இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நேற்றைய மத்திய குழு மற்றும் பொதுக் குழுக்களின் கூட்டங்களின் “திருவிளையாடல்” குறித்து, இன்று

விலாவாரியாக சில விடயங்களை எழுத வேண்டியுள்ளது.

முதலில், கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் பற்றிய குறிப்பு அவசியமாகிறது.

தமிழரசுக் கட்சி போன்ற ஒரு பழமையான, பெருமைமிக்க நிறுவனத்தை முன்னின்று வழிகாட்டி நடத்துவதற்கு நான் ஒன்றும் புதியவன் அல்லன், முதிர்ந்த தலைவன்தான் என்பதை பெரும்பாலும் செயலிலும் நேற்று அவர் நிரூபிக்க முயன்றிருக்கின்றார்.

 தலைவர் தெரிவில் தமது வெற்றிக்காகத் தம்முடன் அணி சேர்ந்த தரப்புக்களுடன் ஒன்றிணைந்து 'சிறுமைத்தனமான' அரசியல் செய்வதை விடுத்து, தலைவன் என்ற முறையில் எல்லோரையும் அரவணைத்து, ஒன்றாக்கி, உட்கட்சி மோதல்களைப் புறந்தள்ளி, ஐக்கியபட்ட முயற்சிக்காக அவர் இயன்றளவு இறங்கி வந்திருக்கிறார்.

முதிர்ந்த அரசியல்வாதியாக அவர் செயல்பட முனைந்தமையால், இதுவரை அவரோடு சேர்ந்திருந்த சிலர் அவரைத் துரோகியாக சித்திரிக்கும் அவலமும் அவருக்கு நேர்ந்திருக்கின்றது.

 கட்சியின் தலைவராக வந்தால் கட்சித் தலைவராகவே செயல்படுவேன், கன்னையின் தலைவராக அல்லன் என்ற அவரது பிடிவாதம் அவருக்கு பல நெருக்கு வாரங்களை தந்த போதிலும் அனைவரையும் அரவணைத்துத்தான் கட்சியை வழிகாட்டுவேன் என்ற அந்தப் பிடிவாதம் எனக்குப் பிடித்திருக்கிறது.

 இது விடயத்தில் கடந்த சில நாள்களாக வசனங்களுக்கு இடையில் நான் கோடி காட்டி வந்த ஐயுறவுகளை நான் வாபஸ் வாங்குகிறேன். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், குலநாயகம் ஆகியோரின் இல்லங்களுக்கு சிறீதரன் 'வீடு தேடி விசிட்' அடித்தார். இந்த வரிசையில் கட்சியின் பொருளாளர் கனகசபாபதியின் வீட்டுக்கும் அன்று அவர் சென்றிருந்தார்.

 இந்த நால்வரையும் சேர்த்துத் தான் நமது ஊடக வட்டாரங்கள் 'தமிழரசு கட்சியின் மார்ட்டின் வீதி வயோதிப மடம்' என்று குறிப்பிட்டு வருவது வழமை. கட்சியின் மூத்த உறுப்பினர்களான இந்த நால்வருமே 75 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த நால்வர் வீடுகளுக்கும் சென்ற கட்சியின் புதிய தலைவர் சிறீதரன் அந்த நால்வரின் கால்களையும் தொட்டு, வணங்கி, ஆசீர்வாதம் பெற்றார் என்ற செய்தி அறிந்து நெகிழ்ந்தேன்.

 அப்படித் தன் பணியை ஆரம்பிக்க முயலும் ஒருவர் நிச்சயம் சகல தரப்புகளையும் அரவணைப்பார் என்று நம்பலாம். என்ன, அதன் காரணமாக அவருடன் அணி சேர்ந்தோரே அவரைத் திட்டும் நிலைமை ஏற்பட்டு விட்டமை பரிதாபத்துக்கு உரியது.

 நேற்று காலையில் முதலில் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னரும், கூட்ட ஆரம்பத்திலும் சில விடயங்கள் நடந்தன. நேற்றைய கூட்டங்கள் இப்படி கட்டவிழ்வதற்கு அவைதான் காரணம் என்று நான் நினைக்கிறேன். கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன் நேற்றும் முன்தினமும் தொலைபேசியில் சிறீதரனுடனும் சுமந்திரனுடனும் பேசினார். இருவரும் சேர்ந்து இணக்கமாகப் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி, நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் அன்புக் கட்டளை இட்டார் எனத் தெரிகின்றது.

இருவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர். வேறு சில முக்கிய தரப்புக்களும், ஒன்று அஞ்சி இன்று நடைபெற வேண்டிய பட்டு, எல்லோரையும் அரவணைத்து, கூட்டங்களை நடத்தி, நிர்வாகிகளைத் தேர்வு செய்து, இணக்கப்பாட்டை ஏற்படுத்துங்கள் என்று உரிமைக் கட்டளை பிறப்பித்திருந்தன என நான் அறிந்திருந்தேன்.

 நேற்று முதலில் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பமான போது முல்லைத்தீவு பிரதிநிதி பீற்றர் இளஞ்செழியன் மேற்படி சிறீதரன், சுமந்திரன் இருவருக்கும் ஒரு செம டோஸ் கொடுத்தார். 'நீங்கள் இருவரும் இணங்கி ஓர் சுமூகமான ஏற்பாட்டுக்கு வந்து, ஒழுங்கமைப்பில் நிர்வாகிகள் தெரிவை நடத்தி முடிக்க வேண்டும். இல்லையேல் கட்சி மாநாடு தொடர்பில் நீங்கள் அளவுக்கு மீறி பல சட்டப் பிழைகளை இழைத்துள்ளீர்கள்.

நான் நீதிமன்றம் செல்வேன். கட்சிக்காக சுமந்திரன் வாதிட்டாலும் சரி, தவராஜா வாதிட்டாலும் சரி, வேறு யாரேனும் வாதிட்டாலும் சரி, நான் வழக்கில் வெல்வேன். கட்சி கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.'' - என்று துணிவுடன் காட்டமாக எச்சரிக்கை விடுத்தார் பீற்றர் இளஞ்செழியன். இவ்விடயங்களே ஒன்றுபட்டு கட்சியை முன்னெடுக்க வேண்டுமென்ற நெருக்க டியை எல்லா தரப்பினருக்கும் ஏற்படுத்தின.

 கூட்டத்துக்கு முன்னரே சுமந்திரனும் சிறீதரனும் தமக்குள் பேசிக்கொண்டனர். 'இணக்கம் வருவதானால் நீங்கள் தலைவராகும்போது நான் பொதுச் செயலாளராக இருந்தால்தான் அது பொருத்தமான விடயமாகும்'' - என்று சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

 சுமந்திரன் பொதுச் செயலாளராவதில் தமக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று தெரிவித்த சிறீதரன், ஆயினும் அது கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று கிழக்குத் தரப்பு வற்புறுத்துவதில் நியாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

 அப்படியானால் தனக்குப் பதிலாக அப்பதவிக்கு கிழக்கின் மூன்று மாவட்டங்களின் கட்சித் தலைவர்களான கலையரசன், குகதாசன், சாணக்கியன் ஆகிய மூவரில் ஒருவரைத் தலைவரே பரிந்துரைத்து செயலாளராக்கலாம் என்று சுமந்திரன் கூறினார். இதையொட்டி சாணக்கியனை கடுமையாக விமர்சித்து சில கருத்துக்களை சிறீநேசனும் வேறு சிலரும் தெரிவித்தனர். அவை பற்றிய விடயங்களை நாளை பார்ப்போம்.

 இறுதியில் குகதாசனை செயலாளராக்கும் முடிவு எட்டப்பட்டது. ஏனைய பதவிகளுக்கான பிரேரிப்புகளும் ஏகமனதாக - இணக்கமாக - பேசிக் கல்ந்தாய்ந்து செய்யப்பட்டன. அங்கு பேசி இணக்கம் காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில் நிர்வாகிகள் பட்டியலைத் தயாரித்து, அதனைப் பொதுக்குழுவில் சமர்ப்பித்து, அங்கீகாரம் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

 ஆனால் அங்கு அந்த முடிவுகளுக்கு இணங்கிப் போன சிறீநேசன் போன்றோர் பின்னர் பொதுக்குழுவில் அது சமர்ப்பிக்கப்பட்ட சமயம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் வாக்கெடுப்பு நடைபெற வேண்டிய தேவை இருந்தது.

 வாக்கெடுப்பெல்லாம் நடந்து, சுமுகமான முடிவு எட்டப்பட்டு, கூட்டம் முடிவடைந்த பின்னர், மாலையில் தம்மைச் சுற்றி நின்று சத்தமிட்ட சில தரப்புகளுக்கு மாநாடு ஒத்தி வைக்கப்படுகின்றது, அது அடுத்த வாரம் அளவில் நடக்கும் என்ற ஓர் அறிவிப்பைத் தம்பாட்டில் விடுத்தார் மாவை சேனாதிராஜா. இவ்விடயம் தொடர்பில் மாவைக்குள்ள அதிகாரம் பற்றிய விடயங்கள் விளக்கமாக இன்றைய முற்பக்கத் தலைப்புச் செய்தியிலும் ஆசிரியர் தலையங்கத்திலும் விரிவாக ஆராயப்பட்டு இருக்கின்றன.

 இன்றைய மாநாட்டுத் திகதிக்கு பின்னர் மாவை சேனாதிராஜா வெளிநாடு பறக்க விருக்கிறார். அவரின் இரண்டாவது மகனுக்கு பெப்ரவரி நாலாம் திகதி சிங்கப்பூரில் திருமண பதிவு இடம்பெற இருப்பதாகத் தெரிகிறது. அடுத்து வரும் நாள்களில் அவர் சிங்கப்பூர் பறந்தால், அங்கிருந்து திரும்ப சில வாரங்களாகும்.

இன்று நடைபெற வேண்டிய மாநாடு நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டால் தாம் சிங்கப்பூர் சென்று திரும்பி வந்து, புதிய திகதியில் அதை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கும் வரை தாமே கட்சித் தலைவராக நீடிப்பார் என்று தவறான கற்பிதம் செய்து கொண்டுதான் மாவை சேனாதிராஜா இந்த அறிவிப்பை கொடுத்திருக்கின்றார் போலும்.

 கட்சி மாநாட்டை நடத்தாமல் இழுத்தடித்து பதவியில் தொடர்வதற்கு அவர் காட்டும் நப்பாசையை இந்தப் பத்தியில் நீண்ட காலமாக நான் சுட்டிக்காட்டி வரு கிறேன். அதன் ஓர் அங்கம்தான் - மாவையின் முயற்சிதான் - நேற்று அரங்கேறி இருக்கின்றது என்று நான் நினைக்கி றேன்.

 மத்திய குழுவில் இணங்கிய விடயத்தை ஓரிரு மணித்தியாலங்களில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் மறுத்துரைத்து, அதற்கு மாறான நிலைப்பாட்டை எடுத்த சிறீநேசன் போன்றவர் களை கட்சியின் செயலாளராக்கி, கட்சியைக் கொண்டு நடத்துவது சிக்கலாக இருக்கும் என்பது நேற்று வரை அவரோடு அணி சேர்ந்து இருந்த சிறீதரனுக்கு இப்போது நன்கு புரிந்து இருக்கும் என எதிர்பார்க்கலாம். திருகோணமலையின் இன்னொரு நண்பர் ஒரு கொசுறுத் தகவலைச் சொன்னார்:

'நீங்கள் யோகேஸ்வரனை காட்டமாக விமர்சிக்கும் பாணியில் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று முற்பகல் வரை இணக்கமான நிலைப்பாட்டை ஏற்படுத்தி, கிழக்கில் குகதாசனையாவது பொதுச் செயலாளராக்கி, நிலைமையை சமூகமாக்கு வதற்கு யோகேஸ்வரன் கடுமையாக உழைத்தார்'' - என்றார் அவர்.

 சிறீதரனும் சுமந்திரனும் இன்று மதியம் ஒன்றாகச் சேர்ந்து மாவை சேனாதிராஜாவின் வீட்டுக்கு நேரில் சென்று, இப்போது உள்ள நிலைமைகளை விளக்கி, ஏற்கனவே தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளை கொண்டு கட்சியை ஒழுங்காக நடத்துவதற்கான ஏற்பாடுகளை - வழிவகைகளை - செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இதே சமயம் இந்தப் பிரச்சினையை முடித்துக் கொண்டு நாளை கிழக்கிற்கு - குறிப்பாக மட்டக்களப்புக்கு - செல்லும் சிறீதரன் அங்கு நிர்வாகிகள் தெரிவில் இணக்க ஏற்பாட்டைச் செய்தமைக்காக சீற்றங் கொண்டிருக்கும் தமது அணி உறுப்பினர்களை சமாளித்து அவர்களை வழிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.

-காலைமுரசு

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி