அதிகாரப் பகிர்வு தொடர்பில்

உறுதியான தீர்மானம் எட்டப்படவில்லை என ஜனாதிபதி வடக்கில் வெளிப்படுத்தியுள்ளார்.

"நான் 13, மைனஸ் பற்றி பேசவில்லை. அரசியல் அமைப்பில் உள்ளதை சொன்னேன். என்ன செய்கிறேன் என சொன்னேன். மைனஸும் இல்லை, பிளஸும் இல்லை."

வடக்கிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையின் அலுவலகத்திற்கும் விஜயம் செய்திருந்தார். இதன்போது, 2015ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது புதிய அரசியலமைப்பை கொண்டு வர முயற்சித்த நீங்கள், தற்போது 13 மைனஸ் பற்றி ஏன் பேசுகிறீர்கள் என, தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் சிங்களத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் கூறும் கருத்துகள் சிங்கள மக்களை சென்றடைய வேண்டுமென்பதற்காகவே வடக்கிற்கு வரும்போது சிங்களத்தில் உரையாற்றுவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு பதிலளிப்பது தற்போது மிக முக்கியமான பணி எனவும் வலியுறுத்தியுள்ளார்.

“முக்கியத்துவம் தர வேண்டிய இடத்திற்கு கொடுங்கள். நாட்டில் பெரிய பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளன. பொருளாதார பிரச்சனையாலேயே நாம் இந்த இடத்திற்கு வந்தோம். மக்கள் முதலில் பொருளாதார பிரச்சினைகளையே பார்க்கிறார்கள். நான் இங்கு வந்தாலும் அபிவிருத்தி குறித்து இளைஞர்கள் என்னிடம் கேட்கிறார்கள். தொழில்வாய்ப்பு தொடர்பில். என்னிடம் வேறு எதுவும் என்னிடம் கேட்பதில்லை. இன்றும் நேற்றும் நான் சந்தித்த எல்லா இளைஞர்களும் இந்தக் கேள்வியைக் கேட்டனர்.”

உதயன் பத்திரிகையின் பிரதம நிறைவேற்று அதிகாரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், தலைமை ஆசிரியர் பிரபாகரன் உள்ளிட்ட ஊழியர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய அவர், அவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, "யாழ்ப்பாணம்-கிளிநொச்சி" நீர் விநியோகத் திட்டத்தின் தாளையடி கடல்நீரை நன்னீராக்கும் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வடக்கிற்கு விஜயம் செய்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் நீர் வழங்கல் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் திட்டம் மற்றும் ‘யாழ். நதி’ மூலம் வடக்கின் குடிநீர் தேவைக்கு முழுமையான தீர்வுகளை வழங்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியதோடு, யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்ள ஆரம்பிக்க வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் இடம்பெற்ற இளைஞர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் ஒருபோதும் மறக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

தேர்தல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்ற கடன் பெற்றதாலேயே நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதே தவறை மீண்டும் நடக்க அனுமதிக்காமல் புதிய பொருளாதார மற்றும் அரசியல் முறையில் முன்னேறிச் செல்வதற்கு பங்களிப்பது நாட்டிலுள்ள அனைத்து கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் ஏனையவர்களின் பொறுப்பாகும் என, யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுடனான சந்திப்பில் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நல்லை ஆதீனம் ஸ்ரீ சோமசுந்தரம், யாழ்ப்பாணம் ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம், யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் ஆகியோரையும் சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி