Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

ஈரான் கப்பல்கள் விவகாரம்: இலங்கையின் நடுநிலைமையை விட்டுக்கொடுக்க முடியாது; நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர விளக்கம்!

T

The Leader Desk

மார்ச் 20, 2026 • 11:02 PM

ஈரான் கப்பல்கள் விவகாரம்: இலங்கையின் நடுநிலைமையை விட்டுக்கொடுக்க முடியாது; நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர விளக்கம்!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிலவும் போர்ச் சூழலில், இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தந்திரோபாய நடவடிக்கைகள் மற்றும் ஈரான் கப்பல்கள் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் விசேட உரையற்றினார்.
  • எந்தவொரு அழுத்தத்திற்கும் மத்தியில் இந்த நிலைப்பாட்டை நாம் கைவிடமாட்டோம்." 2.
  • ஈரான் கப்பல்கள் மற்றும் அமெரிக்காவின் கோரிக்கை "கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி, ஈரானின் 03 கடற்படை கப்பல்கள் மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதி கோரின.
  • அதேவேளை, அமெரிக்கா தனது 02 போர் விமானங்களை மத்தல விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியது.
எழுத்து அளவு:

நிலவும் போர்ச் சூழலில், இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தந்திரோபாய நடவடிக்கைகள் மற்றும் ஈரான் கப்பல்கள் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் விசேட உரையற்றினார்.

இந்த உரையின் போது, நாட்டில் தற்போது நிலவும் எரிசக்தி நெருக்கடி மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கை எவ்வாறு நடுநிலைமையைப் பேணி வருகின்றது என்பது குறித்து அவர் விரிவாக விளக்கமளித்தார்.

1. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை: "நடுநிலைமை"

"இந்த விவகாரத்தில் எமது தொடர்ச்சியான நிலைப்பாடு நடுநிலைமையாகும். எமது தாய்நாட்டின் கௌரவம், நீதி மற்றும் சர்வதேச அங்கீகாரம் என்பன எமது நடுநிலைமையைப் பாதுகாப்பதன் மூலமே சாத்தியமாகும். எந்தவொரு அழுத்தத்திற்கும் மத்தியில் இந்த நிலைப்பாட்டை நாம் கைவிடமாட்டோம்."

2. ஈரான் கப்பல்கள் மற்றும் அமெரிக்காவின் கோரிக்கை

"கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி, ஈரானின் 03 கடற்படை கப்பல்கள் மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதி கோரின. அதேவேளை, அமெரிக்கா தனது 02 போர் விமானங்களை மத்தல விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியது. போர் பதற்றம் நிலவிய சூழலில், எமது நடுநிலைமையைப் பாதுகாக்க நாம் இந்த இரண்டு கோரிக்கைகளையுமே நிராகரித்தோம். அவ்வாறு அனுமதி வழங்கியிருந்தால், மத்திய கிழக்கின் போர் கொழும்பு மற்றும் மத்தல துறைமுகங்களுக்குள் நுழைந்திருக்கும்."

3. 'ஐரிஸ் புஷெஹர்' (Iris Bushehr) கப்பல் விவகாரம்

"பெப்ரவரி 27 ஆம் திகதி, ஈரானிய கப்பலில் காயமடைந்த ஒரு சிப்பாயையும் அதிகாரியையும் மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு கொண்டு வர அனுமதி கோரப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் நாம் அவர்களை அனுமதித்து, டர்டன்ஸ் (Durdans) வைத்தியசாலையில் அனுமதித்தோம். இது சர்வதேச கடமைகளுக்கு உட்பட்ட ஒரு செயலாகும்."

4. இரண்டாவது ஈரான் கப்பல் மீதான தாக்குதல்

"மார்ச் 04 ஆம் திகதி, இலங்கையின் பொருளாதார வலயத்திற்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய கப்பலொன்று தாக்குதலுக்கு உள்ளானது. இதன்போது இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை பாரிய மனிதாபிமான மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தது. இதன் மூலம் 32 காயமடைந்தவர்களும், 84 சடலங்களும் எமது நிலப்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டன."

5. ஈரான் சிப்பாய்களின் பாதுகாப்பு

"தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்த 206 ஈரானிய கடற்படையினர் தற்போது எமது பாதுகாப்பில் உள்ளனர். சர்வதேச சட்டங்களின்படி, மோதலில் ஈடுபடும் தரப்பினர் ஒரு நாட்டின் கடற்பரப்பில் 24 மணித்தியாலங்கள் மட்டுமே இருக்க முடியும். அவர்கள் எமது பாதுகாப்பின் கீழ் இருக்கும் போது, அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து மற்றும் பாதுகாப்பை நாம் மனிதாபிமானத்துடன் வழங்கி வருகின்றோம். இதுவே இலங்கைக்கு சர்வதேச ரீதியில் நற்பெயரைப் பெற்றுக்கொடுத்துள்ளது."

எரிசக்தி நெருக்கடி குறித்த விளக்கம்:

தற்போதைய போர்ச் சூழலால் உலக சந்தையில் எரிபொருள் விலை தீர்மானிப்பதில் தனியார் துறையினருக்கு ஒரு முக்கிய பங்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப அது அநீதியானது அல்ல என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஈரான் கடற்படையினரின் சடலங்கள் மற்றும் அமெரிக்காவின் கோரிக்கை

தாக்குதலுக்குள்ளான ஈரான் கப்பலில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன், அமெரிக்கப் போர் விமானங்களுக்கு மத்தலவில் அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களையும் அவர் விளக்கினார்.

  • ஈரானிய கடற்படையினர்: "தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்த 32 பேர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது கொக்கல விமானப்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்குக் கொண்டு செல்ல ஈரானின் கோரிக்கைக்கு நாம் அனுமதி வழங்கியுள்ளோம்."

  • ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானம்: "மத்திய கிழக்கு மோதல்கள் குறித்து ஐநா பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு நாம் ஆதரவு வழங்கவில்லை. அந்தத் தீர்மானம் அமுல்படுத்த முடியாத மற்றும் அற்பமான ஒன்றாக இருந்தமையே அதற்குக் காரணம். நாம் எப்போதும் நீதிக்காகவே சர்வதேச அரங்கில் குரல் கொடுப்போம்."

  • அமெரிக்கப் போர் விமானங்கள்: "அமெரிக்கா தனது 02 போர் விமானங்களை மார்ச் 04 முதல் 08 வரை மத்தல விமான நிலையத்தில் நிறுத்தி வைக்க அனுமதி கோரியது. அந்த விமானங்களின் இறக்கைகளில் 08 ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்தன. எமது நடுநிலைமையை உறுதிப்படுத்தவே நாம் அந்த அனுமதியை வழங்கவில்லை."

எரிசக்தி மற்றும் பொருளாதார தாக்கம்:

ஜனாதிபதி தனது உரையில் மத்திய கிழக்கு மோதல் இலங்கைப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் இரண்டு பிரதான வழிகளைச் சுட்டிக்காட்டினார்:

  1. எரிசக்தி விநியோகப் பாதை: எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகம் தடைப்படும் அபாயம்.

  2. புலம்பெயர் தொழிலாளர்கள்: மத்திய கிழக்கில் பணிபுரியும் சுமார் 10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் அந்நியச் செலாவணி வருமானம்.

"இது ஒரு உள்நாட்டு நெருக்கடியல்ல, வெளிப்படையான ஒரு அதிர்ச்சியாகும். எனினும், எமது எரிபொருள் விநியோகத்தில் தற்போது சிக்கல்கள் இல்லை. நாம் சிங்கப்பூர் மற்றும் இந்திய நிறுவனங்களுடன் நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் எரிபொருளைப் பெற்று வருகின்றோம்" என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

மசகு எண்ணெய் விநியோகத்தில் மாற்று வழிகள் மூலம் தீர்வுகான நடவடிக்கை

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் மசகு எண்ணெய் (Crude Oil) விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளைச் சமாளிக்க, சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை அதிகளவில் இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

  • ஃபுஜேரா (Fujairah) துறைமுகப் பாதிப்பு: "எமக்கு மசகு எண்ணெயை வழங்கும் பிரதான நிலையமான ஃபுஜேரா துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக, மார்ச் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் வரவிருந்த தலா 90,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்ட இரண்டு கப்பல்களின் வருகை இரத்து செய்யப்பட்டுள்ளது."

