Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

தமிழக இளையோர் வாக்குகள்: யாருக்குச் சாதகம்?

T

The Leader Desk

மார்ச் 10, 2026 • 5:59 AM

தமிழக இளையோர் வாக்குகள்: யாருக்குச் சாதகம்?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • (Outsiders) அரசியல்வாதிகள் சவால் விடுத்து வருகின்றனர்.
  • இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விசேட திருத்தங்களின்படி, தமிழகத்தில் தற்போது சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
  • இவர்களில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், சுமார் 12.5 இலட்சம் பேர் 18 அல்லது 19 வயதுடைய முதல்முறை வாக்காளர்களாவர்.
  • சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு விகிதம், 2021 இல் 7 சதவீதமாகவும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8 சதவீதத்தைக் கடந்தும் சீராக வளர்ச்சியடைந்துள்ளது.
எழுத்து அளவு:

(Outsiders) அரசியல்வாதிகள் சவால் விடுத்து வருகின்றனர். எனினும், மாநிலத்திற்கான இவர்களது தொலைநோக்குப் பார்வைகள் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டவையாகக் காணப்படுகின்றன.

தமிழக அரசியலானது நீண்டகாலமாக இரு வலிமைமிக்க திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தினால் வரையறுக்கப்பட்டு வந்துள்ளது. இது மாற்று சக்திகள் உருவெடுப்பதற்கான இடைவெளியை மிகக் குறைவாகவே விட்டு வைத்திருந்தது.

1967ஆம் ஆண்டு, சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) வீழ்த்தியதிலிருந்து, மாநிலத்தின் அரசியல் முறையானது பெரும்பாலும் தி.மு.க மற்றும் அதன் எதிரியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) ஆகியவற்றுக்கு இடையிலான இருமுனைப் போட்டியாகவே இருந்து வந்துள்ளது.

1972இல் திரை உலகின் ஜாம்பவான் எம்.ஜி. ராமச்சந்திரனால் (MGR) தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு பிரதான சவாலாக மாறியதுடன், கடந்த நான்கு தசாப்தங்களாக இந்த இரு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வருகின்றன.

வலுவான சமூக நலத்திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகளில் பாரிய முதலீடுகள் மற்றும் திராவிட இயக்கத்தில் வேரூன்றிய தெளிவான கொள்கை அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த அரசியல் முறையின் நீடித்த தன்மை தங்கியுள்ளது. அவ்வப்போது சில தடங்கல்கள் ஏற்பட்ட போதிலும், கடந்த ஏழு தசாப்தங்களாக அரசியல் களம் இந்த இரு பெரும் கட்சிகளின் இறுக்கமான கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது.

'பிரண்ட்லைன் இந்தியா' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தற்போதைய தேர்தல் சுழற்சியானது இந்த கட்டமைப்பை மீண்டும் ஒருமுறை சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. அரசியலில் கால்பதித்துள்ள நடிகர் விஜய் மற்றும் தமிழ்த் தேசியத் தலைவர் சீமான் ஆகிய இருவர் தற்போது மாற்றாகத் தங்களை முன்னிறுத்தியுள்ளனர்.

இவர்களது கட்சிகளான 'தமிழக வெற்றி்க் கழகம்' மற்றும் 'நாம் தமிழர் கட்சி' ஆகியன, தற்போதைய அரசியல் முறையினால் அதிருப்தியடைந்துள்ள இளைய வாக்காளர்களைக் குறிவைத்து ஒரே களத்தில் போட்டியிடுகின்றன.

திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைக்கும் முயற்சிகள் ஒன்றும் புதியவையல்ல. கடந்த காலங்களில் பல அரசியல் சக்திகள் இதனைச் செய்ய முயன்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் விஜயகாந்த். இவரது கட்சி ஆரம்பத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற போதிலும், காலப்போக்கில் மங்கிப்போனது.

திராவிடக் கட்சிகளே கூட சில அரசியல் தேவைகளுக்காக பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) கூட்டணி அமைத்துள்ளன. இருப்பினும், அக்கூட்டணிகள் தமிழக அரசியலின் கொள்கை அடித்தளத்தை முழுமையாக மாற்றியமைக்கவில்லை.

ஆனால், இன்றைய சவால் முற்றிலும் வித்தியாசமானது. இது ஒரு தலைமுறை மாற்றத்திலிருந்து (Generational shift) உருவாகியுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விசேட திருத்தங்களின்படி, தமிழகத்தில் தற்போது சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், சுமார் 12.5 இலட்சம் பேர் 18 அல்லது 19 வயதுடைய முதல்முறை வாக்காளர்களாவர். இந்த 'மிலேனியல்' (Millennials) மற்றும் 'Z தலைமுறை' (Gen Z) இளைஞர்களே தற்போது தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளனர்.

இவர்களில் பலர், அரசியலில் பணத்தின் ஆதிக்கம் மற்றும் பாரம்பரியக் கட்சிகளில் காணப்படும் குடும்ப அரசியல்/செல்வாக்கு வலைப்பின்னல்கள் குறித்து அதிருப்தி கொண்டுள்ளனர். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் இவர்கள், தற்போதைய அதிகார மையங்களுக்கு சவால் விடுக்கும் 'வெளியார்' பிம்பங்களைக் கொண்ட தலைவர்களை ஆதரிக்கத் தயாராக உள்ளனர்.

விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருமே இந்தத் தரப்பினரைக் குறிவைக்கின்றனர். கல்லூரிகளில் வாக்காளர் பதிவை ஊக்குவிக்கத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட பிரச்சாரங்கள், எதிர்பாராத விதமாக இவ்விரு தலைவர்களுக்கும் ஒரு பெரிய ஆதரவுத் தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன.

இருப்பினும், இவ்விரு அரசியல்வாதிகளும் முற்றிலும் மாறுபட்ட அரசியல் பார்வைகளைக் கொண்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான், எவ்வித சமரசமுமற்ற தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்து வருகின்றார். 2009 இல் கட்சியைத் தொடங்கியதிலிருந்து, இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் கூட்டணி முறையிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடுவதையே அவர் கொள்கையாகக் கொண்டுள்ளார். தமிழகத்தில் உயிர்வாழ்வதற்கு கூட்டணி என்பது இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படும் நிலையில், சீமான் தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார்.

இவரது அணுகுமுறை அபாயகரமானது என்றாலும், அது முழுமையாகத் தோல்வியடையவில்லை. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு விகிதம், 2021 இல் 7 சதவீதமாகவும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8 சதவீதத்தைக் கடந்தும் சீராக வளர்ச்சியடைந்துள்ளது. பல தொகுதிகளில் இரு பெரும் திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் இக்கட்சி ஊடுருவியுள்ளது.

திராவிட இயக்கத்தின் தோல்விகளுக்கான ஒரு தீர்வாகவே சீமான் தனது கொள்கையை முன்வைக்கின்றார். திராவிட அரசியலின் உள்ளடக்கிய (Inclusive) கட்டமைப்பு, தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தைச் சிதைத்துவிட்டதாகவும் தமிழ் மொழியின் மாண்பைக் குறைத்துவிட்டதாகவும் அவர் வாதிடுகின்றார்.

இந்த வாதத்தின் மையமாக, திராவிட அரசியலின் தத்துவார்த்த அடித்தளத்தை உருவாக்கிய சமூக சீர்திருத்தவாதி ஈ.வெ. ராமசாமி (பெரியார்) மீதான அவரது விமர்சனங்கள் அமைகின்றன. பெரியாரின் பாரம்பரியத்தை சீமான் மீண்டும் மீண்டும் கேள்விக்குட்படுத்துவது, ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களிடையே கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஆய்வாளர் வி. அரசு வாதிடுகையில்; பெரியார் மீதான சீமானின் இத்தகையத் தாக்குதல்கள், திராவிட இயக்கத்தின் சமூக நீதி மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகளை எதிர்க்கும் வலதுசாரி சக்திகளின் கருத்தியலோடு ஒத்துப்போவதாகத் தெரிவிக்கின்றார்.

பா.ஜ.க-வின் 'பினாமி'யாகச் சீமான் செயற்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தாலும், விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. திராவிடக் கட்சிகளையும் பெரியாரையும் கடுமையாக விமர்சிக்கும் சீமான், இந்துத்துவா அரசியலை அரிதாகவே விமர்சிக்கின்றார் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியிலும், சில விடயங்களில் தனது கட்சியைச் சமூக முற்போக்குக் கட்சியாகச் சீமான் காட்ட முயல்கின்றார். இவரது வேட்பாளர் பட்டியலில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பிற சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களையும் அவர் நிறுத்தியுள்ளார்.

அதேவேளை, "தமிழரைத் தமிழரே ஆள வேண்டும்" என்ற அவரது முழக்கம், மொழி ரீதியான பாகுபாட்டை உருவாக்குமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல தலைமுறைகளாக வாழும் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி பேசும் மக்களை இத்தகைய பேச்சுக்கள் அந்நியப்படுத்தக்கூடும் என விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.

