சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய தரவுகளின்படி, இலங்கையின் பெயரில் எந்தவொரு செயற்கைக்கோளும் இல்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (12) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
“உலகில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தில் பணியாற்றி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிறுவனம் ஒன்று உள்ளது. அதுதான் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம். சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union) அல்லது ITU. இந்த ITU மூலம்தான் இது தொடர்பான தொழில்நுட்ப மற்றும் ஒருங்கிணைப்பு செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது.
"செயற்கைக்கோளை தாக்கல் செய்யும் செயல்முறை மூன்று முக்கிய படிகளைக் கொண்டுள்ளது என்று ITU கூறியுள்ளது. இதில் முதலாவது படிமுறை, திட்டமிடப்பட்ட செயற்கைக்கோள் வலையமைப்பின் தொழில்நுட்ப விபரங்களை தொடர்புடைய நிர்வாக அமைப்பால் ITUஇற்கு சமர்ப்பிப்பதாகும்.
“இரண்டாவதாக, தகவல் தொடர்பு இடையூறுகளைத் தவிர்க்க, வழங்கப்படும் இந்தத் தகவல்கள் மற்ற உறுப்பு நாடுகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். மூன்றாவதாக, பதிவு மற்றும் சர்வதேச அங்கீகாரத்திற்கான இறுதி அளவுருக்கள் குறித்த அறிவிப்பு.
“இந்த செயல்முறையே, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால், உலகளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, செயற்கைக்கோளை ஏவுவதற்கான நிலையான முறையாகும். இதற்கு வழக்கமாக குறைந்தபட்சம் மூன்று வருடங்களும் அதிகபட்சம் ஏழு வருடங்களும் ஆகும். அதுதான் செயல்முறை.
“ITU எனப்படும் இந்த அமைப்பின் இலங்கை சார்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுப்புரிமையை கொண்டுள்ளது. அதன்படி, இந்த புவிசார் சுற்றுப்பாதைகளில் இலங்கை 121.5 மற்றும் 50 என இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது. ஆனால் இதில் உள்ள தகவல்களின்படி, இந்த இடங்கள் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, நேபாளம், தஜிகிஸ்தான் மற்றும் ருமேனியா போன்ற நாடுகளும் விரும்பினால் இந்த இடங்களில் தங்கள் பணியைத் தடையின்றித் தொடரலாம்.
“ITU ஊடாக கிடைக்கும் தகவல்களின்படி, 121.5 மற்றும் 50 என இந்த புவிசார் சுற்றுப்பாதைகளில் தற்போது இலங்கை என்ற பெயரில் எந்த செயற்கைக்கோளும் இல்லை. பின்னர், இந்த ITU ஊடாக சுப்ரீம் சாட் வன் என்ற செயற்கைக்கோள் இயக்கப்படுகிறதா என்று ஆராய்ந்தோம். அப்படி எதுவும் இல்லை. சுப்ரீம் சாட் வன் பின்னர் சைனாஸ் எட் டுவெல் என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இலங்கையுடன் தொடர்புடைய இந்த இடத்தில் சுற்றுப்பாதையில் உள்ள சீன செயற்கைக்கோள் பற்றி ITU வலைத்தளத்தில் குறிப்பிடப்படவில்லை. இலங்கைக்குச் சொந்தமான இந்த சுப்ரீம் சாட் வன் அல்லது சீனா சாட் டுவெல் என்ற பெயரில் இலங்கைக்கு சொந்தமான சுற்றுப்பாதைகளிலிருந்து எந்தவொரு தகலும் இல்லையென ITU தெரிவிக்கிறது” என அமைச்சர் கூறினார்.