  • மாற்றுத் திட்டம்: "எமது சுத்திகரிப்பு நிலையம் நாட்டின் எரிபொருள் தேவையில் 35 சதவீதத்தையே பூர்த்தி செய்கிறது. மசகு எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் உள்ளதால், சுத்திகரிக்கப்பட்ட டீசல் மற்றும் பெற்றோலை நேரடியாக இறக்குமதி செய்ய நாம் தீர்மானித்தோம். இதற்காக மார்ச் 5 ஆம் திகதி அவசர டெண்டர்கள் கோரப்பட்டன."

  • புதிய கப்பல்களின் வருகை: மார்ச் 17 ஆம் திகதி திறக்கப்பட்ட டெண்டர்களின் படி, எரிபொருள் கப்பல்கள் பின்வரும் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளன:

    • டீசல் கப்பல்: ஏப்ரல் 06 - 07

    • பெற்றோல் கப்பல்: ஏப்ரல் 16 - 17

    • விமான எரிபொருள் (Jet A-1): ஏப்ரல் 10 - 11

    • உலை எண்ணெய் (Furnace Oil): ஏப்ரல் 12 - 13

    • மசகு எண்ணெய்: ஜூன் மாதத்தில் ஒரு கப்பல் வரவுள்ளது.

விநியோக முகாமைத்துவம்:

"எரிபொருள் கப்பல் ஒன்றிலிருந்து எண்ணெயை இறக்குவதற்குச் சுமார் 8 நாட்கள் வரை எடுக்கும். எனவே, துறைமுகத்தில் நெரிசல் ஏற்படாத வகையில், ஒரு கப்பல் வெளியேறியதும் அடுத்த கப்பல் உள்ளே வரும் விதமாக நாம் விநியோகச் சங்கிலியை மிகத் துல்லியமாகத் திட்டமிட்டுள்ளோம்.

தற்காலிகத் தட்டுப்பாடுகளைத் தவிர்க்கத் தேவையான மேலதிக டீசல் கப்பல்களுக்கும் தற்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது" என ஜனாதிபதி மேலும் விளக்கமளித்தார்.

எரிபொருள் கொள்வனவில் அரசியல் தலையீடுகள் இல்லை! 

எரிபொருள் இறக்குமதிக்கான புதிய டெண்டர் நடைமுறைகளில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை எனவும், தகுதியுள்ள எந்தவொரு நிறுவனமும் விண்ணப்பிக்க முடியும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அரசாங்கம் எடுத்துள்ள மேலதிக நடவடிக்கைகள் குறித்து அவர் இதன்போது விளக்கமளித்தார்.

  • அரசியல் தலையீடற்ற குழு: "புதிய டெண்டர்களைப் பரிசீலிக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் தலையீடுகள் கிடையாது. நிறுவனங்களின் நிதிப் பலம் மற்றும் குறித்த திகதிக்கு கப்பல்களைக் கொண்டுவரும் திறன் ஆகியவற்றை அரச නිதிகாரிகளே தீர்மானிப்பார்கள். ஏப்ரல் 12 ஆம் திகதிக்கு முன்னர் ஒரு மேலதிக மசகு எண்ணெய் கப்பலைத் தரையிறக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்."

  • தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் அபாயம்: "அதிகப்படியான கப்பல்கள் வருவதால் துறைமுகத்தில் நெரிசல் ஏற்பட்டு தாமதக் கட்டணம் (Demurrage) செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். எனினும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதை விட, மேலதிக இருப்பை வைத்திருப்பதே நாட்டுக்கு நல்லது. அந்தத் தீர்மானத்தை நாம் பொறுப்புடன் எடுத்துள்ளோம்."

  • ஏற்றுமதியாளர்களுக்கான வசதி: "எரிபொருள் நெருக்கடியால் ஏற்றுமதித் துறை பாதிக்கப்படாமல் இருக்க, 5 தனியார் நிறுவனங்களுக்கு பன்கரிங் (Bunkering) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பொதுச் சந்தைக்கு எரிபொருள் வழங்க முடியாது, ஆனால் ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான எரிபொருளைத் தடையின்றி வழங்குவார்கள்."

