உத்தேச கல்விச் சீர்திருத்தமானது வெறும் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை எனவும் நாட்டின் ஒட்டுமொத்த
சமூக மற்றும் பொருளாதார மட்டத்தையும் ஒரே நேரத்தில் உயர்த்துவதாக அமையும் என்றும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது அரசியல் நோக்கமல்ல. சமூக நோக்கமாக இருப்பதால் இதற்கு ஆதரவளிக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
13 வருட கட்டாயக் கல்வியை பூர்த்தி செய்யாமல் எந்தவொரு குழந்தையும் எக்காரணம் கொண்டும் பாடசாலையை விட்டு வெளியேறக்கூடாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்ற கல்வி மறுசீரமைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து பேசிய ஜனாதிபதி,
“இந்நாட்டில் 98 பாடசாலைகள் உள்ளன. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவு, 20 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 406 உள்ளன. 30 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகள் 752 உள்ளன. அத்துடன், 40 மாணவர்களுக்கு குறைவான உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1141. 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 ஆகும்.
“நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர். 100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 3144 உள்ளன.
குச்சவெளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும் பண்டாரவளையில் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும் திருகோணமலையில் 4 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும் உள்ளனர்.
“சில பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை முழுமையாக மூட வேண்டும். சில பாடசாலைகளை இணைக்கவேண்டும். இன்னும் சில பிரதேசங்களில் புதிதாக பாடசாலைகளை உருவாக்க வேண்டும்” என்றார்.