Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

ரோயல் கல்லூரி விடயத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு சூழ்ச்சி!

T

The Leader Desk

பிப்ரவரி 17, 2021 • 4:55 PM

ரோயல் கல்லூரி விடயத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு சூழ்ச்சி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பு ரோயல் கல்லூரியின் அதிபர் பி.ஏ.
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர கரியவசம், அபேரத்னவை பதவியில் இருந்து அகற்றுவதில் நேரடியாக தலையீடு செய்துள்ளதாக நேற்றைய தினம் (16) வெளியிட்ட ஊடக அறிக்கையில் அறிக்கையில், இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
  • இதேவேளை, சாகர காரியவசத்தின் தலையீட்டை ஊடக சந்திப்பில் வெளிப்படையாகவே விமர்சித்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர், அதிபர் அபேரத்னவிற்காக முன்னிற்பதாக குறிப்பிட்டுள்ளதாகவும், ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
  • சுமார் 8,000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும், இலங்கையின் மிகவும் பிரபலமான பாடசாலை அதிபர் குறித்த விடயத்தில் இத்தகைய அரசியல் தலையீடு காணப்படுவது, கல்வியில் கடுமையான சரிவுநிலையை காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எழுத்து அளவு:

கொழும்பு ரோயல் கல்லூரியின் அதிபர் பி.ஏ. அபேரத்ன தானாக முன்வந்து பதவி விலகுவதாக கூறி கல்விச் செயலாளரிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், எனினும் அதன் பின்னர் அவரே தனது இராஜினாமா கடிதத்தை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், கல்வி இராஜாங்க அமைச்சினால் அபேரத்னவுக்கு இடமாற்றக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின், இது கடுமையான அரசியல் தலையீட்டின் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள, சட்டவிரோத செயல் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர கரியவசம், அபேரத்னவை பதவியில் இருந்து அகற்றுவதில் நேரடியாக தலையீடு செய்துள்ளதாக  நேற்றைய தினம் (16) வெளியிட்ட ஊடக அறிக்கையில் அறிக்கையில், இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, சாகர காரியவசத்தின் தலையீட்டை  ஊடக சந்திப்பில் வெளிப்படையாகவே விமர்சித்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர், அதிபர் அபேரத்னவிற்காக முன்னிற்பதாக குறிப்பிட்டுள்ளதாகவும், ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சுமார் 8,000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும்,  இலங்கையின் மிகவும் பிரபலமான பாடசாலை அதிபர் குறித்த விடயத்தில் இத்தகைய அரசியல் தலையீடு காணப்படுவது, கல்வியில் கடுமையான சரிவுநிலையை காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

"பிரதான பாடசாலைகளில் இதுபோன்ற நிலை காணப்படுமாயின், மாகாண மட்ட பாடசாலைகளின் நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட வேண்டிய அவசியமில்லை. அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும், அதனைவிடுத்து அழுத்தம் கொடுத்து அதிபரின் ஒப்புதலுடன் அவரை இடமாற்ற கல்விச் செயலாளர் முயற்சிப்பது,  அரசியல் நோக்கத்தை  நிறைவேற்றும் செயற்பாடாகும்.” 

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதற்தர அதிகாரிகளை இடமாற்றம் செய்வதில் இத்தகைய குறுக்கீடு ஏற்படுவது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் அத்தகைய தலையீட்டை நிறுத்த உடனடியாக தலையீடு வேண்டும் எனவும், இலங்கை ஆசிரியர் சங்கம், பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது சமுதாயத்தில் பரபரப்பான விவாதத்திற்கு உட்பட்டுள்ள முன்னாள் நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையில், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கல் குறித்த குழு, ரோயல் கல்லூரியின் அதிபர் பதவி தொடர்பாக அருவருப்பான பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

”இதுவரை பகிரங்கப்படுத்தப்படாத அரசியல் பழிவாங்கல் குறித்த குழுவின் அறிக்கையின் பக்கச்சார்பான பரிந்துரைகள் ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன.  உதாரணமாக, ரோயல் கல்லூரியின் முன்னாள் அதிபர் உபாலி குணசேகர 55 வயதில் ஓய்வு பெற்றுள்ளார். எனினும் அரசியல் பழிவாங்கல் காரணமாக அவர் ஓய்வுபெற்றுள்ளதாக குறிப்பிட்டு,  அவரை மீண்டும் பதவியில் அமர்த்தி மூன்று வருடங்கள் சேவையை பெற்றுக்கொள்ள பரிந்துரைப்பது நகைப்பிற்குரிய விடயமாகும்.”

முன்னாள் அதிபர் உபாலி குணசேகர மீது ஒழுக்க விசாரணை நடத்தப்படுகின்ற போதிலும், ஓய்வு பெற்ற பின்னர் ஒரு தனியார் பாடசாலையின் அதிபராக  அவர் பணியாற்றி வருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த தேர்தலின் போது அவர் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், ரோயல் கல்லூரி அதிபர் பதவிக்கு அவர் மீண்டும் நியமனம் செய்வதற்கும், தற்போதைய அதிபரை பதவி நீக்குவதற்கும் இடையில் சூழ்ச்சி  ஒன்று காணப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், ரோயல் கல்லூரியின் அதிபர் பதவியை அரசியல்மயமாக்குவதானது, கல்வியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என ஆசிரியர் சங்கத்தின் தலைவர், ஜோசப் ஸ்டார்லின் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...