ரஷ்யாவுடனான உறவு மற்றும் சர்வதேச அழுத்தம்:

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெறுவது குறித்து ஜனாதிபதி விசேட விளக்கமளித்தார்: "ரஷ்யா மீதான தடைகள் கடந்த 11 ஆம் திகதியே நீக்கப்பட்டன. எமது ஏற்றுமதியில் 25% அமெரிக்காவைச் சார்ந்துள்ளது. எனவே, சர்வதேச வர்த்தக வரிகள் (Tariff) தொடர்பான சிக்கல்களைக் கருத்திற்கொண்டு நாம் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டியுள்ளது. தற்போது ரஷ்யாவுடன் அரச மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, அதன் முன்னேற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படும்."

 

உலக சந்தை மற்றும் டொலர் பெறுமதியே காரணம்! 

தற்போதைய எரிபொருள் விலை அதிகரிப்பானது உள்நாட்டுக் காரணி அல்ல எனவும், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு மற்றும் டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி ஆகியவையே பிரதான காரணங்கள் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

  • விலை அதிகரிப்பு விகிதம்: மார்ச் 02 முதல் மார்ச் 18 வரையான காலப்பகுதியில் உலக சந்தையில் 92 ரக பெற்றோல் 55 சதவீதத்தினாலும், டீசல் 74 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளது.

  • எளிமையான கணக்கீடு: "உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 1 டொலரால் அதிகரித்தால், இலங்கையில் அதன் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். மசகு எண்ணெய் 81 டொலரிலிருந்து 114 டொலராக உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டு விலையில் அதன் தாக்கம் தவிர்க்க முடியாதது."

  • பிரீமியம் (Premium) கட்டணம்: "முன்னதாக 2.5 டொலராக இருந்த காப்புறுதி மற்றும் போக்குவரத்துக்கான பிரீமியம் கட்டணம் தற்போது 40 டொலர் வரை உயர்ந்துள்ளது. இது எரிபொருள் விலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது."

தனியார் துறையின் பங்களிப்பும் சவால்களும்:

"இலங்கையின் எரிபொருள் சந்தையில் 43 சதவீதத்தை தனியார் நிறுவனங்களே கொண்டுள்ளன. நட்டத்தோடு எரிபொருளை விற்பனை செய்ய முடியாது என அவர்கள் கூறுகின்றனர். ஒரு கப்பல் மூலம் அவர்களுக்கு 55 மில்லியன் டொலர் நட்டம் ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மாத்திரம் சந்தையில் இருந்தால் விலைகளைச் சமநிலைப்படுத்தியிருக்கலாம், ஆனால் தனியார் துறையினரின் வரவு இந்தச் சூழலைச் சிக்கலாக்கியுள்ளது."

வரி மற்றும் மானியம் குறித்த நிலைப்பாடு:

  • வரி வருமானம்: எரிபொருள் மூலம் மாதத்திற்கு 20 பில்லியன் ரூபா வரி வருமானம் திறைசேரிக்குக் கிடைக்கிறது. வரியைக் குறைத்தால் அதிகளவில் எரிபொருளைப் பயன்படுத்துவோருக்கே அதிக லாபம் கிடைக்கும்.

  • இலக்கு வைக்கப்பட்ட மானியம்: "அனைவருக்கும் சலுகை வழங்குவதை விட, மீன்பிடிப் படகுகள் மற்றும் வாழ்வாதாரத்திற்காக எரிபொருளைப் பயன்படுத்துவோருக்கு நேரடியாக மானியம் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். எனினும், முறைசாரா பொருளாதாரத்தில் உள்ளவர்களைக் கண்டறிவது சவாலாக உள்ளது."

 'சிண்டிகேட்' மாஃபியாக்களை ஒழிப்போம்! 

தனியார் நிறுவனங்கள் நட்டத்தைச் சுமக்கத் தயாரில்லாத நிலையில், எரிபொருள் விநியோகத்தைச் சீர்ப்படுத்த QR குறியீடு (QR Code) நடைமுறை ஏப்ரல் 01 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர කුමාර திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியில் நீண்டகாலமாக நிலவி வரும் மாஃபியாக்களை (Cartels) முறியடிக்க அரசாங்கம் எடுத்துள்ள கடும் நடவடிக்கைகள் குறித்து அவர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

  • QR குறியீடு மற்றும் சட்ட நடவடிக்கை: "QR நடைமுறை தற்போது 100 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எரிபொருளைப் பதுக்குவோர் அல்லது சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள பொருளாதாரத்திற்கு (Underground Economy) இடமளிக்கப் போவதில்லை."

  • எரிவாயு விநியோகம்: "எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை. மார்ச் மாதத்திற்குத் தேவையான எரிவாயு கையிருப்பில் உள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு வரவுள்ளது."

  • மாஃபியாக்கள் முறியடிப்பு: "கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் எரிசக்தித் துறையில் கடந்த 30 ஆண்டுகளாகச் சில நிறுவனங்களும் அதிகாரிகளும் இணைந்து 'சிண்டிகேட்' மாஃபியாக்களை நடத்தி வந்தனர். இவற்றை நாம் உடைத்து வருகின்றோம். இதனால் குழப்பமடைந்துள்ள தரப்பினர் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்."

2025ஆம் ஆண்டின் வரலாற்றுச் சாதனை:

இலங்கைப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டில் பாரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்:

  • வரவு செலவுத் திட்டத் பற்றாக்குறை: முன்னெப்போதும் இல்லாத வகையில் 2.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

  • கணக்கு மிகை (Surplus): இலங்க வரலாற்றில் மிக அரிதாகவே நிகழும் நடப்புக் கணக்கு மிகை, இம்முறை 1.8 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

  • வரி வருமானம்: 1996 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிகபட்ச வருமானமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17.5 சதவீத வருமானம் 2025 இல் ஈட்டப்பட்டுள்ளது.

"பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முனைவோரின் சதிகளுக்கு இடமளிக்காது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, வங்கி வட்டி விகிதங்களை ஒற்றை இலக்கத்தில் பேணி நாட்டை முன்னோக்கி நகர்த்துவோம்" என ஜனாதிபதி தனது உரையை நிறைவு செய்தார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடன் மறுசீரமைப்பு மற்றும் அத்தியாவசிய விநியோகம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்தின் 175 மில்லியன் டொலர் கடனை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (20) கையெழுத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர කුමාර திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் நிலவிய பாரிய தடையொன்று இதன் மூலம் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

  • விநியோகச் சங்கிலி பாதுகாப்பு: "அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்திற்கான உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிராமங்களுக்குச் சென்றடைவதை இக்குழு உறுதிப்படுத்தும். தேயிலைத் தோட்டங்கள் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகளின் இயங்குதன்மை குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது."

  • அரச சேவையில் எரிசக்தி சிக்கனம்: "அரச நிறுவனங்களின் எரிசக்தி பயன்பாட்டை ஆகக்குறைந்தது 25 சதவீதத்தினால் குறைக்குமாறு அமைச்சுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மேற்பார்வையிட பிரதமர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது."

  • பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்: "கடற்படை மற்றும் விமானப்படையினருக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. இதேவேளை, வைத்தியசாலைகளின் அவசரத் தேவைகளுக்காக மேலதிகமாக 6 வாரங்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பினைப் பாதுகாப்பாக வைத்துள்ளோம்."

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு:

"சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டின் பாதுகாப்பு வலையமைப்பு பலவீனமடைய இடமளிக்க மாட்டோம். கடந்த சில நாட்களில் மட்டும் 270 கிலோ கொக்கெய்ன் (Cocaine) போதைப்பொருளை எமது பாதுகாப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். துறைமுகம் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது."

மக்களுக்கான வேண்டுகோள்:

"சர்வதேச எரிசக்தி விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளால் சில அசௌகரியங்கள் ஏற்படலாம். அமைச்சரவை, அதிகாரிகள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

ஏற்படக்கூடிய விலை அதிகரிப்பு அல்லது விநியோகத் தட்டுப்பாடுகளைச் சமாளிக்க அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன்" என ஜனாதிபதி தனது உரையை நிறைவு செய்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...