நிலையிலும், உள்நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளை முடக்கி எரிபொருள் பாவனையைக் குறைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தைப் பேணுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அவர் மேலும் குறிப்பிட்டார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை தற்காலிகமாக மூடிவிட்டு, வீட்டிலிருந்து வேலை செய்யும் (Work from home) முறையை அறிமுகப்படுத்தியுள்ள பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளைப் பின்பற்றி இலங்கையும் செயற்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்:
"பொருளாதாரத்தின் ஒரு பகுதியை முடக்குவதன் மூலம் எரிபொருள் நுகர்வைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அண்மையில் விலைகள் அதிகரிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் கையிருப்பிலிருந்த எரிபொருள் தீர்ந்துள்ள நிலையில், அதிக விலைக்கு புதிய எரிபொருள் கையிருப்புகளைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களில் எரிபொருள் நுகர்வு பாரியளவில் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மார்ச் 1ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் டீசல் நுகர்வு 23,000 டொன்களாலும், பெட்ரோல் நுகர்வு 13,000 டொன்களாலும் அதிகரித்துள்ளது.
"சாதாரணமாக நாளொன்றுக்கு டீசல் நுகர்வு 4,000 முதல் 4,400 டொன்கள் வரை காணப்படும். இருப்பினும், மார்ச் 1 முதல் 9 வரையான காலப்பகுதியில் 59,200 டொன் டீசலும், 47,500 டொன் பெட்ரோலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரியளவில் அதிகரிக்குமாயின், எரிபொருளுக்கான குறுகிய கால சலுகைகளை வழங்குவது குறித்து நிதியமைச்சு கலந்துரையாடி வருகின்றது" என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சவூதி அரேபியா (4%), பாகிஸ்தான் (21%), வியட்நாம் (19%), அமெரிக்கா (13%) மற்றும் நியூசிலாந்து (12%) உள்ளிட்ட பல நாடுகளும் தற்போதைய சூழலில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


