(ஈதுல் ஃபித்ர்) இன்று (21) சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
புதிய பிறை தென்படாத காரணத்தினால், 30 நாட்கள் புனித ரமழான் நோன்புக் காலத்தை நிறைவு செய்து, ரமழான் பெருநாளை இன்று கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு மாத காலமாக கடைபிடிக்கப்பட்ட ரமழான் நோன்பை நிறைவு செய்து, இஸ்லாமிய பக்தர்கள் ஈதுல் ஃபித்ர் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர்.
ரமழான் என்பதன் முக்கியத்துவம்:
-
புனித மாதம்: ரமழான் என்பது இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் நோன்பு நோற்பது, சுய ஒழுக்கத்தைப் பேணுவது மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபடும் ஒரு புனித மாதமாகும்.
-
அல்குர்ஆன் இறக்கம்: இஸ்லாமியர்களின் புனித நூலான அல்குர்ஆன், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன்முதலில் அருளப்பட்ட மாதமாக இது போற்றப்படுகிறது.
-
நோன்பு முறை: ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் முஸ்லிம்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு மற்றும் நீர் உட்கொள்ளாமல் நோன்பு நோற்கின்றனர்.
-
காலம்: ரமழான் எப்போதும் 12 மாதங்களைக் கொண்ட இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதத்தில் இடம்பெறுகிறது.
அரசு ஊழியர்களுக்கான விசேட சலுகைகள்:
ரமழான் காலத்தில் முஸ்லிம் அரச அதிகாரிகள் தமது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வசதியாக பொது நிர்வாக அமைச்சினால் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி, பிப்ரவரி 19ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை பிரார்த்தனை மற்றும் மத நடவடிக்கைகளுக்காக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சந்தர்ப்பங்களை வழங்குமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அமைதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்த ஈதுல் பித்ர் பெருநாளாக அமைய வாழ்த்துக்கள்
உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பு, உலக ஆசைகளில் இருந்து விடுபட்டு, அர்ப்பணிப்பு மற்றும் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது.
ரமழான் நோன்பு முழு உலக சமூகத்திற்கும் மிக முக்கியமான மனிதாபிமான மற்றும் சமூகச் செய்திகள் பலவற்றை ஏந்தி வருகின்றது. பக்தர்களின் உள்ளங்களில் சகவுணர்வை விதைப்பதே ரமழானின் உன்னதமான நோக்கமாகும்.
அதாவது, மற்றவர்களின் பசி மற்றும் அதன் வலியைத் தனது சொந்த அனுபவமாக உணர்ந்து, சகோதரத்துவ உணர்வுடன் மற்றவர்களை அரவணைக்கத் தயங்காத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும். இக்காலப்பகுதியில் ரமழானின் ஏனைய விழுமியங்களான அமைதி, சமத்துவம் மற்றும் சகவாழ்வு போன்ற உன்னத குணங்களால் முஸ்லிங்களின் நடத்தை பண்படுத்தப்படுகிறது.
ஒரு மாத காலம் அவர்கள் நோன்பு நோற்பதோடு அந்தக் காலப் பகுதியானது , அவர்களின் ஆன்மீக மேம்பாட்டிற்கான காலமாகும். எனவே, ரமழான் மாதம் என்பது உலகிற்கு வாழ்வியல் முன்மாதிரி மூலம் மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் ஒரு காலமென நான் நம்புகிறேன்.
முழு உலகமும் கடினமான மற்றும் சவாலான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் ஒரு தருணத்திலே இம்முறை ஈதுல் பித்ர் பெருநாளை நாம் கொண்டாட வேண்டியுள்ளது. ரமழான் மாதத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நோன்பு மற்றும் பிரார்த்தனைகளின் ஆசீர்வாதத்தால், இந்த இக்கட்டான நிலைமை விரைவில் நீங்கி, அனைவரும் எதிர்பார்க்கின்ற, அனைவரினதும் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்படுகின்ற, அமைதி, சுபீட்சம் மற்றும் சகவாழ்வு நிறைந்த ஒரு உலகம் உருவாக வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்.
அதேபோல், ஏனைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டது போலவே, இந்தச் சவாலையும் தைரியமாக எதிர்கொண்டு, அதனை முறையாக முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிப்புகள் அல்லது சரிவுகள் இன்றி முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக அரசாங்கம் என்ற ரீதியில் நாம் உறுதியான இலட்சியத்துடன் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.
பேதங்களை மறந்து, இந்த வேலைத்திட்டத்துடன் கைகோர்த்து, அதற்குத் தேவையான பலமான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், இலங்கை வாழ் மற்றும் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் சகோதரர்களுக்கு அமைதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்த ஈதுல் பித்ர் பெருநாளாக அமைய எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி தனது வாழ்த்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சமாதானமான மற்றும் சமூக நீதிக்கு அர்ப்பணிக்கப்படும்
உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் மாத நோன்பை நிறைவு செய்யும் இந்த தருணத்தில், இஸ்லாம் நமக்கு கற்றுத் தரும் மானுட தர்மங்களை இன்னும் ஆழமாக சிந்திப்பது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு முஸ்லிம் நிறைவேற்ற வேண்டிய ஐந்து கடமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவையாவன: நம்பிக்கை, ஐவேளை தொழுகை, ரமழான் மாத நோன்பு, ஸகாத் அதாவது ஏழை வரி செலுத்துதல் மற்றும் ஹஜ் யாத்திரை ஆகியனவாகும். இந்த ஐந்து கடமைகளிலும் முஸ்லிம்களுக்கு சுட்டிக்காட்டப்படுவது, அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த சமூகத்திற்கு வழிகாட்டும் ஒரு வாழ்க்கை முறையின் அவசியமாகும். ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் நோன்பு, அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் ஆன்மீகத் தூய்மை பற்றிய பல பாடங்களை கற்றுத் தருகிறது.
இந்தத் தருணத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தோன்றியுள்ள போர்ச் சூழலுக்கு தீர்வு காண்பதற்கான முக்கியமான வழி, இஸ்லாம் காட்டும் பொறுமை, கருணை, ஒற்றுமை மற்றும் மனிதநேயமே என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
பொறுமையற்ற தன்மையிலும் பொறுமை கொண்டும், வெறுப்பிலும் கருணை கொண்டும், பிளவிலும் ஒற்றுமையை கட்டியெழுப்பும் ஒரு செயல்திட்டத்தின் மூலம் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். அதற்காக மேம்பட வேண்டியது மனிதநேயமே.
ஒரு மோதலை தீர்ப்பதற்கு வலிமை அல்லது சட்டம் மட்டும் போதாது. அதற்கு மக்களின் சிந்தனையை உறுதியான நல்வழியில் கொண்டுசெல்வது முக்கியமாகும். ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் காட்டுவது, தம் மனதிற்குள் கட்டியெழுப்பும் வலிமையே ஆகும். இந்த தருணத்தில் உண்மையான ரமழான் கொண்டாட்டமாக நாம் உணர்ந்துகொள்ள வேண்டியது அதுவே. அத்தகைய மனித சிந்தனைகள் மேலும் நல்ல, சமாதானமான மற்றும் சமூக நீதிக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு தருணத்திற்கு உலகில் மாற்றம் நிகழட்டும் என்று நாம் இந்த நேரத்தில் பிரார்த்திப்போம்.
அத்தகைய சிந்தனைகள் உலக மக்களின் மனங்களில் ஒளிர்ந்தால், போரின் தீப்பொறிகள் அணைந்து, அமைதியின் விளக்குகள் உலகெங்கும் ஏற்றப்படுவதில் சந்தேகமேயில்லை.
உலக மக்கள் அனைவருக்கும் மற்றும் இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இனிய ஈதுல் பித்ர் நோன்புப் பொருநாள் நல்வாழ்த்துகள் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவ பிரார்த்திப்போம்!

"ஈதுல் பித்ர்" பெருநாள் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு
மத்திய கிழக்கில் மூண்டுள்ள யுத்தம் முடிவுக்கு வந்து நிரந்தர சமாதானம் நிலவுவதற்கு "ஈதுல் பித்ர்" பெருநாள் தினத்தில் அல்லாஹ்வை பிரார்த்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள "ஈதுல் பித்ர்"வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புனித ரமழான் மாதம் ஆன்மீகப் புத்தெழுச்சி , தியாக மனப்பான்மை ஆகியவற்றுடன் எல்லாம் வல்ல அல்லாஹ்வுடன் நெருக்கமான தொடர்பை பேணக்கூடிய சிறந்த கால கட்டமாக இருந்தது. ஆயினும், இந்த ஆண்டு, உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களை மிகவும் துயரமான காலத்தில் இந்த புனித மாதம் கடந்து செல்கிறது.
ஏனெனில், முஸ்லிம்கள் வாழும் பல்வேறு நாடுகளில், குறிப்பாக மேற்கு ஆசியாவில் ஈவிரக்கமற்ற யுத்த கெடுபிடிகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. எனவே, இம்முறை நாம் கனத்த இதயங்களுடன் இந்த பெருநாளைச் சந்திக்கிறோம்.
தியாகம் மற்றும் விடாமுயற்சியின் தாற்பரியத்தை ரமழான் மீண்டுமொரு முறை நமக்கு நினைவூட்டியிருக்கிறது. நம் படைப்பாளனான அல்லாஹ்வை நெருங்கவும், ஆன்மீக வழிகாட்டல்களைப் பெறவும் அந்த நற்பண்புகளில் உறுதியாக நிலைத்து நிற்கவும் அது நம்மைத் தயார் படுத்தியிருக்கிறது.
ஒப்பீட்டளவில் பார்க்கும் போது தற்போதைய சூழ்நிலையில் , இலங்கையில் வெள்ளப் பெருக்கு, மண் சரிவு போன்ற காலநிலை சீர்கேடுகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவித்துவரும் துன்பங்களுக்கு அப்பால், உலகின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியில் நோன்பின் மாண்புகளை நன்கு அனுசரித்து, உச்சக் கட்ட சகிப்புத் தன்மையுடன் பொறுமையைப் பேணி வருவதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நாங்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
அதே வேளை, காஸா வில்,பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் மூர்க்கமான தாக்குதலாலும், இப்பொழுது ஈரான் மீதுஅடர்ந்தேற்றப்பட்டுள்ள அமெரிக்க-இஸ்ரேல் யுத்தத்தினாலும் குறிப்பாக மத்திய கிழக்கில் உயிரிழப்புகள் மற்றும் ஏனைய பாதிப்புகளினால் துன்புறுபவர்களுக்காக எங்கள் இதயங்கள் இரத்தத்தைச் சிந்துகின்றன.
மத்திய கிழக்கில் மூண்டுள்ள யுத்தம் அவசரமாக முடிவுக்கு வருவதற்கும், நிரந்தரமான சமாதானமும், நீதியும் நிலைநாட்டப்படுவதற்கும் இறைவனிடம் நாங்கள் மனம் உருகப் பிரார்த்திப்போமாக.
இந்தப் பெருநாள் நமது சகோதரத்துவப் பிணைப்புகளை வலுப்படுத்தி, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஒத்துழைக்க நம்மை ஊக்குவிக்குமாக.
அனைவருக்கும் இனிய "ஈதுல் பித்ர்" பெருநாள் வாழ்த்துக்கள்
ஈத் முபாரக்!


