அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
'அட தெரண' செய்திச் சேவைக்கு இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமையவே, பாடசாலைகளுக்கும் இந்த விடுமுறை வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்
தற்போதைய சவால்களுக்கு மத்தியில் வலுசக்தியை மேலாண்மை செய்து, நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
-
அரச ஊழியர்களுக்கு விடுமுறை: எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், நாளை (17) முதல் மறு அறிவித்தல் வரும் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தினங்களில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
கல்வி மற்றும் நீதித்துறை: இந்த விடுமுறைத் தீர்மானம் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பிற்கும் பொருந்தும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
-
அத்தியாவசிய சேவைகளுக்கு விதிவிலக்கு: எனினும், சுகாதாரம், துறைமுகம், நீர் வழங்கல் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொதுச் சேவைகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என அவர் சுட்டிக்காட்டினார்.
நான்கு முக்கிய குழுக்கள் நியமனம்
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கண்காணித்து, மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைச்சரவையினால் நான்கு பிரதான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசாங்கத்தினால் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், தனியார் மேலதிக வகுப்புக்களை (Tuition Classes) நடாத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்தே மேலதிக வகுப்புக்களுக்கும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
-
பொது விடுமுறை: ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தினமானது நீதிமன்ற சேவைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
-
எரிபொருள் சேமிப்பு: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்துத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எரிபொருளைச் சேமிக்கும் நோக்கோலேயே தனியார் வகுப்புக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
-
விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள துறைகள்: எனினும், சுகாதாரம், துறைமுகம், நீர் வழங்கல், மின்சாரம் (வலுசக்தி) மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களுக்கு இந்த விசேட விடுமுறை பொருந்தாது என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


