வழக்கு, இன்று (11) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை (Suresh Salle) கைது செய்வதற்குரிய காரணங்கள் அடங்கிய சுருக்கமான அறிக்கையொன்றை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்தது.
இந்த வழக்கில் மூன்றாவது சந்தேகநபரான சுரேஷ் சலே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணி மனுஷிகா குரேயும் ஆஜராகினர். முதலாவது மற்றும் இரண்டாவது சந்தேகநபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் முன்னிலையானார்.
வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த முறை மன்று வழங்கிய உத்தரவின்படி, ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சாட்சியங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை சமர்ப்பிக்குமாறு தனது கட்சிக்காரர்களான அரச புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஜெகில் பாஸ் மற்றும் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இதன்போது, குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் முன்னைய அறிக்கையில் குறிப்பிடப்பட்ட தகவல்களுக்கு மேலதிகமாக புதிய தகவல்கள் ஏதேனும் வெளிவந்துள்ளதா என நீதவான் வினவினார்.
அதற்குப் பதிலளித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இரண்டாவது சந்தேகநபர் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தது. எவ்வாறாயினும், இந்த இரு சந்தேகநபர்களுக்கும் ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடித் தொடர்பிருப்பதாகத் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும், வவுணதீவு பகுதியில் பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்புவதற்காகவே இவர்கள் செயற்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி நீதிமன்றில் சுட்டிக்காட்டியது.
இதனைத் தொடர்ந்து, தனது கட்சிக்காரரான சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் எவை என சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன வினவினார்.
அதற்குப் பதிலளித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பின்வருமாறு தெரிவித்தது:
"இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவில் நீண்டகாலமாகப் பணியாற்றிய நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒரு ஒற்றர் (Spy) ஊடாக, மூன்றாவது சந்தேகநபரான சுரேஷ் சலே, குண்டுதாரி ஹஸ்துன் என்பவருக்கு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தைக் காண்பித்துள்ளார். இந்தத் தேவாலயத்தின் மீதே குண்டுத் தாக்குதலை நடத்த வேண்டும் என அவரே அடையாளம் காட்டியுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது."
நாமல் விடுத்துள்ள கோரிக்கை
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள், அரசியல் பழிவாங்கல்களுக்காகவோ அல்லது பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காகவோ (Geo-political agendas) பயன்படுத்தப்படக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
தனது X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதியை நிலைநாட்டுவதாகக் கூறிக்கொண்டே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், விசாரணைகளின் தற்போதைய முன்னேற்றத்தைப் பார்க்கும்போது, அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறதா? மற்றும் இந்த விசாரணைகளின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படுகிறதா? என்பது குறித்துப் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முறையான, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு தான் ஒருபோதும் எதிரானவன் அல்ல என்றும், இவ்வாறான நம்பகமான விசாரணைக்குத் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
"இந்தக் கொடூரமான பயங்கரவாதச் செயலுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குச் சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம்," என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ, அவர் இலங்கை அரச புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய ஒரு கௌரவமான இராணுவ அதிகாரி எனத் தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, மூன்று தசாப்த கால பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான இலங்கையின் யுத்தத்தில் மிக முக்கியமான பங்காற்றியவர் எனவும், தேசியப் பாதுகாப்பிற்காக அவர் ஆற்றிய சேவை பாராட்டுக்குரியது எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தபோதிலும், காலப்போக்கில் அவரை ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி, கடந்த காலங்களில் போலியான கருத்துக்களும் அரசியல் உள்நோக்கம் கொண்ட கதைகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
அதேநேரம், இத்தாக்குதல் தொடர்பில் தமது கடமைகளைச் செய்யத் தவறிய நபர்களுக்கு எதிராக இதே அளவிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உத்தியோகபூர்வ ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் கடமை தவறியதாகக் குறிப்பிடப்பட்ட சில நபர்கள், பின்னர் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்தகையவர்களுக்கு மத்தியில் சுரேஷ் சலேவை மாத்திரம் குறிப்பாக இலக்கு வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
'சுரேஷ் சலேவை கொலை செய்யச் சதி?'
