1200 x 80 DMirror

 
 


கருக்கலைப்புக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தும் உலக நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது.
இதேவேளை, இலங்கையில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தாய் இறப்புக்கான மூன்றாவது பொதுவான காரணியாகக் பாதுகாப்பற்ற கருக் கலைப்பு அமைகிறது.

2016 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இலங்கையில் ஒவ்வொரு நாளும் 658 கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்தது.


சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு காரணமாக, 10 முதல் 13 வீதமான தாய்மார்கள் உயிரிழப்பதாக 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது.


பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கு எதிராக பெண்களின் சார்பாக சமூக நல அமைப்புகள் குரல் எழுப்பிய போதும் இது நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறையின் ஒரு சான்றாக தொர்ந்து வருகின்றது.


கடந்த ஆண்டு டிசம்பரில், குடும்ப உறுப்பினர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த 13 வயது சிறுமி சட்டவிரோத கருக்கலைப்பின் விளைவாக உயிரிழந்தமை நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் அது நாட்டின் ஏனைய பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்போது மறைந்து போய்விட்டது.


பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்களுக்குக் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்திற்குச் சமீபத்தில் அழைப்பு விடுத்ததையடுத்து இந்த விடயங்கள் மீண்டும் பேசும் பொருளாகியுள்ளன.


1883 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் படி, ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தைத் தவிர, வேண்டுமென்றே கருச்சிதைவை ஏற்படுத்துபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.


அத்தோடு அவ்வாறு கருக்கலைப்பு செய்யப்பட்டது ஒரு பெண் "குழந்தை என்பது உறுதிப்படுத்தப்பட்டால், தண்டனை ஏழு ஆண்டுகளாக அதிகரிக்கலாம்.


அதேபோல் கருக்கலைப்பு செய்பவருக்கும், கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்ணுக்கும் இதே தண்டனைகள் வழங்கப்படும் எனச் சட்டம் சொல்கின்றது.


பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்களுக்குக் கருக்கலைப்பு செய்வதை சட்டப்பூர்வமாக்கும் யோசனை பல தசாப்தங்களாக முன்வைக்கப்பட்டன.


2013 இல் இலங்கையின் சட்ட ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகள் உட்பட சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், ஆட்சிக்கு வந்த எந்த ஒரு அரசும் அதனை சட்டமாக்கவில்லை.


இந்த முன்மொழிவுகளுக்கு மத தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்புகளை வெளியிட்டனர்.
எனினும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான, கருக்கலைப்பை மறுப்பது, மனித உரிமைகளைப் பாதிப்பதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது.


இந்த சட்ட திருத்தத்தின் ஊடாக பெண்களின் வாழ்வதற்கான உரிமைகள் பேணப்படுவதோடு, ஆரோக்கியம், மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற இழிவான சிகிச்சையிலிருந்து பெண்களுக்கு விடுதலை அளிக்க முடியும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது.


அத்தோடு பெண்களுக்கு தமது குழந்தைகளுக்கு இடையிலான இடைவெளியைப் பேணவும் உடல் ஒருமைப்பாடு, பாகுபாடு காட்டாமை, தனியுரிமை மற்றும் சமத்துவம் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் உரிமை உட்பட பல மனித உரிமைகளைப் பாதிப்பதாகவும் வலியுறுத்துகின்றது.


அனைத்து பெண்களும் கருக்கலைப்பு செய்ய அனுமதிப்பதன் மூலம் பெண்களின் சம உரிமையை நிலைநிறுத்தவும், சட்டத்தைச் சீர்திருத்துவதற்கும் அரசாங்கம் விரைந்து செயல்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒரு அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி