உலகம் முழுவதும் உள்ள நான்கு பெண்களில் ஒருவருக்குத் தமது கணவர் அல்லது துணையுடன் உடலுறவு கொள்வதை மறுப்பதற்கான எவ்வித அதிகாரமும் இல்லை என ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 19ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய உலகளாவிய அறிக்கையொன்றில் இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களின் சம்மதம் தொடர்பான இந்த நெருக்கடி பிராந்திய ரீதியில் மிகக் கடுமையான வடிவம் பெற்றுள்ளது:
-
மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா: பெண்களில் ஏறக்குறைய 45 சதவீதமானோருக்குத் தமது திருமணத்திற்குள் "இல்லை" எனக் கூறும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
-
கிழக்கு, தெற்கு ஆபிரிக்கா மற்றும் அரபு நாடுகள்: மூன்று பெண்களில் ஒருவருக்கு (33 சதவீதம்) இந்த அழுத்தம் ஏற்படுகிறது.
-
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியம்: பத்து பெண்களில் ஒருவருக்குத் தமது மறுப்பை வெளிப்படுத்த வாய்ப்பில்லை.

இளம் பெண்களுக்கே அதிக ஆபத்து
அங்கோலா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, கசகஸ்தான், மலாவி, மாலி, நைஜீரியா, தஜிகிஸ்தான் மற்றும் சாம்பியா ஆகிய எட்டு நாடுகளின் தரவுகள் இவ்வறிக்கையின் ஊடாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
45 முதல் 49 வயது வரையிலான வயது வந்த பெண்களுடன் ஒப்பிடும்போது, 15 முதல் 19 வயது வரையிலான இளம் பெண்களுக்குத் தமது மறுப்பைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும். நெருங்கிய துணைவர்களால் அதிகளவில் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது இந்த இளம் வயதுப் பெண்களே என்பதும் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சட்டத்தின் ஓட்டைகளுக்குள் சிக்கிய வாழ்க்கைகள்
ஆபிரிக்கக் கண்டம் முழுவதும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் 'மபுடோ சாசனம்' (Maputo Protocol) ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதிலும், இவ்வாறான நிலைமை நீடிப்பது கவலையளிப்பதாக 'Equality Now' மனித உரிமை அமைப்பின் சட்டத்தரணி ஜீன்-பால் முருங்கா (Jean-Paul Murunga) தெரிவித்துள்ளார்:
"திருமணம் என்பது நிரந்தரமான உடலுறவு அனுமதிச் சீட்டல்ல. சுதந்திரமான சம்மதம் இன்றி இடம்பெறும் எந்தவொரு உடலுறவும் பாலியல் வன்முறையாகும்."
ஐவரி கோஸ்ட், எத்தியோப்பியா மற்றும் தெற்கு சூடான் உள்ளடங்கலாக ஏழு நாடுகளில், திருமணத்திற்குள் இடம்பெறும் பலாத்காரங்களைச் சட்டரீதியாகக் குற்றமாக அங்கீகரிப்பதில்லை.
தான்சானியா மற்றும் எரித்திரியா போன்ற நாடுகளில், கணவன் மனைவி பிரிந்து வாழும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே இது குற்றமாகக் கருதப்படுகிறது.
குழந்தைத் திருமணங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள சில நாடுகளில் சிறுமிகளுக்கு எவ்விதச் சட்டப் பாதுகாப்பும் இல்லை. உதாரணமாக, காபோன் (Gabon) நாட்டில் ஒரு நபர் கடத்திச் சென்ற சிறுமியைத் திருமணம் செய்து கொண்டால், அந்தத் திருமணம் சட்டத்தால் இரத்துச் செய்யப்படும் வரை அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது.

பாரம்பரியம் மற்றும் மதக் கோட்பாடுகளின் தாக்கம்
திருமணமான பின்னர் மனைவி கணவனுக்கு நிரந்தரமான சம்மதத்தை வழங்கிவிட்டார் என்ற தவறான எண்ணமே இச்சட்டங்களுக்குப் பின்னால் உள்ளது. பல பகுதிகளில் நிலவும் மத நம்பிக்கைகள் ஊடாகவும் இந்தக் கருத்து மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
சியரா லியோனின் இளம் பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் 'A Girl At A Time' அமைப்பின் நிறுவனர் அலிமாட்டு டிமோனேகேன் (Alimatu Dimonekene) சுட்டிக்காட்டுகையில், திருமணத்திற்குள் சம்மதம் என்பது தொடர்பான கலந்துரையாடல் ஆபிரிக்காவிற்குள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு ஆபிரிக்கச் சமூகத்தில் திருமணத்தின்போது மணப்பெண்ணின் குடும்பத்திற்குப் பணம் அல்லது சொத்து வழங்கும் மரபு (Bride Price) காரணமாக மனைவி கணவனின் சொத்தாக மாறுகிறார். அதன்பின் கணவனின் எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்க அவருக்கு அனுமதியில்லை.
இதன் காரணமாகத் தமக்கு இழைக்கப்படும் பாலியல் பலாத்காரங்களைக் குற்றம் எனக் கூறுவதற்குப் பல பெண்கள் தயங்குகின்றனர்; அதற்குப் பதிலாக அவர்கள் சமாதானங்களைத் தேடிக்கொண்டோ அல்லது தங்களையே குற்றம் சாட்டிக்கொண்டோ மௌனமாக இருக்க முற்படுகின்றனர்.


