPF குழுவின் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தின் முழுமையான விபரம் வருமாறு:
"தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் முதன்மைக் கட்சியாக விளங்கும் ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஊடகங்களுக்கு வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கை ஒன்றை அடிப்படையாகக் கொண்டே நான் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
ஊடக அறிக்கைகளின்படி, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டு, தனித்து வைக்கப்பட்டிருந்த நிதியை, தற்போதைய அரசாங்கம் பேரழிவு மறுசீரமைப்பு மற்றும் அது சார்ந்த ஏனைய தேவைகளுக்காகப் பயன்படுத்தியுள்ளதாக ரில்வின் சில்வா உள்ளடக்க ரீதியாகத் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் பல கருத்துக்களை வெளியிட்டிருந்த போதிலும், பொது நிதி மற்றும் பாராளுமன்றக் கண்காணிப்பு தொடர்பான கடுமையான விவகாரத்தை தோற்றுவிக்கும் இந்த குறிப்பிட்ட கூற்றின் மீது மாத்திரமே நான் எனது அவதானத்தைச் செலுத்துகின்றேன்.
எனது அறிவுக்கு எட்டிய வரையில், மாகாண சபைத் தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எந்தவொரு செலவினத் தலைப்பிற்கோ அல்லது தேவைக்கோ மாற்றுவதற்கோ அல்லது மீள ஒதுக்குவதற்கோ பாராளுமன்றம் எவ்வித அனுமதியையும் வழங்கவில்லை.
ஒருவேளை ரில்வின் சில்வாவின் இந்தக் கூற்று உண்மையானதாக இருக்கும் பட்சத்தில், தேவையான பாராளுமன்ற அனுமதியின்றி இந்த பொது நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதை இது உணர்த்துகின்றது.
எனவே, மேற்குறிப்பிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, அரசாங்க நிதிகள் பற்றிய குழு (COPF) இந்த விடயம் குறித்து முறையான விசாரணை ஒன்றை நடத்தி, மாகாண சபைத் தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மாற்றுவதோ, மீள ஒதுக்குவதோ அல்லது செலவிடுவதோ பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கும் நிதி விதிமுறைகளுக்கும் முரணான வகையில் நடந்துள்ளதா என்பதைக் கண்டறியுமாறு நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இக்குழுவானது இந்த விவகாரம் தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து, அதன் அதிகார வரம்பிற்குள் பொருத்தமானதாகக் கருதப்படும் எந்தவொரு சட்டபூர்வமான நடவடிக்கையையும் எடுக்குமாயின் நான் நன்றியுடையவனாக இருப்பேன்."


