எரிபொருள் இறக்குமதியில் தடைகள் ஏற்படக்கூடும் என்பதால், தற்போதுள்ள கையிருப்புகளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கும் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனத் தலைவர்களுக்கு நேற்று (23) இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து மேலாண்மை:
-
கூட்டுப் போக்குவரத்து: உத்தியோகத்தர்கள் பணிக்கு வருகை தரும்போது தனித்தனி வாகனங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பொதுப் போக்குவரத்து அல்லது குழுப் போக்குவரத்து (Staff Transport) முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
-
களப்பணிகள்: வெளிக்களப் பணிகளுக்காகக் குறைந்தளவிலான வாகனங்களைப் பயன்படுத்தும் வகையில் தினசரி போக்குவரத்துத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
எரிசக்தி மற்றும் மின்சாரச் சேமிப்பு:
-
இயற்கை ஒளி: மின்விளக்குகளுக்குப் பதிலாகச் சாத்தியமான போதெல்லாம் இயற்கை வெளிச்சத்தை (Sky lights) பயன்படுத்த வேண்டும்.
-
மின்விசிறிகள்: குளிரூட்டிகளுக்கு (Air Conditioners) பதிலாக மின்விசிறிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
-
குளிரூட்டி பயன்பாடு: காலை வேளைகளில் ஜன்னல்களைத் திறந்து வைப்பதோடு, ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் குளிரூட்டிகளை அணைத்து வைக்க வேண்டும். குளிரூட்டியின் வெப்பநிலையை 26°C அல்லது அதற்கும் அதிகமாகப் பேணுவது கட்டாயமாகும்.
-
மின்சாரச் சிலாகை (Lifts): மின்தூக்கிகளின் பயன்பாட்டைக் குறைத்து, முடிந்தவரை படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.
-
வீதி விளக்குகள்: அதிஉயர் பாதுகாப்பு வலயங்களைத் தவிர ஏனைய வீதிகளில் மின்விளக்குகளை அணைத்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
தொலைக்காட்சி: அலுவலகங்களில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பகல் நேரங்களில் அணைத்து வைக்க வேண்டும்.
அலுவலகச் செயல்பாடுகள்:
-
ஒன்லைன் முறைமை: கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை இணைய வழியாக (Online) நடத்த வேண்டும். அனைத்து ஆவணங்களையும் மின்னஞ்சல் அல்லது WhatsApp மூலம் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
-
வீட்டிலிருந்தே வேலை: தொழில்நுட்ப வசதிகள் இருப்பின், ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்காமல் இணைய வழியாகச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
-
நேர மேலாண்மை: உத்தியோகபூர்வ வேலை நேரத்திற்குப் பின்னரும் வார இறுதி நாட்களிலும் (அத்தியாவசியத் தேவைகளைத் தவிர) அலுவலகங்களை மூடி வைத்திருக்க வேண்டும்.
மக்களுக்கு முன்மாதிரியாக இருத்தல்:
இந்த சர்வதேச நெருக்கடி காலத்தில் அனைத்து அரச அதிகாரிகளும் பொதுமக்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும் என்றும், தேசிய எரிசக்தி பாதுகாப்புக்காகத் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


