விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த வேன் ஒன்று பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த நிலையில், அதனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்று (12) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன்போது, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் சார்பில் 6க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகினர்.
சிறுவனின் கொலை தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கு பொலிஸ் தரப்பில் கடுமையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் கடுமையான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
இருதரப்பினரின் சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதவான் விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு மாற்றுமாறு உத்தரவிட்டார்.

சிறுவனைக் கொன்ற பொலிஸார் ஒரு மாதமாகியும் சுதந்திரமாக உலாவுகின்றனர்: யாழ்ப்பாணத்தில் மக்கள் கொந்தளிப்பு
17 வயதுச் சிறுவன் ஒருவனை வீதியில் வைத்துச் சுட்டுக்கொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஒரு மாதம் கடந்தும் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 10ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சித்தன்கேணியைச் சேர்ந்த அல்பினோ அயூப்ராஜ் அருள் பயஸ் எனும் சிறுவனுக்கு நீதி கோரி, 2026 மார்ச் 10ஆம் திகதி அல்லைப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டதாக எமது பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தனது மகனின் உருவப்படத்தைக் கட்டியணைத்து கதறி அழுத அருள் பயஸின் தாயாரின் உருக்கமான காட்சிகள் ஊடகவியலாளர்களின் கெமராக்களில் பதிவாகியிருந்தன.
சம்பவம் குறித்து 2026 பிப்ரவரி 11ஆம் திகதி அதிகாலை 4:00 மணியளவில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், பிப்ரவரி 10 ஆம் திகதி வேன் ஒன்றின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும், உயிரிழந்த அருள் பயஸ் 2008ஆம் ஆண்டு நவம்பர் 09ஆம் திகதி பிறந்தவர் என்பதும், உயிரிழக்கும் போது அவருக்கு 17 வயது மட்டுமே என்பதும் அவரது பிறப்புச் சான்றிதழ் மற்றும் மரண விசாரணை அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த நபர் போதைப்பொருள் பாவித்திருந்ததாக அரச மருத்துவ அதிகாரி தெரிவித்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. "சந்தேகநபர் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதாக மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது" என பொலிஸார் கூறியிருந்தனர்.
ஆனால், பொலிஸாரின் இந்தக் கூற்றை மருத்துவ அறிக்கை முற்றாக மறுத்துள்ளது. சட்ட மருத்துவ அதிகாரி ருத்ரபசுபதி மயூரதன் அவர்களால் நீதவான் M.N.N. ஹுசைன் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், சிறுவனின் உடலில் எந்தவித போதைப்பொருளும் இருந்ததாகக் குறிப்பிடப்படவில்லை.
மாறாக, 17 வயது சிறுவனான அருள் பயஸின் மரணத்திற்கு "ரைபிள் (Rifle) துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா மூளையை ஊடுருவிச் சென்றமையே" காரணம் என அந்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்தன்கேணியைச் சேர்ந்த சிறுவன் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்தும், அதற்குப் பொறுப்பானவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அவர்கள் அதிகாரிகளுக்கு கடும் அழுத்தம் கொடுத்துள்ளனர்.