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அசுத்தமான சிறை அறையொன்றில் அடைத்து வைத்து, அவரை மெல்ல மெல்லக் கொலை செய்ய முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், "சி.ஐ.டியின் இந்தத் துச்சமான செயற்பாட்டிற்கு எதிராக எதிர்வரும் நாட்களில் அதன் தலைமையகத்திற்கு முன்னால் திரளுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்து வருகிறோம்," என்றார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
"நமது நாட்டின் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் 90 நாட்களுக்கும் மேலாகத் தடுப்புக்காவல் உத்தரவில் (Detention Orders - DO) வைக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் அவருக்கு பொலிஸாரினால் ஒருளவு வசதியுள்ள 'ஏ' (A) ரக அறை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ஷானி அபேசேகர எதிர்பார்த்த வாக்குமூலத்தை சலே வழங்காத காரணத்தால், இப்போது அவர் ஒரு மிக அசுத்தமான சிறை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அந்தச் சிறை அறையினுள் எலிகள் அவர் மீது ஓடுகின்றன. தூசு நிறைந்த தரையில் ஒரு பத்திரிகைத் துண்டை விரித்தே அவர் இரவில் உறங்க வேண்டியுள்ளது. ஒரு பாயைக் கூட வழங்க முடியாத அளவுக்கு சி.ஐ.டியின் இந்த 'கொலைகாரர்கள்' (Executioners) ஈவிரக்கமற்றவர்களாக மாறியுள்ளனர். அதுமட்டுமன்றி, அந்த அறைக்கு அருகில் கடும் துர்நாற்றம் வீசும் மலசல கூடம் உள்ளது. அந்தத் துர்நாற்றம் காரணமாக அவருக்கு உணவைக் கூட உட்கொள்ள முடியாதுள்ளது. உண்டால் வாந்தி எடுக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
சிறைக்குள்ளேயே சுரேஷ் சலேவின் வாழ்க்கையை வெறுக்கச் செய்து, அவரை மரணத்தின் விளிம்பிற்குத் தள்ளவே இவர்கள் முயல்கின்றனர். அன்று யுத்தம் நடந்த காலத்தில் 'அரசின் கண்' (Eye of the State) எனப் போற்றப்பட்டவர் இவர். தமிழ்ச்செல்வன் போன்ற முக்கிய இலக்குகளைத் தாக்குவதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை வழங்கியவர்.
தற்கொலை குண்டுதாரிகள், வெடிகுண்டு லொறிகள் என இந்நாட்டின் பேருந்துகளிலும் புகையிரதங்களிலும் மக்கள் கொல்லப்படுவதைத் தனது முன் கூட்டிய உளவுத் தகவல்கள் மூலம் தடுத்தவர். அத்தகைய ஒரு அதிகாரிக்கே இன்று இந்த அவமதிப்பு நடக்கிறது.
ஷானி அபேசேகர அவர்களே, நீங்களும் உங்கள் தலைவரும் செய்யும் இந்த அக்கிரமத்திற்கு இடிதான் விழும். எலிகள் நிறைந்த அறையில் அவரைப் பட்டினி போட்டு, நோயாளியாக்கி சாகடிக்கப் பார்க்கிறீர்கள். இதனை இந்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறார்களா? ஓய்வுபெற்ற பொலிஸ்காரரான ஷானி அபேசேகர எனும் அந்த 'கொலைகாரனை' எமது புலனாய்வு அதிகாரியின் உயிருடன் விளையாட அனுமதிக்கப் போகிறோமா?
எனவே, இந்த இழிவான செயலை அனுமதிக்க முடியாது என நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். சிறைக்குள் ஒரு யாசகரைப் போல அவரைப் போட்டுச் சாகடிக்கும் இந்த முயற்சிக்கு இடமளிக்க முடியாது. இதற்காக விரைவில் நாம் உங்களை அழைப்போம். ரகசிய பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் வந்து அங்கேயே தங்கியிருக்கத் தயாராகுங்கள்," என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.