சீமானின் தேசியவாத முழக்கம் ஒரு விசுவாசமான ஆதரவுத் தளத்தை உருவாக்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் திடீர் அரசியல் பிரவேசம் அரசியல் களத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் செல்வாக்குமிக்க நட்சத்திரங்களில் ஒருவரான விஜய், 'தமிழக வெற்றி்க் கழகம்' (TVK) என்ற புதிய அரசியல் மாற்றத்தை வழங்கப் போவதாக உறுதியளித்துள்ளார். இளைய வாக்காளர்களிடையே அவருக்கு இருக்கும் செல்வாக்கு அபரிமிதமானது. அவரது பரந்துபட்ட ரசிகர் மன்றங்களே தற்போது ஒரு அரசியல் ஆதரவுத் தளமாக மாறியுள்ளன.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டின் மீதும் அதிருப்தியடைந்துள்ள வாக்காளர்கள், விஜய்யை ஒரு புதிய தெரிவாகப் பார்க்கின்றனர். இருப்பினும், சீமானைப் போலன்றி விஜய் ஒரு உள்ளடக்கிய (Inclusive) அரசியல் செய்தியைக் கொண்டுள்ளார். தற்போதைய தி.மு.க அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராகத் தனது பிரச்சாரத்தில் இணையுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

விஜய்யின் அரசியல் அடையாளங்களில் பெரியார் மற்றும் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் உருவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இது திராவிட அரசியலின் சமூக நீதி மொழியோடு ஒத்துப்போகின்றது. அவர் தி.மு.க-வை தனது அரசியல் எதிரியாகவும், பா.ஜ.க-வை தனது கொள்கை எதிரியாகவும் அறிவித்துள்ளார்.

எனினும், விஜய்யின் இயக்கத்திற்கு இன்னும் தெளிவான ஒரு கொள்கை கட்டமைப்பு இல்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர். அவரது ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் அனுபவம் வாய்ந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் அல்ல, மாறாக ரசிகர்கள் மாத்திரமே. இவர்களது ஆர்வம் ஒரு கட்டமைப்புடைய அரசியல் திட்டத்தை விட, சினிமா நாயகன் மீதான வழிபாட்டு முறையிலேயே தங்கியுள்ளது.

அரசியல் ஆய்வாளர் ஜி. பழனித்துரை எச்சரிக்கையில்; இவ்விரு இயக்கங்களுமே தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றன. அதாவது, பலமான நிறுவனக் கட்டமைப்பிற்குப் பதிலாக, ஒரு தனிப்பட்டத் தலைவரைச் சுற்றி இயங்கும் 'ஆளுமை சார்ந்த' (Personality-driven) கட்சிகளின் எழுச்சியாகவே இது காணப்படுகின்றது. பல்கலைக்கழகங்கள் மற்றும் சமூக நிறுவனங்களில் அரசியல் ஈடுபாடு குறைந்துள்ளமையால், இளைஞர்கள் பாரம்பரிய அரசியலுக்கு வெளியே மாற்றுகளைத் தேடுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தச் சூழல் தமிழக அரசியலில் ஒரு நிலையான மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. திராவிடக் கட்சிகளிடம் இன்றும் வலுவான அடிமட்டக் கட்டமைப்புகள் மற்றும் ஆழமான கொள்கை ஆதரவு தளம் உள்ளது. இருப்பினும், விஜய் மற்றும் சீமான் ஆகியோரின் எழுச்சி, ஒரு காலத்தில் நிலையானதாகக் காணப்பட்ட அரசியல் முறையில் புதிய பதற்றங்களை உருவாக்கியுள்ளது.

'பிரண்ட்லைன் இந்தியா' அவதானித்தபடி, இவ்விரு தலைவர்களும் நீண்டகால அரசியல் கதையாடல்களைச் சவாலுக்கு உட்படுத்துவதுடன், ஒரு அமைதியற்ற இளைய தலைமுறை வாக்காளர்களின் ஆதரவிற்காகப் போட்டியிடுகின்றனர். திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை இவர்களால் உடனடியாக உடைக்க முடியாவிட்டாலும், இவர்களது வரவு தமிழகத்தின் அரசியல் விவாதங்களை ஏற்கனவே மாற்றியமைக்கத் தொடங்கிவிட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தமிழக இளையோர் வாக்குகள்: யாருக்குச் சாதகம்? | Tamil Leader | We Lead the Nation